மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுக்கு கொரோனா உறுதி!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கரோனாவின் ஆரம்ப அறிகுறிகளைப் பெற்றவுடன், நான் சோதனை செய்ய முடிவு எடுத்தேன். சோதனையில் கரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. எனது உடல்நிலை நன்றாக உள்ளது, ஆனால் மருத்துவர் களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 37 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதில் ஆறுதல் அளிக்கும் விஷயமாக 11 லட்சம் பேர் கொரோனா வில் இருந்து குணமடைந்துள்ளனர். இருப்பினும் கரோனாவில் மாநில முதல்வர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பாதிக்கப்படும் நிலையும் இருந்து வருகிறது. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். லக்னோவின் சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் கமல் ராணி வருண் (62) காலமானார்.
அன்லாக் 3 மூலம் நாடு முழுவதும் ஊரடங்குகள் சிலவற்றுக்கு நீக்கப்பட்டவுடன் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருந்தாலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், சினிமா அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பார்கள் உள்ளிட்ட மக்கள் கூட்டத்தைக் காணும் இடங்களை அரசாங்கம் இன்னும் திறக்கவில்லை.இந்நிலையில்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.