“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்!

“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்!

ணப்பசியால் மதிமயங்கிக் கிடக்கும் மத்திய அரசு, மற்றொரு வரிவருவாய் வாய்ப்பை, மாநில அரசுகளிடம் இருந்து தட்டிப் பறித்துவந்துள்ளது. ஏற்கனவே மாநில அரசுகளின் வரி வருவாய் வசதிகள் அசதியைச் சந்திக்கின்றன. சிறுகச் சிறுக மாநில அரசுகளின் வருமான வழிகளை மத்திய அரசு, தன்பக்கம் திருப்பி விட்டு, மாநிலங்களை வற்றவைத்து, பற்றாக்குறையைத் தொற்ற வைத்து வருகிறது. இந்த நிலையில் இன்னுமோர் இன்னலை மாநில அரசுகள் சந்திக்கப் போகின்றன. மக்கள் சந்திக்கும் பிரச்னையைத் தீர்க்கப் போகிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு முன்வரும் மத்திய அரசு, இதையே பயன்படுத்தி மாநிலத்துக்கான வருமானத்தை வாரிச் சுருட்டிக் கொள்ளும் வதைமிகு கதைதான் அமலாக உள்ளது.

ஆம்.. “ஒரே நாடு” என்ற கோஷத்தோடு வலம்வரும் மத்திய ஆட்சியினர், வாகன வரியையும் வகை வகையாய் வசூலித்துக் கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். வரி வருமானமே பிரதானம் என வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கியாடும் மத்திய அரசை நினைத்தால் பர்ஸ் பதறுகிறது. “பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் தான் மத்திய அரசின் லேட்டஸ்ட் வரிப்பறி.

ஒரு மாநிலத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வேறு மாநிலத்துக்கு மாற்றலாகிச் செல்லும் போது தங்களின் வாகனங்களையும் கொண்டு செல்வர். இந்த வாகனங்களுக்கான மாநில மாற்றல் நடைமுறைகள் பலமுறை நடக்க வைப்பதாகும். இவ்வாறான அலைக்கழிப்புகளின் பின்னர் கிடைக்கும் வாகன அனுமதியின் பின்னர் அவர், தாம் வாழப் போகும் மாநிலத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அங்கும் வாகனப் போக்குவரத்து அலுவலகத்துக்கு நடையாய் நடந்து சாலை வரி கட்டி, உரிய வேறு பதிவு எண் பெறவேண்டும். அந்த வாகன எண் வைத்துத்தான் அந்த வண்டிகளை அம்மாநிலத்தில் இயக்க வேண்டும்.

இந்நிலையில்மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் பி.எச்.சீரீஸ் பதிவு எண் திட்டத்தின் மூலம் ‘ஆன் லைன்’ விண்ணப்பம், ஆன் லைன் வாயிலாகவே வரி மற்றும் கட்டணங்களைக் கட்டுதல் என இப்பணிகளை புதிய திட்டம் எளிதாக்குகிறது. இத்திட்டத்தின்படி ஒருமுறை பெறுகின்ற வாகனப் பதிவு எண் கொண்டு எந்த மாநிலத்திலும் பயணிக்கலாம். இதில் ‘பி.எச்.’ என்பது “பாரதம் முழுமைக்கும் பொதுவான ஒரே நாடு ஒரே பதிவு எண்” என்ற பாஜகவின் வழக்கமான பல்லவியைக் கொண்டதாகும். ஒரே ஒருமுறை செய்யும் பதிவு மூலம் வாகனத்தின் ஆயுட்காலம் வரை அதனை நாட்டின் எந்த மாநிலத்திலும் பயன்படுத்தலாம். இது மிக நன்றாக இருக்கும் அம்சங்கள் தான்.

ஆனால் விழைவு மிக்க இந்த வினையின் பின்னால் சில வில்லங்கங்களும் உண்டு.

அதாவது 10 லட்சம் ரூபாய் வரை விலை மதிப்புள்ள வாகனங்களுக்கு 8 சதவீதம் வரியைக் கட்ட வேண்டும். ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.20 லட்சம் வரையிலான விலையுள்ள வாகனங்களுக்கு 10 சதவீதம் வரியைக் கட்டியாக வேண்டும். ரூ.20 லட்சத்துக்கு மேல் விலை மிக்கதான வாகனங்களா? இவற்றுக்கு 12 சதவீத வரியைக் கட்ட வேண்டும். இதில் வரியே லட்சக்கணக்கான ரூபாய் என்ற கணக்கில் வருவதை வியந்து விழிக்கலாம். அதிர்ந்து அலறலாம். டீசல் வாகனம் எனில் இத்துடன் 2 சதவீதம் கூடுதல் வரியைச் செலுத்தவேண்டும்.

