ரஜினி சொன்ன ரத்தமும் கடவுளும்!

ரஜினி சொன்ன ரத்தமும் கடவுளும்!

வ்வளவு சைண்டிஸ்ட்ஸ் இருக்காங்க. ஒரே ஒரு டிராப் பிளட் உருவாக்க முடியுமா இவங்களால? அப்படி இருந்தும் “கடவுள் இல்லை”ன்னு சில பேர் பேசிக்கிட்டு இருக்காங்க. அதை நினைச்சி அழுகறதா சிரிக்கறதான்னு தெரியலை!’ என்று ரஜினிகாந்த் பேசிய வீடியோ துணுக்கைப் பார்த்தேன். என்ன சொல்ல வருகிறார்? மனிதனால் ரத்தம் உருவாக்க இயலாது என்பதால் கடவுள் இருப்பது நிஜம். இதுதான் அவர் முன்வைக்கும் வாதம். ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதை கடவுளைக் காட்டித்தானே நிரூபிக்க வேண்டும்? கடவுளின் லீலைகளை நேரடியாக சில விஷயங்களில் demonstrate செய்வதுதானே கடவுளின் இருப்பை நிரூபிக்கும் வழி? அறிவியல் அப்படித்தானே செய்கிறது? தான் முன்வைக்கும் தியரிகளுக்கு நிரூபணம் கொடுக்கும் முயற்சியை அறிவியலாளர்கள்தானே மேற்கொள்கிறார்கள்? அதை விட்டு விட்டு ‘உன்னால் அது செய்ய முடியுமா, இது செய்ய முடியுமா? முடியாது இல்லையா? எனவே கடவுள் இருக்கிறார்!’ என்பது என்ன வகையான வாதம்? சரி, அவர் கேட்டதற்கே வருவோம். மனிதனால் ரத்தம் உருவாக்க முடியுமா என்று கேட்கிறார். அதற்கு பதில்: முடியும்.

செயற்கை ரத்தம் குறித்த ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகின்றன. இவற்றில் ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றமும் வந்திருக்கிறது. ஏற்கனவே விலங்குகளுக்கு வழங்கும் ரத்தத்தில் செயற்கை ரத்தம் அனுமதி பெற்று பயன்பாட்டில் இருக்கிறது. Oxyglobins என்று இதனை அழைக்கிறார்கள்.[1] மனிதர்களுக்கு பயன்படும் செயற்கை ரத்தத்தை Hemoglobin-Based Oxygen Carriers அல்லது Perfluorocarbon (PFC) என்று வகைப்படுத்துகிறார்கள். [2] எண்பதுகளில் இருந்து இந்த செயற்கை ரத்த ஆராய்ச்சிகள் பல்வேறு கட்டங்களில் நடந்து வருகின்றன. Perftoran, Hemopure போன்றவை ரஷ்யா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் அனுமதியும் கூடப் பெற்றுள்ளன. பத்துக்கும் மேற்பட்ட செயற்கை ரத்த தயாரிப்புகள் ஆய்வின் இறுதிக் கட்டங்களில் உள்ளன. [3] இதே வேகத்தில் இன்னும் 5 முதல் 15 வருடங்களில் இவற்றில் பல தயாரிப்புகள் அனுமதி பெற்று விடும். இந்தியாவிலும் கூட அவை பயன்பாட்டுக்கு வந்து விடும். ரஜினிகாந்த்துக்கே கூட அப்போது ஒருவேளை ரத்தம் தேவைப்பட்டால் அவருக்கு Oxycyte அல்லது Engineered Hemoglobinஐ மருத்துவர்கள் செலுத்த வாய்ப்பிருக்கிறது.

அப்படி நடக்கும் போது தனது இந்த உரையை அவர் நினைவுபடுத்திக்கொள்வார் என்று நம்புகிறேன். ஆனால் அப்படி செயற்கை ரத்தம் சந்தைக்கு வந்த பின்னும் கடவுள் குறித்து எதையும் அது நிரூபிக்கவோ, மறுதலிக்கவோ செய்யாது. காரணம், ரஜினி போன்றவர்கள் அப்போதும் கடவுள் இல்லை என்று சொல்லப் போவதில்லை. ‘சரி, ரத்தத்தை விடு. செயற்கை இதயத்தை உருவாக்கினாயா?’, ‘செயற்கை நகத்தை செய்தாயா?’ என்று கேள்வியை மாற்றிக் கேட்டுக் கொண்டுதான் கடக்கப் போகிறார்கள்.

