நாடெங்கும் ஞாயிறுதோறும் இயங்கும் ஆயிரம் மருத்துவ முகாம்கள் – அமைச்சர் மா.சு. தொடங்கிவைத்தார்
தமிழ்நாட்டில் மழைக் காலம் வந்து விட்டாலே போதும் ஜலதோஷம், சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி என நோய்களின் பாதிப்புகள் வரிசையில் வந்து நிற்கும். அதிலும் நாடெங்கும் நகரம், கிராமம் எனப் பாகுபாடு இல்லாமல், தெரு சுத்தமும், பாதை சீரமைப்பும், சாலைப் பராமரிப்பும் சரியில்லாத காரணத்தால், மழைத் தண்ணீர் வடிய வழியின்றித் தெருவெல்லாம் குளமாகிவிடுகிறது. இதனால் சுற்றுப்புறம் மாசடைந்து, குடிநீரும் தெருநீரும் கலந்து நோய்க்கிருமிகள் வாழ வழியேற்படும். விளைவு வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, டைபாய்டு, மஞ்சள்காமாலை என்று பல தொற்றுநோய்கள் நம்மைப் பாதிக்கத் தொடங்கிவிடும். பருவநிலை மாறும்போது, அதுவரை உறக்க நிலையில் இருந்த பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் விழித்தெழுந்து, வீரியம் பெற்று மக்களைத் தாக்கத் தயாராகின்றன. மழையில் நனைகிறபோது இந்தக் கிருமிகள் நமக்குப் பரவப் பொருத்தமான சூழல் உருவாகிறது. அப்போது நம்மிடையே ஊட்டச்சத்து குறைந்தவர்கள், நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தவர்கள் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால்தான் மழைக்காலத்தில் நோயால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இதைக் கவனத்தில் கொண்டு காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், இன்று (29.10.2023) முதல் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை என 10 ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த மக்கள் நல்வாழ்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இதை அடுத்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ( அக்.29) தமிழகம் முழுவதும் 10 வாரங்கள் நடைபெற உள்ள 10,000 மழைக்கால சிறப்பு முகாம்களைத் தொடங்கி வைத்தார். சென்னை கோடம்பாக்கம் , 138-வது வார்டுக்குட்பட்ட எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகம் முழுவதிலும் தொடர்ந்து இரண்டு, மூன்று மாதங்களாகவே டெங்கு பாதிப்புகள் கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழையின்போதும், தென்மேற்கு பருவமழையின்போதும் மழைக்கால நோய்களான டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா, டையரியா போன்ற நோய்கள் பரவல் என்பது கூடுதலாகி வரும். எனவே இந்த ஆண்டை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை மட்டுமல்லாமல் கோடைக்கால மழை, வெப்பச்சலன மழை என்று தொடர்ச்சியாக மழை பெய்துக் கொண்டும் இருக்கிறது.
எனவே தமிழகம் முழுவதிலும் மக்கள் நல்வாழ்வுத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், டெங்கு பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதிலும் தேவையான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவத்துறையைப் பொறுத்தவரை அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், வட்டார அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவுக்கு என்று தனி வார்டு உருவாக்கப்பட்டு அந்தந்த மருத்துவமனைகளின் இடவசதிக்கு ஏற்ப படுக்கைகள் அமைத்து தனி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த பாதிப்புகள் என்பது ஒரு 10,000-த்துக்கும் கீழே என்று தொடர்ச்சியாக வந்துக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் தமிழகத்தில் ஜனவரி முதல் தற்போது வரை ஏற்பட்டிருக்கும் டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 5,896. இதில் இன்று வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் 607, கடந்த பத்து மாதங்களில் ஏற்பட்டுள்ள இறப்புகளின் எண்ணிக்கை, நேற்று தஞ்சையில் ஏற்பட்டுள்ள இறப்புகளையும் சேர்த்து 7 என்கின்ற எண்ணிக்கையில் இருக்கின்றன. எனவே தொடர்ச்சியாக டெங்கு பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் எண்ணிக்கை 3,00,093. கடந்த ஆண்டு 2,65,834 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு 1,73,099 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பத்து மாதங்களில் டெங்கு கண்டறியப்பட்ட நாள்முதல் இதுவரை அதிகபட்ச பரிசோதனைகளான மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, வாரம் தோறும் 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்று அறிவித்திருந்தோம். வடகிழக்கு பருவமழை முடியும்வரை தொடர் மருத்துவ முகாம்கள் நடத்திட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். எனவே இன்று தொடங்கி டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை உள்ள ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதாவது 10 ஞாயிற்றுகிழமைகளிலும் மொத்தம் 10,000 தொடர் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். மருத்துவத்துறை வரலாற்றிலேயே 10,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதல்முறை, இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சார்ந்த மக்கள் பயன்பெற வேண்டும்” என்று தெரிவித்தார்