முகமது நபி குறித்து – பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு :அரபு நாடுகள் காட்டம்!!

முகமது நபி குறித்து – பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு :அரபு நாடுகள் காட்டம்!!

முகமது நபி குறித்து பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா சர்ச்சை கருத்தை தெரிவித்ததற்கு அரபு நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சம்பவத்துக்கு கத்தாரை தொடர்ந்து குவைத், ஈரான், சவூதி அரேபியா நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தரப்பிரதேச மாநில பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, இஸ்லாமியர்களின் இறைதூதர் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.இதையடுத்து அம்மாநிலத்தின் கான்பூரில் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவானது. மேலும், இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என அரபு நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள் போர்க்கொடி தூக்கினர். இதை அடுத்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்ட நுபுர் சர்மாவை பாஜக இடை நீக்கம் செய்தது. மேலும், பாஜக எந்த மதத்துக்கும் எதிரான கட்சி இல்லை என்றும் அறிக்கை வெளியிட்டது.

இந் நிலையில், முகமது நபி குறித்த சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த கத்தார், விளக்கம் கேட்டு இந்தியத் தூதருக்கு சம்மன் அனுப்பியது. அதில், சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உடனடியாக கண்டனத்தை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியது. கத்தாரின் சம்மனுக்கு இந்திய வெளியுறவுத்துறை சார்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், இவை கலகத்தை ஏற்படுத்தும் நபர்களின் கருத்துக்கள்தான் என்றும் அந்த நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதாகவும் விளக்கம் அளித்தது.

கத்தாரை தொடர்ந்து குவைத், ஈரான் மற்றும் சவூதி அரேபியா நாடுகளும், முகமது நபி குறித்து சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்க குவைத், ஈரான் நாடுகள் இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளன.

Related Posts

error: Content is protected !!