இப்படித்தான், கடந்த 150 ஆண்டுகளாக மதங்களின் ஒவ்வொரு ஃபர்னீச்சராக அறிவியல் உடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. மதங்களும் சலிக்காமல் அந்தக் கால கட்டத்தில் அறிவியலுக்குக் கைவராத விஷயம் எதையாவது சுட்டிக் காட்டிக் கொண்டு, ‘பாத்தியா, கடவுள் இருக்காரு கொமாரு!’ என்று கடவுளை நிறுவிக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள்.

கடைசியாக, அறிவியல் இதை செய்ததா, அதை செய்ததா என்று கேட்கிறீர்களே, நான் கேட்கிறேன்: கடவுள் என்ன செய்தார் என்று நீங்கள் சொல்லுங்கள்: மானுட ஆயுளை நீட்டிக்க ஏதாவது ஆணியைப் பிடுங்கினாரா? வறுமையை ஒழிக்க ஏதாவது செய்தாரா? சாதி, மத, இன பேதங்களைக் களைய கடந்த 2,000 வருடங்களில் என்னென்ன அறுத்துத் தள்ளினார்? பஞ்சங்கள் போக கலப்பு விதை எதையாவது தனது தூதர்கள் மூலம் அனுப்பி வைத்தாரா? பெண்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள் போன்றோர் ஒடுக்கப்படுவதை தடுக்க ஏதாவது திட்டங்கள் கொடுத்து அனுப்பினாரா? கல்வியை பரவலாக்க ஏதாவது ஐடியாக்களை புனித நூல்களில் விட்டுச் சென்றாரா? தகவல் தொழில் நுட்பங்களை பரவலாக்க, மானுடர்களின் பயணங்களை இலகுவாக்க ஏதாவது கருவிகளை கொடுத்து அனுப்பினாரா?

இவற்றை எல்லாம் சாதித்துக் காட்டியது நவீன அறிவியல் மற்றும் நவீன செக்யூலரிசம் . இன்றைக்குக் கூட உலகம் வெப்பமயமாதலுக்கு கடவுளிடம் ஏதாவது தீர்வுகள் உள்ளனவா? இன்றளவும் விடை புரிபடாமல் அறிவியல் திணறிக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு கடவுளிடம் அல்லது மதகுருமார்களிடம் ஏதாவது விடைகள், சமன்பாடுகள் உள்ளனவா? இல்லை. இவற்றையும் தீர்க்கப் போவது அறிவியல்தான்.

அப்படியானால், கடவுளர்கள் என்னதான் கழட்டி மாட்டி இருக்கிறார்கள்? ‘என் முன் தினமும் ஐந்து வேளை மண்டியிடு. எனக்கு ஆறு காலப் பூஜைகள் செய்! எனக்கு அந்த விலங்கை பலியிடு. எனக்கு இந்தந்த பண்டங்களை நைவேத்தியம் செய். என் சிலைக்கு அந்த ஸ்பெஷல் பூவைப் போட்டு பூஜை செய். எனக்காக பட்டினி இரு, எனக்காக தேரை இழு, எனக்காக ஞாயிறு அதிகாலை எழுந்து என் கோயிலுக்கு வா! எனக்கு நிகராக வேறு யாரையும் வைத்து வணங்கி விடாதே, எனக்குக் கோபம் வந்து விடும்!’… என்றெல்லாம் தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருந்ததைத் தவிர மானுட குலத்துக்கு உருப்படியாக வேறு எந்த ஆணிகளை கடவுளர்கள் கடந்த 3000 ஆண்டுகளாக பிடுங்கி வந்திருக்கிறார்கள்?

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

error: Content is protected !!