மு.க.ஸ்டாலின் கூட்டிய கூட்டத்தில் சர்ச்சை ஏற்படுத்திய பெண்! – வீடியோ!

மு.க.ஸ்டாலின் கூட்டிய கூட்டத்தில் சர்ச்சை ஏற்படுத்திய பெண்! – வீடியோ!

மக்கள் கிராமசபை கூட்டத்தில் அதிமுக பெண் நிர்வாகி ஒருவர் கேள்வி கேட்க அவர் வெளியேற்றப்பட்டார். அதைக்கண்டித்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், இதுபோன்ற செயலை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் யாரும் கூட்டம் நடத்த முடியாது என ஸ்டாலின் எச்சரித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் கிராம சபை என்று கூட்டம் நடத்திவருகிறார், இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொகுதியான தொண்டாமுதூரில் கூட்டம் நடத்தினார். அப்போது அதிமுக மகளிர் அணி நிர்வாகி ஒருவர் எழுந்து ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார். அப்போது ஸ்டாலின் குறிப்பிட்டு மேடம் நீங்கள் வேலுமணி அனுப்பிய ஆள் உங்களுக்கு பதில் சொல்ல முடியாது நீங்கள் வெளியே போகலாம் என்று தெரிவித்தார். பின்னர் அவரை போலீஸிடம் ஒப்படைக்கும்படி தெரிவித்தார். இதன் பின் வெளியில் வந்த அவரை போலீஸார் வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து கிராமசபை கூட்டத்தில் குறிப்பிட்டு பேசிய ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து பேசினார். மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நிறைவு செய்து திமுகத் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

‘நான் முன்னுரையாக அதிக நேரம் பேசினேன். அதை நீங்களும் கேட்டு, அதை புரிந்துகொண்டு, உள்வாங்கிக்கொண்டு, ஆண்களில் ஐந்து பேரும், பெண்களில் ஐந்து பேரும் உங்களுடைய கருத்துக்களைச் சுருக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.

இங்கு, இடையே ஒரு சகோதரி கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார். எனக்கு நேற்றே தெரியும். இந்தக் கூட்டத்தை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று வேலுமணி திட்டமிட்டு இந்தக் காரியத்தைச் செய்து இருக்கிறார். நீங்கள் ஒரு பொதுக்கூட்டத்தைத் தடுக்க முயற்சி செய்தால், நாங்கள் உங்களுடைய எந்த கூட்டத்தையும் நடத்த விடமாட்டோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

https://twitter.com/aanthaireporter/status/1345278674421993483

இது கட்டுப்பாடு உள்ள இயக்கம். அதனால் தடையாக இருந்தவரைச் சரியாகக் கண்டுபிடித்து எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வெளியே அனுப்பிவிட்டோம். இதுதான் திமுக. வேலுமணி அவர்களே… மிஸ்டர் வேலுமணி அவர்களே… அமைச்சர் வேலுமணி அவர்களே… இன்றோடு உங்களது கொட்டத்தை அடக்கி கொள்ளுங்கள். இதேபோல தொடர்ந்தீர்கள் என்றால் நீங்கள் இல்லை, உங்கள் முதலமைச்சர் கூட எங்கேயும் கூட்டம் பேச முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாங்கள் இறங்கினால் என்ன ஆகும் என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதுதான் மரியாதை. அவ்வளவுதான் நான் சொல்ல முடியும். அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. அதை விட்டு விடுங்கள். அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை.

அதிமுகவினருக்கு தைரியம் இல்லை. அதுதான் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். நான்கு நாட்களில் ஒரு கூட்டம் போடப் போகிறீர்கள் அல்லவா? கூட்டத்தைச் சேர்ப்பதற்கு ரெக்கார்ட் டான்ஸ் எல்லாம் வைப்பீர்கள். ஒரு நடிகையை கூப்பிட்டு வரப் போகிறீர்கள். நடத்துங்கள், நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அது உங்கள் ஜனநாயகம். உங்கள் பண்பாடு. உங்கள் கலாச்சாரம். அதை நடத்த வேண்டாம் என்று சொல்லவில்லை.

இந்தக் கூட்டத்தில் புகுந்து அதுவும் திமுக தொப்பியை வாங்கிப் போட்டுக்கொண்டு செய்து இருக்கிறீர்கள். தைரியமாக அதிமுக என்று சொல்லி வந்து உட்கார்ந்து இருக்க வேண்டும். திமுக என்ற போர்வையில் வந்து உட்கார்ந்து விட்டு கலவரத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார். அமைச்சர் வேலுமணி இப்படி ஒரு செயலைத் திட்டமிட்டு செய்திருப்பதற்கு என்ன காரணம்? அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. அந்த காட்சிகளை எல்லாம் பத்திரிகை நிருபர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்தச் செய்தியையாவது அவர்கள் சரியாக போடுவார்கள் என்று நினைக்கிறேன்.

எங்கள் நிகழ்ச்சியை எடுப்பதற்கு செய்தியாளர்கள் இவ்வளவு முண்டியடித்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள். ஏனென்றால் இதுதான் நல்ல நிகழ்ச்சி. இதுதான் மக்கள் பார்க்கக்கூடிய நிகழ்ச்சி என்று புரிந்து கொண்டு வந்திருக்கிறீர்கள்.

எங்கள் நிகழ்ச்சியைச் சீர்குலைக்க அதிமுக, அதிலும், குறிப்பாக வேலுமணி எந்த அளவிற்கு முனைப்புடன் செயல்பட்டிருக்கிறார் என்பதனை தயவு செய்து மக்களுக்கு உங்கள் ஊடகத்தின் மூலமாக போட்டு வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள். இல்லையென்றால் உங்களுக்குத்தான் கெட்ட பெயர். நீங்கள் போட்டாலும், போடவில்லை என்றாலும் அது சமூகவலை தளங்களில் வரப்போகிறது’.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Related Posts

error: Content is protected !!