என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்பதா? – கமல் & கோவுக்கு வானதி கேள்வி!

என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்பதா? – கமல் & கோவுக்கு  வானதி கேள்வி!

“கமல் & கோ என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்கிறார்கள் என்றால், பெண்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? ஒரு பெண் சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்து, அரசியலில் உயர்ந்து வரும்போது, இப்படித்தான் கேவலப்படுத்துவார்களா?” என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து அண்மையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ”மக்களுடைய பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், ஆட்சி நிர்வாகம் பற்றிய புரிதல் தொடர்பாக வானதி சீனிவாசனுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விவாதம் செய்யத் தயாரா?” என்று சவால் விடுத்தார். இதற்குப் பதிலளித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கே.குமாரவேல் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ”முதலில், பிரதமர் மோடியுடன் விவாதம் செய்ய கமல் விரும்புகிறார். அதையடுத்து, நிதியமைச்சர் நிர்மலா, அடுத்தடுத்து பாஜக அமைச்சரவையினர் ஒவ்வொருவருடனும் விவாதம் செய்துவிட்டு கடைசியாக துக்கடா தலைவர் வானதி சீனிவாசனுடன் விவாதத்தை வைத்துக்கொள்ளலாம். ஏற்கெனவே, இருமுறை தேர்தல்களில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு இப்போது 3-வது முறையாக தோற்க தயாராகி இருப்பவர் வானதி சீனிவாசன். ஆளுமை இல்லாத அவரோடு விவாதிக்க எங்கள் மாணவர் அணியினர் போதும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஒவ்வொரு பெண்ணும் கஷ்டப்பட்டுதான் வாழ்க்கையில் முன்னேறி வருகிறார், இப்படி முன்னேறி பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களுக்கு இவர்கள் வைக்கும் விமர்சனம் இதுதான் என்று கூறினால், நீங்கள் பெண்களுக்குக் கொடுக்கும் மரியாதை இதுதானா என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ”மத்தியில் அரசை அமைத்திருக்கும் கட்சி, பல்வேறு மாநிலங்களில் ஆளுகின்ற கட்சி. அந்தக் கட்சியில் இருக்குக்கூடிய அத்தனை பெண்களுக்கும், அகில இந்தியத் தலைவரான பிரதமர் நரேந்திர மோடியும், எங்கள் கட்சித் தலைமையும் இந்த ஊர் பொண்ணு, உங்க ஊர் பொண்ணுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், கமல் ஆரோக்கியமான அரசியல் விவாதத்தை வானதியோடு நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சொன்னதற்கு என்னை துக்கடா அரசியல்வாதி என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. நான் இங்குதான் ஓர் கிராமத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, வழக்கறிஞர் தொழில் செய்து வந்திருக்கிறேன். எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

நான் எவ்வளவோ நேரம் குடும்பத்தை விட்டு, மக்களுக்கான சேவையின் என்னை அர்ப்பணித்திருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக இந்தத் தொகுதி மக்களுக்கு நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் என்று, என்னுடைய சமூக ஊடகங்களைப் பாருங்கள். ஆனால், என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்கிறார்கள் என்றால், பெண்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா?

ஒரு பெண் சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்து, அரசியலில் உயர்ந்து வரும்போது, இப்படித்தான் கேவலப்படுத்துவார்களா? நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் இந்தக் கஷ்டங்கள் இருக்கும். ஒவ்வொரு பெண்ணும் கஷ்டப்பட்டுதான் வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்.

இப்படி முன்னேறி பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் மீது இவர்கள் வைக்கும் விமர்சனம் இதுதான் என்று கூறினால், பெண்களை இவர்கள் காப்பாற்றுவார்களா? பெண்கள் நலனில் அக்கறை செலுத்துவார்களா?, மக்கள் நீதி மய்யமும், கமலும் இதற்குப் பதில் சொல்லட்டும். நான் உங்கள் முன்னால் இந்தக் கேள்வியை வைக்கிறேன்” என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Related Posts