ட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர்! – ரமேஷ் கிருஷ்ணன் பாபு

உலகின் எல்லா அரசுகளுமே இறையாண்மையுடைய அரசுகளே. இந்த அரசுகளின் அடிப்படையே உரிமைகள்தான். அதாவது தனது நாட்டையும், மக்களையும் காக்கும் உரிமை. இந்த உரிமை இந்திய அரசிற்கும் உண்டு. முந்தையக் காலங்களில் அரசு தனது உரிமையை நிலைநாட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எடுத்துக்காட்டாக, வேப்ப மரமும், மஞ்சளும் தங்களது என அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமைக் கோரிய போது இந்திய அரசு சர்வதேச அளவில் போராடி வென்றது. அதே போல கோயில் சிலைகளைக் கடத்தும் வழக்குகளிலும் இந்தியாவைத் தவிர வேறெங்கும் கோயில்கள் இல்லை எனவே இச்சிலைகள் இந்தியாவிலிருந்தே கடத்தப்பட்டுள்ளன என வாதாடி வெல்வது வாடிக்கை. இப்படி ஒரு புறம் போக இப்போதைய நவீன தொழில்நுட்பக் காலத்தில் இணையதளங்களின் பயன்பாடு இந்திய அரசிற்கு சவால் விடும் வகையில் அமைந்து வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்கள் தங்களின் வரையறை என்ன என்பதைப் பற்றி சிறிதும் அக்கறைக் கொள்ளாது கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில் தாராளவாத அணுகுமுறையை மேற்கொள்வது எல்லா நாடுகளுக்கும் பொருந்தாது. ஒவ்வொரு நாட்டின் அரசியல், சமூக-பொருளாதார நிலைமைகள் ஏற்கனவே கொந்தளிப்பாக இருக்கும் போது அதைத் தணிப்பதற்கு பதிலாக அதிகப்படுத்தும் போக்கை பலமுறை உலகம் பார்த்துவிட்டது.
தற்போது நம் உள்ளங்கைக்குள் வந்து விட்ட தொழில்நுட்பத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம். கேமிரா செல்ஃபோன் வந்த போது பெண்களின் அந்தரங்க செயல்களை படம் எடுப்பது, அதைப் பரப்புவது என்பது அதிகரித்தது. சமூக வலைத்தளங்கள் துவங்கிய போது அதையும் தவறாக பயன்படுத்தத் துவங்கினர். ஏன் கூகுள் தேடல் பொறியை ஆபாசப் படங்கள் பார்க்கும் வசதியாகவே நினைத்த காலக்கட்டம் இரண்டு அல்லது மூன்றாண்டு களுக்கு முன்பு வரை நீடித்ததே? எனவே வரையறைகளோ, கட்டுப்பாடுகளோ கூடாது என்பது பொருத்தமற்ற வாதம். ஆனால், அரசமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவது அரசிற்கும் சரி, சமூக ஊடகங்களுக்கும் சரி வரையறை மீறிய செயல்பாடே.
இந்த அடிப்படையில்தான் சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகள். பல்வேறு காலகட்டங்களில் பொய் செய்தியைப் பரப்புவதற்கும், அதைத் தடுப்பதற்குமே அரசிலும் சரி, சமூக ஊடகங்களின் அதிகாரிகளுக்கும் சரி பெரும்பாடாகவே இருந்துள்ளது. இதையடுத்தே மத்திய அரசு டிஜிட்டல் ஊடகங்களுக்கு புதிய விதிகளை வகுத்துள்ளது. ஆனால், இது போன்ற நடவடிக்கைகளை மேலை நாடுகளிலிருந்து இந்தியாவில் செயல்படும் சமூக ஊடகங்கள் விரும்புவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை இது போன்ற முயற்சிகள் கருத்துரிமைப் பறிப்பாகும். இதில் அரசியல் இல்லாமல் இல்லை. மோடி எதிர்ப்பு என்பதை தினசரி நடவடிக்கையாக வைத்துள்ள அரசியல் கட்சி சார்ந்த, சாராத பிரபலங்கள் உட்பட பலருக்கு சமூக ஊடகங்கள் பெரும் வரப்பிரசாதம். இதை அவர்கள் 2014 ஆம் ஆண்டு முதலே செய்து வந்தாலும் 2016 பண மதிப்பிழப்பு, 2017 ஜி எஸ் டி , 2019 குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றிற்குப் பிறகு மிகப் பெரிய அளவில் செய்து வருகின்றனர்.
