அதிநவீன 5ஜி சேவை!- ஜியோ அறிவிப்பு!

அதிநவீன 5ஜி சேவை!- ஜியோ அறிவிப்பு!

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நிறைவடைந்த நிலையில், 58.65 சதவீத 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்துள்ள ஜியோ நிறுவனம், இந்தியாவின் 22 தொலைத்தொடர்பு வட்டங்களிலும் அதிநவீன 5ஜி சேவையை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2ஜி, 3ஜி, 4ஜி-யைத் தொடர்ந்து 5ஜி தொழில்நுட்பம் அடியெடுத்து வைக்கிறது. இணைய சேவையின் வேகத்தை பன்மடங்கு கூட்டுவது மட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவு, விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி என வரவிருக்கும் உலகத்துக்கு தேவையான வேகம் அளிக்க 5ஜி தொழில்நுட்பம் பயன்படுகிறது. இந்த 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது. ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. 7 நாட்கள் நடைபெற்ற ஏலத்தின் முடிவில் 1,50,173 கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றைக்கான உரிமம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்திற்கு ஒதுக்கப்பட்டதாகவும், அதில் 51,236 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை விற்கப்பட்டுள்ளதாகவும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.இதில் இந்திய தொலைத்தொடர்புத் துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ நிறுவனம் அதிக அளவிலான அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்துள்ளது.

மொத்தம் 88,078 கோடி ரூபாய்க்கு ஜியோ நிறுவனம் 5ஜி அலைக்கற்றை உரிமம் பெற்றுள்ளது. இதற்கு அடுத்ததாக 43,084 கோடி ரூபாய்க்கு ஏர்டெல் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. வோடஃபோன் ஐடியா நிறுவனம் 18,799 கோடிக்கும், அதானி நிறுவனம் 212 கோடி ரூபாய்க்கும் அலைக்கற்றை உரிமங்களை வாங்கியுள்ளன.

கடந்த 2010 ஆம் ஆண்டு 3ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடைபெற்றபோது 50,968 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அதேபோல கடந்த ஆண்டு நடைபெற்ற 4ஜி அலைக்கற்றை ஏலத்தின்போது 77, 815 கோடி ரூபாய்க்கு நிறுவனங்கள் ஏலம் எடுத்தன. 3ஜி-யை விட 3 மடங்கு அதிகமாகவும், 4ஜி-யை விட 2 மடங்கு அதிகமாகவும் 5ஜி அலைக்கற்றை விற்பனை நடந்து முடிவடைந்துள்ளது.

உலகத்தரமான 5ஜி சேவையை வழங்க ஜியோ நிறுவனம் உறுதி பூண்டிருப்பதாகவும், கல்வி, சுகாதாரம், வேளாண்மை, தொழில்துறை, மின் ஆளுமை ஆகிய துறைகளில் இந்தியாவின் டிஜிட்டல் புரட்சிக்கு உத்வேகமூட்டும் வகையில் ஜியோ நிறுவனம் சேவைகளை வழங்கும் என அந்நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.

இந்தியாவின் 22 தொலைத்தொடர்பு வட்டங்களிலும் 700 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை உரிமத்தை ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது. 5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடங்கும் என்றும், அக்டோபரில் 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகமாகும் என்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!