மது இல்லாமல் தற்கொலை!- கொஞ்சம் யோசிக்கணும்!

மது இல்லாமல் தற்கொலை!- கொஞ்சம் யோசிக்கணும்!

உள்ளேயே இருப்பது இப்போது பலருக்குப் பெரும் உளைச்சலாக மாறி வருகிறது. மதுவின்றி கொரோனா கட்டுப்பாட்டினால் கேரளத்தில் தற்கொலைகள் என்றொரு செய்தி தென்பட்டது. இப்படி உயிரையே விடக்கூடிய அளவுக்கு மதுவுக்கு அடிமையானவர்கள் அதிகம் இல்லை என்றாலும் மது இயல்பு வாழ்வில் இன்று ஓர் அங்கமாக ஆகிவிட்ட நிலையில், சமூகக் கட்டுப் பாட்டின் போது ஏற்கனவே மனச்சோர்வுக்கு ஆளானவர்கள், இப்படி ‘செத்து விடலாம்’ என்று முடிவெடுப்பது அரிதான விஷயம் அல்ல. இது மது இல்லாததால் மட்டுமே எடுக்கும் முடிவு அல்ல, உள்ளே குமைந்து கொண்டிருந்த மன அழுத்தத்தின் வெளித்தெறிப்பு.

தனிமை என்பதை ஒரு சுகமாக அனுபவித்திருந்தவர்கள் கூட சுயவிருப்பின்றி அது ஒரு நிர்ப்பந்தமாக அமைந்ததில் அமைதிஇழந்திருக்கிறார்கள். இந்த முடக்கம் இன்னும் தொடரும் போல இருக்கும் நிலையில், ஏற்கனவே பலர் மனத்தளவில் பதட்டமும் பயமும் சோர்வும் அடைந்திருக்கிறார்கள். மனம் அழுத்தத்திற்கு ஆளாக இன்னும் பத்து நாட்களுக்கு மேல் ஆகும் என்று நினைத்ததற்கு மாறாக ஐந்து நாட்களிலேயே பலரும் தடுமாறுகிறார்கள். இதற்குக் காரணம் எல்லாமும் விரைவாக அமைந்துவிட்ட இன்றைய சமுதாய இயக்கம் தான். சுகமோ வருத்தமோ அதிக நேரம் அனுபவிக்காத ஒரு தலைமுறை உருவாகியிருக்கிறது

பொறுமை நிதானம் இரண்டுமே குறைந்து வருகிறது. எல்லாவற்றிலும் வேகத்தையே அனுபவித் தவர்கள் இந்த முடக்கத்தில் தடுமாறுகிறார்கள்.ஒரு வாரம் இருந்துவிடலாம் என்று மனத்தளவில் தீர்மானித்த மக்கள், மூன்று வாரங்கள் என்றதும் ஆரம்பத்தில் மலைத்திருந்தார்கள். தயார் நிலையில் வீட்டில் வாங்கிவைத்த மது, சிகரெட் மூன்று வாரங்கள் தாங்காது எனும் பதைப்பு, பதட்டமாக எரிச்சலாக மாற ஆரம்பிக்கிறது. இது அத்தியாவசியமான உணவு, மருந்து போன்றது இல்லை என்றாலும் இவற்றுக்குப் பழகியவர்களுக்கு இது திடீரென்று ஏற்பட்ட ஓர் இழப்பாக மனத்துள் உளைச்சல் தருகிறது.

மிகத்தீவிரமாக மதுவிற்கு அடிமையாகி, காலியிலேயே குடிக்க வேண்டும் இல்லாவிட்டால் முடியாது எனும் நிலையில் இருப்பவர்களுக்குத் தான் மதுவிலக்குச் சிகிச்சை செய்ய முடியும். அவ்வப்போதோ, தினமும் கொஞ்ச அளவிலோ குடிப்பவர்களுக்குப் பெரிதாக சிகிச்சை தர முடியாது. ஏனென்றால் இதனால் அவர்களது வாழ்வு, செயல்பாடு, சிந்தனை, உறவுகள் பாதிக்கப் படுவதாய் நாம் எடுத்துச் சொல்லி மதுவை விட வைக்க அவர்களை மனத்தளவில் தயார் செய்ய முடியாது.

இவர்கள் தான் இந்த சமூக-சுயதனிமைக் கட்டுப்பாட்டில் தடுமாறுகிறார்கள். ஆலோசனை தருகிறேன் என்று இவர்களிடம் படம் வரைந்து பார், பாடு, படி, என்று சொல்வதெல்லாம் பலிக்காது. ஏற்கனவே அவற்றில் ஆர்வமோ ஈடுபாடோ இல்லாதவர்களுக்கு அது ஒரு மாற்றாக அமையாது. இவர்களுக்குத் தேவை சகமனிதர்கள். இப்படி யாராவது இருந்தால் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசுங்கள். உங்களை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் உங்கள் குரல் வழி அந்த நெருக்கத்தை அவர்கள் உணர்வார்கள்.

தொடாதே, நெருங்காதே என்பது தான் கொரோனா தடுப்பு. தொலைபேசி மூலம் பேசாதே என்று எந்த கட்டுப்பாடும் இல்லை.யார் மீதெல்லாம் உங்களுக்கு அக்கறை இருக்கிறதோ அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் – வெட்டி அரட்டை கூட நேரத்தின் இறுக்கத்தைக் குறைக்கும்.இறுக்கம் குறைய நாம் யார் வேண்டுமானாலும் உதவலாம், ஆனால் மனச்சோர்வு ஒரு நோய் நிலையில் இருந்தால் மருத்துவ உதவி தான் பலன் தரும்.

-ஆர்.கே ருத்ரன்
மனநல மருத்துவர்

error: Content is protected !!