இவ்வளவு ஏன் கொரோனா நடவடிக்கைகளை திறம்படவே இந்தியா கையாண்டுள்ளது. குறைபாடுகள் உள்ளன. ஆனால் குறைபாடுகளைக் களைய உதவுவதை விட அவற்றை பெரிதுபடுத்தி அரசு நடவடிக்கைகளை குலைக்கும் நோக்கத்துடனேயே பலரும் செயல்பட்டனர். இந்நிலையில்தான் அரசு விதிகளை வகுத்து வெளியிட்டுள்ளது. இவ்விதிகளை ஃபேஸ்புக் நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனத்தின் கிளை நிறுவனமான வாட்ஸ் அப்பின் தரவுகளை ஃபேஸ்புக் பயன்படுத்திக் கொள்ளும் எனும் விஷயத்தில் இந்திய அரசுடன் அதற்கு மோதல் இருந்து வருகிறது. அதற்கொரு வழக்கும் இருக்கிறது. இந்நிலையில் அரசுடன் மோதாமல் இப்போது பணிவது என்ற உத்தியை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்த விதிகளை ஏற்பது பற்றி டிவிட்டர் நிறுவனம் கால அவகாசம் கோரியுள்ளது.
கூடவே அரசை சீண்டுவது போல முறையான, உண்மையான கணக்குகளை சரிபார்த்து அங்கீகாரம் வழங்கும் ப்ளூ டிக் முறையை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரின் கணக்குகளிலிருந்து ஒரு நாள் காலை நீக்கியது டிவிட்டர். கோபமடைந்த இந்திய அரசு துணைக்குடியரசுத் தலைவரின் கணக்கை போலி என்பது போல நடத்துவது சரியல்ல என்று கண்டனம் தெரிவித்தது. அதே போல ஆர் எஸ் எஸ் சும் கருதியது. பின்னர் அந்த ப்ளூ டிக்குகள் மீண்டும் இடம் பெற்றன. இதற்கு விளக்கம் அளித்த டிவிட்டர் ஆறுமாதங்களாக எவ்வித செயல்பாடுகளும் அற்ற கணக்குகளிலுள்ள ப்ளூடிக்குகளே நீக்கப்பட்டதாகவும், விஷயத்தின் தீவிரவத்தை ஒட்டி அவை மீண்டும் இடம் பெற்றுள்ளன என்றும் கூறியது. இது அரசு சார்பானவர்களுக்கு மட்டும் நிகழவில்லை. பிரபல ஆங்கில இதழான அவுட்லுக்கின் ஆசிரியர் ரூபன் பானர்ஜிக்கும் நிகழ்ந்தது. அவர் இது குறித்து டிவிட்டரிடம் விசாரித்த போது எங்களது தர விதிகளுக்கு உட்பட்டு இல்லாததால் உங்கள் கணக்கிற்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றுள்ளது. அவர் இதையடுத்து கட்டுரை ஒன்றை எழுத இப்போது அவரது கணக்கிற்கு ப்ளூடிக் வழங்கப்பட்டுள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் முன்னாள் பாஜக அமைச்சர்களான அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் கணக்குகளின் ப்ளூடிக் அவர்கள் காலமாகி நீண்ட நாட்களுக்குப் பிறகும் நிலைத்திருந்ததேயாகும். இப்போதும் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் இறந்தவர்களின் கணக்குகள் நீக்கப்படாமலே உள்ளன. இத்தனைக்கும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பதிவுகளும் ஃபேஸ்புக்கிலேயே இருக்கின்றன. ப்ளூ டிக்கை நீக்குவதற்கு பதிலாக கணக்கில் செயல்பாடுகள் இல்லையென்றால் கணக்கையே அல்லவா நீக்க வேண்டும்? இல்லையென்றால் ப்ளூ டிக்கிற்கு பதிலாக ரெட் டிக்கை இட வேண்டும். இது கணக்கு வைத்திருப்பவர்களை எச்சரிக்கும்.
எனவே வரையறை அற்ற நடவடிக்கைகளை அனுமதிப்பது என்பது இறையாண்மைக்கு இழுக்கு. சீனா போன்ற நாடுகள் சமூக வலைத்தளங்களை தடை செய்துள்ளதும் இது போன்ற காரணங்களால்தான். அந்நாடுகள் ஜனநாயக நாடுகள் அல்ல. ஆனால் இந்தியா போன்ற முதிர்ந்த ஜனநாயக நாடுகளில் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளை தவறாக பயன்படுத்துவது அல்லது அதை அனுமதிப்பது என்பது நாட்டிற்கு நல்லதல்லவே?