இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக கார்செட்டி நியமனம் ; பைடன் பரிந்துரை!
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜோ பைடன், பல்வேறு துறைகளிலும் புதிய நியமனங்களை அறிவித்து வருகிறார். அந்நாட்டின் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் இருப்பது அனைவரும் அறிந்ததே. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய ஜோ பைடன், பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க கொரோனா தடுப்புக்கான மருந்து பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். இரு நாடுகளுக்கு இடையேயான உறவு நல்ல முறையில் இருந்து வரும் நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அதுல் கெஷாப் உள்ளார். சமீப காலமாக புதிய தூதரை நியமிப்பது குறித்து பைடன் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கார்செட்டியின் பெயரை அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்டில் உள்ள குயின்ஸ் கல்லூரியில் படித்த கார்செட்டி, லண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் கல்லூரில் பட்டம் பெற்றவர். லாஸ் ஏஞ்செல்ஸ் நகர மேயராக இருந்த கார்சிட்டி, மேற்கு ஹெமிஸ்பியரில் உள்ள உலகிலேயே மிகவும் பரபரப்பான கன்டெயர்னர் துறைமுகத்தை நிர்வாகம் செய்தவர். கடந்த 30 ஆண்டுகளில் மீண்டும் கோடைகால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்குப் பெற்றுக்கொடுத்தவர். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை ஏற்கக் கோரி அமெரிக்காவின் 400 மேயர்களை ஒருங்கிணைத்து காலநிலைக்கான மேயர் கூட்டமைப்பை கார்செட்டி உருவாக்கினார். உலகில் உள்ள 97 முக்கிய நகரங்கள் காலநிலை மாற்றத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன, அந்த நகரங்களின் கூட்டமைப்பின் தலைவராகவும் கார்செட்டி உள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் அமெரிக்க கடற்படையின் உளவுத்துறை அதிகாரியாகவும், பாதுகாப்புத்துறையின் உளவுப்பிரிவிலும் கார்செட்டி பணியாற்றி கடந்த 2017ம் ஆண்டு லெப்டினென்டாக ஓய்வு பெற்றார்
தற்போது கிடைத்துள்ள தூதர் பதவி குறித்து எரிக் கார்செட்டி கூறுகையில், ‘அதிபர் ஜோ பிடன் என்னை இந்தியாவுக்கான தூதராக பணியாற்ற நியமித்துள்ளார். அவரின் இந்த உத்தரவை நான் கவுரவத்துடன் ஏற்று பணியாற்றுவேன்’ எனத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.