வளரிளப் பருவச் சிக்கலகள்!

வளரிளப் பருவச் சிக்கலகள்!

• தம் பிள்ளைகள் குறித்து பெரும் பதட்டத்துடனும் பரிதவிப்புடனும் பேசும் பெற்றோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. நேற்று மட்டும் மூன்று பேர். ஒற்றுமை என்னவெனில் மூன்று பேருடைய சிக்கல்களும் ஏறத்தாழ 90% ஒரே மாதிரியானவைதான்.

• புகார்களில் இருப்பவர்கள் குறிப்பாக பையன்கள். புகார்களும் கடுமையானவை. கணிசமான எண்ணிக்கையில் கல்லூரிப் படிப்பைத் தொடர மறுக்கின்றனர். சிலருக்கு கல்லூரி வருகைப் பதிவு போதாமல் தேர்வு எழுத முடியாத நிலை.

• பையன்களும் தாளவியலா செயல்கள் செய்கின்றனர்தான், மறுக்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன், என்னிடம் பகிரப்பட்ட அளவில், பிள்ளைகளின் அந்தச் சிதைவுகளுக்கு பிள்ளைகள் மட்டுமே, எல்லோரும் மிக எளிதாகச் சொல்வதுபோல செல்ஃபோன்கள் மட்டுமே முற்றிலும் காரணமல்ல.

• நானறிந்த வரையில் அந்தப் பிள்ளைகளின் சிதைவுகளுக்கு மிக முக்கியமான காரணம் பெற்றோர்கள். பெற்றோர்களின் கடந்த கால செயல்பாடுகளின் விளைவே பிள்ளைகள் இம்மாதிரியான சிதைவுகளுக்குள் தங்களை ஆட்படுத்திக்கொள்கின்றனர். பெற்றோர்களில் சிலர் மட்டுமே ஒப்புக்கொள்கின்றனர். பலரும் மறுக்கவே செய்கின்றனர்.

• செல்ஃபோன் பயன்பாடு, மொபைல் கேம், பைக் பயன்பாடு, பொய் பேசுதல், புகைப்பிடித்தல் மற்றும் இன்னபிற செயல்கள் உள்ளிட்ட அவர்கள் செய்யும் பெரும்பாலான ஒவ்வாத செயல்கள் வேறொன்றிலிருந்து தப்பிக்க தன்னையறியாமல் விழுந்து சிக்கிக்கொண்டவை மட்டுமே. ’முன்பெல்லாம் இப்படி இல்லையா, அதென்ன இப்ப மட்டும்’ எனும் பூமர் வசன ஒப்பீட்டிற்கு வாதம் செய்ய என்னால் இயலாது. காரணம் 2000ற்குப் பிறகு பிறந்த பிள்ளைகளின் டிசைன் வேறு. இதை ஒப்புக்கொள்வதும், புரிந்துகொள்வதுமே தீர்வின் முதல் நிலை.

• சிக்கலை ஓரளவு உணர்ந்ததுமே, முழுவதுமாக அறிந்துகொள்ள முயலாமல் உடனடியாகத் தீர்வு தேட முற்படுகின்றனர். நெருங்கியவர்களிடம்கூட சொல்லாமல், ரகசியமாக, தப்பும் தவறுமாகத் தீர்வு தேடுகின்றனர்.

• ஒன்றை அவர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். சிக்கல்கள் கண்களுக்குத் தெரிவதுபோல் புறத்தில் இல்லை. உடனே மருந்திட்டு சரி செய்ய. மிகப் பெரும்பாலும் அகத்தில். அதாவது மனதில். அதைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நிச்சயம் காலம் பிடிக்கும். அதற்கு சரியான நபர்கள் அமைய வேண்டும்.

• மனம் திறக்க பிள்ளைகளுக்கு சூழல் அமைய வேண்டும். சரி செய்பவர் மற்றும் சரியாக வேண்டியவர் ஆகியோர் இடையே ஓர் இசைவு ஏற்பட வேண்டும். சிலருக்கு அதுவரை இருந்த வாழ்வியல் முறையே மாற வேண்டியிருக்கும். இதற்கெல்லாம் அயர்ச்சி கொள்ளாத பொறுமை வேண்டும்.

ஈரோடு கதிர்

error: Content is protected !!