சான் பிரான்சிஸ்கோ To பெங்களூரு:நான் ஸ்டாப் ப்ளைட்- இந்திய பெண் விமானிகள் இயக்கி சாதனை!

இந்திய பாதுகாப்பு மற்றும் வான் வழிவெளித்துறைகளின் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். இதற்கு மத்திய அரசு பல்வேறு ஊக்கங்களை வழங்கி வருகிறது. ஏற்கனவே இந்திய விமானப்படையில் போர் விமானங்களை இயக்கி சாதனை படைத்து வரும் நிலையில் அடுத்த மையில் கல்லாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ – பெங்களூரு இடையிலான ஏர் இந்தியாவின் இடை நிறுத்தம் இல்லாத விமானத்தை இந்திய பெண் விமானிகள் இயக்கி சாதனை படைத்துள்ளனர்.
சான் பிரான்சிஸ்கோவுக்கும், பெங்களூருக்கும் இடையிலான வான் வழி தூரம் உலகின் மிக நீளமான வான் வழிகளில் ஒன்றாகும். 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த வழித் தடத்தில் ஏர் இந்தியா நிறுவனம் விமான சேவையை தொடங்க திட்டமிட்டது. அதன்படி ஏர் இந்தியாவின் ஏஐ176 விமானம் நேற்று இரவு 8.30 மணிக்கு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ் கோவில் இருந்து புறப்பட்டது. இந்த விமானம் நாளை அதிகாலை 3.45 மணிக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மத்திய விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி, ஏர் இந்தியா விமானத்தை முழுக்க முழுக்க பெண்களாலேயே இயக்கத் திட்டமிடப்பட்டு இந்த சேவையைத் தொடங்கி உள்ளோம். ஏர் இந்தியாவின் பெண் சக்தி, உலகம் முழுவதும் உயரமாகப் பறக்கிறது.
பெங்களூரு – சான் பிரான்சிஸ்கோ இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்க விமானத்தை கேப்டன் சோயா அகர்வால், கேப்டன் பாபகரி தன்மாய், கேப்டன் அகன்ஷா சோனாவேர் மற்றும் கேப்டன் சிவானி மன்ஹாஸ் ஆகியோரைக் கொண்ட அனைத்துப் பெண்கள் குழுவினரும் இயக்கவுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.
பொதுவாக இந்த நீண்ட பயனத்தை பனிபடர்ந்த வட துருவத்தின் வழியாகவே கடக்க வேண்டும். இது போன்ற சவால் நிறைந்த உலகின் நீண்ட தூரத்தை கடப்பதற்கு அதிகப்படியான திறமையும், அனுபவமும் அதோடு தொழில்நுட்பத்தை நன்றாக பயன்படுத்தக் கூடிய விமானிகளால் மட்டுமே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.