June 4, 2023

விஷச் சாராய சாவுகள் =அரசு கொடுத்திருப்பது நிவாரணமல்ல!

ருவாய் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, ஆகஸ்டு 30, 1971-ல் மதுக்கடைகளை கலைஞர்தான் திறந்தார். பிறகு 30 ஜூலை 1973 முதல் கள்ளுக் கடைகளையும் செப்டம்பர் 1,1974 முதல் சாராயக்கடைகளையும் அவரே மூடினார். மதுக் கடைகள் மூடப்பட்டதால், உழைக்கும் மக்கள் மத்தியில், கள்ளச் சாராயச் சாவுகள் அதிகரித்து விட்டன. அதைத் தடுப்பதற்காக என்று காரணம் சொல்லி, 1981-ன் தொழிலாளர் தினமான மே முதல் தேதியன்று கள், சாராயக் கடைகளை மீண்டும் எம்ஜிஆர்தான் – திரைப்படங்களில் வெறும் நடிப்பிற்காகக்கூட குடிக்காத எம்ஜிஆர்தான் திறந்து விட்டார்.

எம்ஜிஆருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர், அதே உழைக்கும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 1989-ல் மலிவு விலை மதுவை அறிமுகம் செய்தார். அதற்குப் பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு. அதனால் பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதற்கு மூடுவிழா செய்தார். அதன் காரணமாக, மீண்டும் கள்ளச்சாராயச் சாவுகள் நடந்தன. மது ஒழிப்புச் சட்டத்தின்கீழ் ஏராளமானோர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதனால், ஏழைக் குடும்பத் தலைவர்கள் சிறை செல்ல வேண்டிய சூழ்நிலை. அதன் காரணமாக அந்தக் குடும்பங்கள் வறுமையில் வாடின. இவற்றைக் காரணம் காட்டி, மீண்டும் சாராய விற்பனைக்கு அனுமதி வழங்கினார் ஜெயலலிதா.

ஆக, போதை விஷயத்தை ஆராயப் போனால் சோம பானம், சுரா பானம் என்று எழுத்தறிவற்ற காலம்வரை மிகவும் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கும். காரணம், மனிதன் என்பவன் எப்போதுமே கொண்டாட்டங்களின் அடிமை. அதனால்தான் மனிதன் தன்னைதானே உணர வைப்பதற்கானதுதான் என்று சொல்லப் பட்ட ஆன்மிகம்கூட கடைசியில், வியாபாரிகளின் கைகளில் சிக்கி, கொண்டாட்டங்களில் தேய்ந்துபோய் விட்டது.

சரி, யதார்த்தத்திற்கு வருவோம். இப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பதினேழு (இன்னும் எத்தனையோ) கள்ளச் சாராயச் சாவுகள் கலங்க வைக்கின்றன. அவர்கள் குடியால் செத்ததற்கு அவர்கள் குடும்பம் என்ன செய்யும்? அதன் காரணமாகவே அவர்கள் குடும்பத்திற்குத் தலா பத்து லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்திருக்கிறது அரசு. இந்த மனிதாபிமானத்தை நமது so called தேச பக்தர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. குடிகாரனுக்கு நிவாரணமா என்று குதிக்கிறார்கள். உண்மையைச் சொல்லப் போனால், அரசு கொடுத்திருப்பது நிவாரணமல்ல; கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாத – குறைந்தபட்சம் கட்டுப்படுத்தக் கூட முடியாத தனது கையாலாகாத்தனத்திற்காக, தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட தண்டனை என்றுதான் பார்க்க வேண்டும்.

சரி, இதற்கெல்லாம் ஒரு விடிவுகாலமே கிடையாதா? நிச்சயம் உண்டு. அது எப்போது நடக்கும்? நேர்மையான அரசாங்கங்கள் அமையும்போது, எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். அப்படிப்பட்ட அரசுகள் எப்போது அமையும்? அதில்தான் சிக்கல் இருக்கிறது. என்ன சிக்கல்? நேர்மையான மக்களால் மட்டுமே நேர்மையான அரசாங்கங்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.

செ. இளங்கோவன்