பிளாக் – விமர்சனம்!
பிளாக் ஹோல் கான்செப்ட்டை வைத்து விஞ்ஞான ரீதியாக பிசிக்ஸ் பாடத்தில் குவாண்டம் தியரி சம்பந்தப்பட்ட விதியை மையமாக வைத்து இக்கதை உருவாக்கி இருக்கிறாராம் டைரக்டர் கே ஜி பாலசுப்பிரமணி. இதுவொரு புது அனுபவமாக அதே சமயம் குழப்பமாக இருக்கிறது. சயின்ஸ் பிக்சன் படமாக இருக்கும் நிலையில் புரொடியூஸர் அதற்கான பட்ஜெட் ஒதுக்காமல் கைக்குட்டைக்குள் கொஞ்சம் தொகையைப் போட்டு அனுப்பிய நிலையில் டீம் அதையே பட்ஜெட் என்று நம்பிக் கொண்டு காட்சிகளை படமாக்கி இருப்பது கான்செப்டின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டது. பலருக்கு இந்த படத்தை பார்க்கும்போது என்ன நடக்கிறது என்பதே புரியாமல் கூட போகலாம். ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்தால் கூட புரிவது மிகவும் கடினமே. பிசிக்ஸ் படித்தவர்கள் ஓரளவு புரிந்து கொள்ள அதுபற்றி தெரியாதவர்கள் பேய் படம் என நினைப்பார்கள்.
கதை என்னவென்றால் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும் வில்லா குடியிருப்பு ஒன்றில் எவருமே குடியேறாத நிலையில், ஜீவா – பிரியா பவானி சங்கர் ஜோடி தங்களது விடுமுறை நாட்களை கழிப்பதற்காக அங்கிருக்கும் வீடு ஒன்றில் குடியேறுகிறார்கள். அந்த வில்லா வீட்டுக்குள் வந்த சில நிமிடங்களில் அங்கிருந்த ஒரே ஒரு வாட்ச்மேன் திடீரென்று காணாமல் போக, மின்சாரமும் கட் ஆகி விடுகிறது. ஜெனரேட்டரை ஆன் செய்வதற்காக ஜீவாவும், பிரியா பவானி சங்கரும் வெளியே வந்து மீண்டும் வீட்டுக்குள் நுழையும் போது, அவர்கள் எதிர் வீட்டில் திடீரென விளக்குகள் எரிகிறது. யாரும் இல்லாத வீட்டில் எப்படி விளக்குகள் எரிகிறது என்ற யோசனையோடு இருவரும் அந்த வீட்டின் அருகே சென்று பார்க்கும் போது, இவர்களது வீட்டுக்குள் இருக்கும் பொருட்கள் போலவே அந்த வீட்டுக்குள்ளும் இருப்பதோடு, அந்த வீட்டுக்குள் இவர்களைப் போலவே உருவம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். இதைப் பார்த்து ஷாக் ஆகும் இருவரும் இதெல்லாம் நிஜமா? கற்பனையா? என்று குழப்பமடைகிறார்கள். ஆனால் ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்பதை உணர்ந்து அங்கிருந்து வெளியேற முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் அது முடியாமல் போவதோடு, தொடர்ந்து அவர்களை சுற்றி ஏகப்பட்ட மர்மமான சம்பவங்கள் அரங்கேறுகிறது. அதன் பின்னணி என்ன? என்பதை முன்னரே சொன்ன அறிவியலையும், ஏதோ தியரியையும் சேர்த்து குழப்பி சொல்லி இருப்பதுதான் ‘பிளாக்’-காம்.இது 2013-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான `கோஹரன்ஸ்’ (Coherence) என்ற ஹாலிவுட் படத்தின் சில மாற்றங்களுடன் உருவான அதிகாரபூர்வ ரீமேக்காம்!.
மீடியாக்களிடன் அறிவிருக்கா என்று கேட்ட ஜீவாவுக்கு இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம்.படம் முழுக்க குழப்பமும் பயமும் பதட்டமுமாகவே இருக்கவேண்டும்.கூடவே மனைவி இருப்பதால் தைரியமாக இருந்தாக வேண்டும்.அவற்றை அரைகுறையாக புரிந்து சமாளித்து விடுகிறார். நாயகி பிரியா பவானிசங்கர் ஏற்கெனவே பயப்படும் ரோலில் ஏகப்பட்ட படங்கள் நடித்து சலித்து விட்ட அலுப்பு தெரிகிறது.
சாம்.சி.எஸ் பின்னணி இசை பர்ஃபெக்ட்.. பார்வையாளர்களை பின்னணி இசை மூலம் பயமுறுத்த தேவையில்லாத சத்தங்களை சேர்க்காமல் சில குறிப்பிட்ட பீஜியம் மூலம் திரைக்கதையில் இருக்கும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்து சமாளித்து விடுகிறார்.
ஜஸ்ட் இரண்டு கேரக்டர்களை மட்டுமே சுற்றி நடக்கும் கதையாக இருந்தாலும், அதை பலமான பாமர ரசிகனுக்கும் புரியும் விதமான திரைக்கதை மூலம் டைரக்டர் கே.ஜி.பாலசுப்ரமணிநகர்த்திச் செல்வதில் அக்கறை காட்ட தவறி விட்டார்..திகில் படமா? அல்லது திரில்லர் படமா? என்று ரசிகர்களை யோசிக்க வைக்கும் டைரக்டர் இடையில் டைம் லூப் ஜானரை வேறு இணைத்து பார்ப்போரை குழப்பி விடுவதில் ஜெயித்து விடுகிறார்.
மொத்ததில் நம் வாழ்க்கையில் தற்போது நாம் சந்திக்கும் மாற்றங்களுக்கு அறிவியல் தான் காரணம் பெரும்பாலானோருக்கு தெரியும். ஆனாலும் பொழுது போக்கு ஊடகங்களில் ஒன்றான சினிமாவில் குவாண்டம் பிசிக்ஸ் என்பதின் அடிப்படை தெரிந்தவர்களுக்காக மட்டும் உருவாக்கியுள்ள இப்படத்தை கொஞ்ச்ம் கூட ரசிக்க முடிவில்லை.
மார்க் 2/5