டிக் டாக் செயலிக்கு தடையா? ரொம்ப தப்பு!- எதிர் குரல் கொடுக்கிறார் கணினி செல்வமுரளி!
டிக் டாக் தடை செய்யப்பட்டால் மகிழும் முதல் ஆள் தான்தான் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதே சமயம் ‘டிக்டாக் செயலியை தடை செய்தால் அது வேறு பெயரில் வரும், எனவே தமிழக அரசு ஏன் செல்போன்களையே தடை செய்யக் கூடாது என்ற கோரிக்கை வந்தால் என்ன செய்யும்’ என்று 2015ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற்றுள்ள செல்வ முரளி கேள்வி எழுப்புகிறார்.
‘டிக் டாக்’ எனும் ஆப் -பில் சினிமா பாட்டுக்கு ஆடிப் பாடுவது, டப்மேஷ் செய்வது, சினிமா வசனங்களைப் பேசுவது, சாகசத்தில் ஈடுபடுவது என பல்வேறு செயல்களை பதிவு செய்கின்றனர். ஜஸ்ட் ஃபன் என்ற பெயரிலான இந்த சீன தயாரிப்பான ‘டிக் டாக்’, ‘மியூசிக்கலி’ போன்ற செயலிகள் பலரது நேரத்தை ஆக்கிரமித்துள்ளன. சிலர் ‘டிக் டாக்’, ‘மியூசிக்கலி’ ஆப் போன்றவற்றை டவுன்லோடு செய்து அதையே முழுநேரமும் பார்த்து பொழுதைக் கழிக்கின்றனர். ‘டிக் டாக்’, வாட்ஸ் அப்களில் ஸ்டேட்டஸ் பதிபவர்கள் அதன் காரணமாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது. அவர்கள் வீடியோ மார்பிங் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்தச் செயலியில் நேரத்தைக் கழிப்பவர்கள் அவர்களது கவனச்சிதறல் காரணமாக படிப்பு, வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் தோல்வியைத் தழுவுகின்றனர். மேலும் நாளுக்கு நாள் இச்செயலி ஆபாசத்தின் உச்சகட்டமாகச் சென்று கொண்டிருக்கிறது. இது குறித்து பலரும் ஆட்சேபித்து வரும் நிலையில் சட்டப்பேரவையிலும் இது இன்று எதிரொலித்தது.
சட்டப்பேரவை விவாதத்தில் கலந்துகொண்ட மஜக உறுப்பினர் தமீமுன் அன்சாரி இது குறித்துப் பேசினார். ” ‘டிக் டாக்’ செயலி கலாச்சாரத்திற்குச் சீரழிவு ஏற்படுத்தும். சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும். மாணவர்கள், கல்லூரி மாணவ மாணவியர், இளம்பெண்கள், குடும்பப் பெண்கள் அனைவரிடமும் ‘டிக் டாக்’ அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆபாசத்தின் வடிவமாக வீடியோக்கள் பதிவு செய்யப்படுகின்றன.
பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்கள் கல்வி பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தடை செய்யவேண்டும் என பல அரசியல் கட்சித் தலைவர்களும் தடை செய்யக் கோரி வருகின்றனர். இந்நிலையில் கலாச்சாரச் சீரழிவுக்கு வழிவகுக்கும் இத்தகைய ‘டிக் டாக்’ செயலியைத் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா?” என தமீமுன் அன்சாரி கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன், ” ‘டிக் டாக்’ செயலி எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து அவர்களை தொடர்புக் கொண்டு தடை விதிக்க முயற்சி எடுக்கப்படும். ப்ளூவேல் என்கிற விளையாட்டு பலரையும் பாதித்தபோது அதுகுறித்துப் பேசி அந்த சர்வர் அமெரிக்காவில் இருப்பதை அறிந்து தடை செய்ய வைத்தோம். அதேபோன்று ‘டிக் டாக்’ செயலியின் தலைமையிடத்தில் தொடர்புகொண்டு மத்திய அரசின் உதவியுடன் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், “டிக் டாக் ஆப் தடை செய்யப்பட்டால் மகிழும் முதல் ஆள் நான்தான். அதை கண்டிப்பாக நான் வரவேற்பேன். டிக் டாக்கில் தேவையில்லாமல் பலரை கிண்டல் செய்கிறார்கள். எங்களை போன்ற அரசியல்வாதிகளை, பிரபலங்களை இந்த ஆப் மூலம் கிண்டல் செய்கிறார்கள். இதனால் அந்த ஆப்பிற்கு தடை விதிப்பது சரியான முடிவாகவே இருக்கும்” என்றார்.
ஆனால் கனிணி பொறியாளர் செல்வ முரளி, “எந்த ஒரு செயலியும் நல்நோக்கத்தில் தான் உருவாக்கப்படுகின்றன, அதை நல்ல விதமாக பயன்படுத்துபவர்கள் நல்ல விதமாக பயன்படுத்துகின்றனர், கெட்டவிதமாக பயன்படுத்துபடுவர்கள் அப்படி பயன்படுத்துகிறார்கள், அதற்காக செயலியை தடைசெய்யக்கூடாது, செயலியை தடை செய்வதை விட்டுவிட்டு usage policy என்று கொண்டுவரலாம், ஆபாசம் என்றால் என்ன என்பதை வரையறுத்துவிட்டு இந்த வரையறை தாண்டினால், புகார் அளித்தால் அதை தொடர்ந்து மட்டுறுத்த வேண்டும், நீக்ககூடாது, தவறை சரி செய்ய செயலிக்கும், செயலி பயன்பாட்டார்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இப்படி ஒரு கோரிக்கை வந்தால் யாரும் தமிழ்நாட்டில் முதலீடு செய்யமாட்டார்கள், ஏற்கனவே என்னைப் போன்றவர்களுக்கு முதலீடு கிடைக்காமல் அல்லாடும்போது இதுபோன்ற செயலிகளை தடை செய்வது, தமிழகத்தில் முதலீடு என்ற எண்ணமே இல்லாமல் போய்விடும்
அரசுக்கு ஆலோசனை கொடுப்பவர்கள் எதிர்காலமறிந்து ஆலோசனை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்