June 9, 2023

கின்னஸ் சாதனை படைத்த ட்ரம்ஸ் சித்தார்த் நாகரஜனுக்கு பாராட்டு விழா!

உலகிலேயே முதன் முறையாக ட்ரம்ஸ் இசைக்கருவியில் ஒரு நிமிடத்தில் அதிகபட்சமாக 2109 வகையான ட்ரம் பீட்ஸ் இசையை அமைத்து கின்னஸ் சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த ட்ரம்ஸ் இசைக்கலைஞர் சித்தார்த் நாகரஜனுக்கு மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சார்பாக சென்னையில்  பாராட்டு விழா நடத்தப்பட்டது. தி.நகர் வாணி மகாலில் நடந்த இந்த விழாவில் சங்கத்தின் மூத்த தாளவாத்திய இசைக்கலைஞர்களையும் கவுரவப்படுத்தினர்.
சிறு வயதிலேயே நான் இசை மற்றும் ஒளிப்பதிவு கூடங்களுக்கு போவேன். கே.வி.மகாதேவன் இசைக்குழுவில் இருந்த சித்தார் மற்றும் வயலின் கலைஞர்கள் இருவர், சாப்பிட கூட செல்லாமல் வாசித்துக் கொண்டிருப்பார்கள். நான் வளர்ந்த சூழல் மற்றும் விதமே என் இசைக்கு அடித்தளம். ஒரு பாடலை கேட்டால் அதை எப்படி இன்ன அழகுபடுத்த முடியும் என சிந்தித்து கொண்டே இருப்பேன். சிறு வயதில் நான் நாகராஜன் வீட்டுக்கு போகும் போதெல்லாம் சிறுவனான சித்தார்த் வாசித்துக் கொண்டிருப்பான். அது தான் இன்று கின்னஸ் சாதனை வரைக்கும் போயிருக்கிறது என வாழ்த்தி பேசினார் ட்ரம்ஸ் சிவமணி.
நாங்கள் எப்போதாவது சந்தித்து கொள்வதே இது போன்ற இசை விழாக்களில் தான். இங்கு வந்திருக்கும் நம்மை இணைப்பது இசை மட்டுமே. நான் முதன் முதலில் இசைப்பதிவுக்கு வாசித்தது 1975ல் சங்கர் கணேஷூக்கு. நம் எல்லோருக்கும் இருக்கும் ஒரே நோக்கம் எதையாவது வாழ்வில் சாதிக்க வேண்டும் என்பது தான். திறமை இருக்கும் எல்லோரும் சாதிப்பதில்லை. கடவுள் கொடுக்கணும். அதுவரை நாம் உறுதியோடு உழைக்க வேண்டும். சித்தார்த் உட்பட எல்லோருக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது உங்களை எல்லோரும் அடையாளம் காட்ட வேண்டுமே தவிர, மற்றவர்களை நினைத்து நீங்கள் அது மாதிரி வர வேண்டும் என்று நினைக்க கூடாது. அது உங்களை உந்த வேண்டுமே தவிர, அதை நீங்கள் உங்கள் அளவுகோலாக்கி கொள்ள கூடாது. அதை விட மேலே தான் முயற்சிக்க வேண்டும். கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. நம்ம ஊரில் இருந்து வெளிநாட்டுக்கு போய் இசை நிகழ்ச்சியை நடத்துகிறவர்கள், இந்தியாவின் இசை தூதர்கள். நம்ம ஊர் இசை, கலாச்சாரம் ஆகியவற்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இசைக்காக உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள் என்றார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.
அப்பனுக்கே பாடம் கற்றுக் கொடுத்த குருகன் போல, டி.ராஜேந்தர் என்ற தாய் எட்டு அடி பாய்ந்தால் சிலம்பரசன் என்ற குட்டி பதினாறு அடி பாயும் என்ற மாதிரி, என் நண்பன் நாகராஜனின் மகன் சித்தார்த் அந்த வகையில் இன்று கின்னஸ் சாதனை படைத்திருக்கிறான். வாழ்த்த வந்த விழாவில் பாதியில் கிளம்பி செல்லக்கூடாது. நிறைய பேர் ரொம்ப பிஸி மாதிரி நடிப்பார்கள். எனக்கு அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் கிடையாது. உலகப்புகழ் பெற்ற ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானிடம் பணி புரிந்தாலும் சிவமணியின் எளிமை, குருபக்தி வியக்க வைக்கிறது. சிவமணி இல்லை என்றால் ரீ-ரிக்கார்டிங்கையே கேன்சல் செய்து விடுவேன், அப்படிப்பட்ட சிவமணிக்கு பிறகு நான் மிகவும் ரசித்த ஒரு ட்ரம்மர் சித்தார்த் தான். நான் ஒரு தலை ராகம் படத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு நடுரோட்டில் நின்றபோது, எனக்காக குரல் கொடுத்த ஒரே அமைப்பு சினிமா இசைக் கலைஞர்கள் சங்கம் தான். அவர்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன், அவர்கள் நடத்தும் இந்த பாராட்டு விழாவில் பங்கு பெற்றது மகிழ்ச்சி என நெகிழ்ச்சியோடு முடித்தார் டி.ராஜேந்தர்.
விழாவில் இசையமைப்பாளர்கள்  தேனிசைத்தென்றல் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், தினா, கணேஷ், சிற்பி, சரத், மேண்டலின் ராஜேஷ் ஆகியோரும் கலந்து கொண்டு சித்தார்த்தை பாராட்டி பேசினர்.
முன்னதாக காலை 9 மணிக்கு கின்னஸ் சாதனையாளர் சித்தார்த் மற்றும் அவரது குழுவினரின் மியூஸிக்கல் ஃபியூஷன் இசை நிகழ்ச்சியும் நடந்தது.