கால்பந்து போட்டியால் ஏற்பட்ட வன்முறையில் 129 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷியாவில் கால்பந்து போட்டியில் நடைபெற்ற வன்முறையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பல தரப்பிலும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவில் . கிழக்கு ஜாவா மாகாணத்தில் இந்தோனேசியா பிரீமியர் லீக் கால்பந்து போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் அரேமா மற்றும் பெர்செபயா கால்பந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் பெர்செபயா அணி அரேமா அணியை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் தோல்வியடைந்த அரேமா அணி ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்தனர். இதனால் இரு அணியின் ரசிகர்களும் தாக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக மைதானத்திற்குள் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதை அடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். அத்துடன் தடியடியும் நடத்தினர். இதனால் மைதானத்திற்குள் இருந்து வாசலை நோக்கி ரசிகர்கள் முண்டியடித்து ஓடினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியும், மூச்சுத்திணறியும் 300-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், பலர் வழியிலேயே உயிரிழந்தனர்.
https://twitter.com/aanthaireporter/status/1576409851160236032
“இந்த சம்பவத்தில் இதுவரை 127 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 பேர் காவல்துறை அதிகாரிகள். 34 பேர் மைதானத்திற்குள் உயிரிழந்தனர். மற்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும், மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். 180-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்னர். மேலும் பலர் அபாயக்கட்டத்தில் இருப்பத்தால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது ” என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
கால்பந்து போட்டியால் ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தோனேஷியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.