இதில் மாநிலத்துக்கு என்ன பிரச்னை? என்று கேட்டால் இத்திட்டத்தின் கீழ் வரும் வருவாய் முழுவதையும் மத்திய அரசே கபளீகரம் செய்து கொள்ளும். மாநில அரசுக்கான இது சார்ந்த வரி வருவாய் வழியை அடைத்து, மத்திய அரசு, அதைத் தன் பக்கம் திருப்பி விட்டுக் கொண்டு இருக்கிறது. ஆக மத்திய அரசின் வரி என்பது வரம்பு தாண்டியும் வளர்கிறது. மாநில அரசுகளின் கஜானாக்கள் கதறி அழுகின்றன.

வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் வாகன உற்பத்திப் புரட்சி, தகவல் தொழில்நுட்ப உலக எழுச்சி, ஜனப் புழக்கத்துக்கு ஏற்ப பணப்புழக்கம் என மற்ற மாநிலத்தாரை ஈர்க்கும் அம்சங்கள் அதிகம். இத்துடன் மத்திய அரசின் பணியாளர்கள் பெருமளவில் தமிழகத்துக்கு மாற்றல் செய்யப்பட்டு வருகின்றனர். எனவே அவர்களின் மூலமாகக் கூட பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் எல்லை தாண்டித் தமிழகத்தில் தவழ்ந்து வருகின்றன. இவற்றின் மூலமான வருவாய், மாநில அரசுக்குத் தான் வந்துகொண்டு இருந்தது. இனி இது மத்திய அரசுக்குத் தான்.

முதல் கட்டமாக ராணுவ அதிகாரிகள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை மற்றும் தனியார்துறை ஊழியர்கள் இத்திட்டத்தின் மூலம் உடனடியாக பலன்பெற உள்ளனர்.

கூடவே மத்திய அரசு இதன்மூலம் களஞ்சியத்தை நிரப்பத் தொடங்கும்.

மாநிலங்களின் வரி வாய்ப்புகளைப் பறித்துப் பறித்து ருசி கண்ட பூனைகள் போலாகி விட்ட மத்திய அரசுக்கு இதோ… மசாலா பால். பிரச்னையைத் தீர்க்க வந்தார்களா? பிரச்னையைத் தீர்க்கும் சாக்கில் வருமானத்தை வளைத்துக் கொள்கிறார்களா? தீப்பிடித்த வீட்டருகே வந்தவன், வீட்டுத் தீயை அணைக்கும் சாக்கில் பீடி பற்ற வைத்துக் கொள்கிறானே‌‌…அதுதான் நினைவுக்கு வருகிறது. மாநில அரசுகளின் கதி என்ன? குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்த கதை என்பார்களே அதுதான்!

இனி மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டும்? இந்த வரிவருவாய் எவ்வளவு என்று கணக்கிட்டு, “மாநிலங்களுக்கான பங்கைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்” என்று மத்திய அரசை நோக்கி மாநிலங்கள் குரல் எழுப்ப வேண்டும். இதன் மூலம் மட்டுமே மாநில அரசுகள் தங்களின் வரி இழப்பை ஈடுகட்டிக் கொள்ள முடியும்.

ஜி.எஸ்.டி. என்ற பெயரில் மாநில வரிகள் அனைத்தையும் ஒன்றிய அரசு வசூலித்துக் கொள்கிறது. மாநிலங்களுக்கு அவற்றுக்குரிய பங்குத் தொகையை வழங்குவதற்கு மாற்றாந்தாய் மனப்போக்கு, அரசியல் காழ்ப்புணர்ச்சி, மாநிலங்களை மதியாத மதி எனப் பல காரணிகள் ஒன்றிய அரசிடம் களமாடுகின்றன. இந்த வகையில் மற்றொரு வரி…மாநிலப் பங்கு, பாரபட்சங்களில் பவனி வரப் போகிறது.

நூருல்லா ஆர்.

செய்தியாளன்.

error: Content is protected !!