June 2, 2023

பாஜக டார்கெட் தி.மு.க. அல்ல.. அதிமுக!?

மோடி, யோகி, அமித் ஷா பிரச்சாரம், கல்வீச்சு, கலவரம், அண்ணாமலையின் வன்முறை பேச்சு, ஸ்டாலின் மகள் வீட்டில் ரெய்டு இவை எல்லாமே தி.மு.க.வுக்கு சாதகமான விஷயங்கள் என்றும் தங்களுக்கு படுதோல்விக்கே வழிவகுக்கும் என்பதும் பாஜகவுக்கு நன்றாக தெரியும். அவர்களின் டார்கெட் தி.மு.க. அல்ல. அ.தி.மு.க தான்.

அ.தி.மு.க. vs தி.மு.க என்று தொடங்கிய தேர்தல் பிரச்சாரம் இப்போது தி.மு.க vs பா.ஜ.க. என்று மாறி இருக்கிறது. அ.தி.மு.க.வில் அமைச்சர்களை கூட தொகுதிக்குள்ளேயே முடக்கி விட்டார்கள். எடப்பாடி மட்டுமே மாநிலம் முழுக்க சுற்றுகிறார். இனி அ.தி.மு.க. முழு அழிவை நோக்கி நகரும்.

உண்மையில் அ.தி.மு.க.வை காப்பாற்ற எடப்பாடியின் கைகளில் வாய்ப்பு இருந்தது. ஆட்சியில் இருக்கும்போது பாஜக தயவு தேவை. சரி, ஆனால் தேர்தல் நெருங்கும் சமயம் கழட்டி விட்டு இருக்கலாம். பாஜகவின் நெருக்கடியா, இல்லை டெல்லியில் இருந்து தரப்பட்ட தேர்தல் வாக்குறுதியா (வெற்றியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்ற சத்தியம்), இல்லை கட்சி ஓபிஎஸ் பக்கம் போய்விடக்கூடாது என்ற எண்ணத்திலோ எடப்பாடி பாஜக கூட்டணிக்கு சம்மதித்து இருக்கலாம்.

பாஜகவை கழட்டிவிட்டு சசிகலாவை அனுசரித்து சென்றிருந்தால் கட்சி காப்பாற்றப்பட்டு இருக்கும். ஆ.ராசா பேச்சை வைத்து அதிமுகவினரை விட அதிகமாக அரசியல் செய்தது பா.ஜ.க. தான்.

அ.தி.மு.க அழிக்கப்பட வேண்டிய கட்சி அல்ல. பா.ஜ.க. தான் விரட்டப்பட வேண்டிய கட்சி. மாநில கட்சிகளை தேசிய கட்சிகள் கபளீகரம் பண்ணுவது ஜனநாயகத்துக்கும் மாநில உரிமைகளுக்கும் ஆபத்தானது.

ராஜீவ்காந்தி