ஏ.கே.ராஜன் கமிட்டி விவகாரம் : நீதிமன்றம் தன் வரம்பை மீறியிருக்கிறதோ?

ஏ.கே.ராஜன் கமிட்டி விவகாரம் : நீதிமன்றம் தன் வரம்பை மீறியிருக்கிறதோ?

ரூப் கன்வர் உடன்கட்டை கொடுமை வழக்கில் உடன்கட்டை ஏறுதல் ஒழிப்பாக இருக்கட்டும், குழந்தைத் திருமணம் ஒழிப்பு, கைம்பெண் மறுமண உரிமை, பிற்படுத்தப் பட்டோர் இடதுக்கீடு உரிமை என சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர் உரிமைக்கான போராட்டம் என எதை எடுத்துக்கொண்டாலும் அவை அனைத்துக்கும் பா.ஜ.க, சங் பரிவாரங்கள் முட்டுக்கட்டை போட்டே வந்துள்ளன.

இப்போது நீட் தேர்வையும், ஏ.கே. ராஜன் கமிட்டி நியமனத்தையும் பா.ஜ.க இதே அடிப்படையில் தான் அணுகுகிறது.

1. ஏ.கே.ராஜன் கமிட்டி தனது அறிக்கையை ஒரு மாதத்திற்குள் அளிக்க வேண்டும் எனத் தமிழ் நாட்டு அரசாங்கம் தெளிவாகச் சொல்லி இருக்கிறது.

2. இந்தக் கமிட்டி நீட் தேர்வு முறையால் பின்தங்கிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்; ஒரு வேளை மாணவர்கள் பாதிக்கப் பட்டிருந்தால் எதனால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதை ஆராய வேண்டும்; இதற்கு மாற்று உண்டா; அப்படி மாற்று இருக்கும் பட்சத்தில் அதைக் கொண்டு வர சட்டப்படி என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பரிந்துரை செய்ய வேண்டும் என்பது இந்தக் கமிட்டியின் நோக்கமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

3. இந்தக் கமிட்டி நியமிக்கப்பட்டதே தவறு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று பா.ஜ.க உயர் நீதி மன்றத்துக்குப் போயிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப் பட்டதா? ஏ.கே.ராஜன் எப்படி ஒப்புக் கொண்டார் என உயர் நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. இங்கே ஒரு கேள்வி எழுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மட்டுமல்ல, நம்முடைய அரசமைப்புச் சட்டமே சொல்லி இருந்தாலும், அதன் தாக்கத்தைப் பற்றி ஆராய, மதிப்பீடு செய்ய கமிட்டி போடக் கூடாதா? இதுவரை 100க்கும் மேற்பட்ட முறை அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப் பட்டுள்ளனவே. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட – ஒதுக்கீடு சுதந்திரத்துக்கு முன்பே இங்குள்ள பிரத்யேக சூழல் காரணமாக இருந்த ஒன்று. சுதந்திரத்திற்குப் பிறகு அரசமைப்புச் சட்டப்படி அனைவரும் சமம், சில பிரிவினருக்கு இட- ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்ற அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு, அதற்குரிய அரசாணை ரத்து செய்யப்பட்ட போது, அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே திருத்தம் கொண்டு வரப்பட்டு பிற்படுத்தப் பட்டோரின் இட- ஒதுக்கீட்டு உரிமை பாதுகாக்கப்பட்டது. மண்டல் கமிஷன் வரும் வரை பல மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட – ஒதுக்கீடு என்பதே கிடையாது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அந்தந்த மாநில மக்களுடைய போராட்டங்களின் விளைவாகப் பிற்படுத்தப் பட்டோருக்கு இட- ஒதுக்கீடு அமலில் இருந்துள்ளது. அனுமதிக்கப் பட்டுள்ளது.

4. நீட் தேர்வுகளைப் பொறுத்த வரையில் ஒரு கமிட்டி போடப் படுகிறது. அந்தக் கமிட்டி இம்முறை சரி என்றும் சொல்லலாம்; தவறு என்றும் சொல்லலாம். அந்த முடிவை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளலாம், ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். விளைவுகளை ஆராய கமிட்டி போடுவதே தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்? 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு மறுபரிசீலனை செய்யலாம் எனக் கேட்கலாம். உச்ச நீதி மன்றத்தின் பல தீர்ப்புகளும் இப்படித்தான் மாறி வந்திருக்கின்றன. அப்படியிருக்க ஏ.கே. ராஜன் கமிட்டியை நியமித்ததே தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்? இதைச் சட்ட விரோதம் என எப்படிச் சொல்ல முடியும்? சட்ட அறிவு போதுமான அளவு இல்லாதவன் என்கிறபோதும் தர்க்க நியாயம் மற்றும் இயற்கை நிதியின் அடிப்படையில் பா.ஜ.க. வின் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதுகிறேன். மாறாக, ‘உச்ச நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி விட்டீர்களா?’ என்பதும் ஒன்றிய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருப்பதும் நீதித்துறையின் அத்துமீறலோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

5. ‘நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் எப்படி விலக்கு அளிக்க முடியும்?’ என்ற கேள்வி இங்கே முன் வைக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டு களுக்கு தமிழகத்துக்கு மட்டும் பொதுக் கருத்தின் முக்கியத்துவம் உணர்ந்து உச்ச நீதி மன்றம் விலக்கு அளிக்கவில்லையா?

6. மருத்துவம் என்பது மாநிலப் பட்டியலில் இருக்கிறது. அப்படி இருக்கையில், மருத்துவக் கட்டமைப்பிற்கு அடிப்படையான மருத்துவக் கல்வியை மட்டும் எப்படி ஒன்றிய அரசாங்கம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பறித்துக் கொள்ள முடியும்? அப்படிச் செய்வது கூட்டாட்சி அமைப்பின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் இல்லையா?. அதை அனுமதிக்கலாமா?

கனகராஜ் கருப்பையா

Related Posts