அதிமுக வின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? – 7 -ஆம் தேதி அறிவிப்பார்களாம்!

வருகின்ற 7ம் தேதி ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இணைந்து அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பார்கள் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நீட் தேர்வை கைவிட வேண்டும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும், மேகதாது அணைக்கட்ட எதிர்ப்பு போன்ற 15 தீர்மானங்கள் அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
https://twitter.com/aanthaireporter/status/1310458133970448385
சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்றும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியிடம், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கே.பி. முனுசாமி வரும் அக்டோபர் 7ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.
இதனால் 2021ம் ஆண்டு நடைபெறவிருக்கிற தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற கேள்விக்கு வரும் 7ம் தேதி பதில் கிடைக்கும் என்றும், இதுவரை நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.