பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் அதிக மக்கள்!- நிதி ஆயோக் தகவல்!

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் அதிக மக்கள்!- நிதி ஆயோக் தகவல்!

ண்டுதோறும் நிதி ஆயோக்கின் வறுமைக் குறியீடு அறிக்கை வெளியிடப்படும். ஐநா மேம்பாட்டு திட்டம், ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து நிதி ஆயோக் ஆண்டுதோறும் வறுமைக்கோடு குறியீடு அறிக்கையை வெளியிடுகிறது. ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம் வயது இறப்பு, பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, பள்ளிப்படிப்பு ஆண்டுகள், பள்ளி வருகைப் பதிவேடு, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிப்பழக்கம், தண்ணீர், மின்சாரம், வீடு, சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் போன்ற 12 குறியீடுகளால் இது கணக்கிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக்கின் வறுமைக் குறியீடு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி, பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் ஆகியவை நாட்டின் ஏழ்மையான மாநிலங்களாக, முதல் 3 இடங்களில் இடம் பெற்றுள்ளன. வறுமை குறைந்த மாநிலமாக கேரளா உள்ளது.. இப்போதைய புள்ளிவிவர தகவலைப் பார்க்கும் போது பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் அதிக மக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் கிடைப்பது கூட இம்மாநில மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளதையும் பார்க்க முடிகிறது.

தற்போது வெளியான விவரத்தின்படி பீஹார் மாநிலத்தில் 51.91 சதவீதம் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.இதற்கு அடுத்த இடங்களில் 42.16 சதவீதம் மக்கள் ஜார்கண்ட்டிலும், 37.19 சதவீதம் மக்கள் உத்தரப்பிரதேசத்திலும் , 36.65 சதவீத மக்கள் ம.பி.,யிலும், 32.67 சதவீத மக்கள் மேகாலயாவிலும் வறுமையில் உள்ளனர் என்பது தெரியவந்தது.மேற்கண்ட மாநிலங்களிலும் மாநில பொருளாதார வளர்ச்சி மற்றும் மாநில வருவாய் மிகமிகக் குறைவாக உள்ளது.

அதே சமயத்தில் கேரளா, கோவா, தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் வறுமை கோட்டுக்குகீழ் வாழ்பவர்கள் 6 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.கேரளா 0.71 சதவீதம், கோவா 3.76 சதவீதம் , சிக்கிம் 3.82, தமிழகம் 4.89 சதவீதம் மற்றும் பஞ்சாபில் 5.59 சதவீதம் பேர் வறுமையில் உள்ளனர்.

யூனியன் பிரதேசங்கள் பொறுத்த வரையில், தத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் 27.36 சதவீதம் பேரும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் 12.58 சதவீதம் பேரும், டாமர் & டியூவில் 6.82 சதவீதம் சண்டிகரில் 5.97 சதவீதம் பேரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர். புதுச்சேரியில் 1.72 சதவீதம் பேரும், லட்சத்தீவில் 1.82 சதவீதம் பேரும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் 4.30 சதவீதம் பேரும், டில்லியில் 4.79 சதவீதம் பேரும் வறுமையில் வாடுகின்றனர்.

தாயார்கள் நலன், பள்ளிப்படிப்பை இழந்த மக்கள் தொகை சதவீதம், பள்ளி வருகை மற்றும் சமையல் எரிபொருள் மற்றும் மின்சாரம் இல்லாத மக்கள் தொகை சதவீதம் ஆகியவற்றிலும் பீஹார் மோசமான இடத்தை பிடித்துள்ளது.