மியான்மரில் ராணுவ ஆட்சி: போலீஸ் சுட்டதில் குறைந்தது 18 பேர் பலி!

மியான்மரில் ராணுவ ஆட்சி:  போலீஸ் சுட்டதில் குறைந்தது 18 பேர் பலி!

உலக நாடுகளின் கவனத்தைக் கவர்த்துள்ள மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 1ம் தேதி மியான்மரில் மீண்டும் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். மியான்மரில் ராணுவம் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு உலகளவில் கடும் கண்டனங்கள் எழுந்தன. மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.போராட்டங்களின் போது போலீசார் நடத்திய தாக்குதலில் ஏற்கெனவே சிலர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதாலை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

நேற்றுய் ந்சனிக்கிழமை யாங்கோன், டேவி, மாண்டலே உள்ளிட்ட பல நகரங்களில் நடந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் தாக்க வந்ததால் ஓடி வரும் போராட்டக்காரர்கள், தற்காலிக சாலை தடுப்புகள், ரத்தக்காயங்களுடன் பலர் கொண்டு செல்லப்படுவது போன்ற புகைப்படங்கள்- இன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

இந்த போராட்டத்தின் போது சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஐ.நா மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் இது மியான்மரில் ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தின் கருப்பு தினம் என்றும் கூறியுள்ளது.

போலீசார் துப்பாக்கி, கையெறி குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் மிகப்பெரிய நகரமான யாங்கோனில் மட்டும் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையிலும் பலர் உயிரிழந்த பின்பும் பொதுமக்கள் சிறிதும் பின்வாங்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மியான்மரில் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐநா மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“மியான்மர் மக்களுக்கு அமைதியாக ஒன்றுகூடுவதற்கும் ஜனநாயகத்தை மீட்டெடுக்கக் கோரி போராடுவதற்கும் உரிமை உண்டு. அகிம்சை வழியில் போராட்டம் நடத்துவோருக்கு எதிராக உயிருக்கு அபாயமான தாக்குதலை பயன்படுத்துவது சர்வதேச மனித உரிமை விதிமுறை களின் கீழ் ஒருபோதும் நியாயப்படுத்தப்படாது” என்று செய்தித் தொடர்பாளர் ரவினா ஷம்தசனி கூறியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!