பார்லிமெண்ட் நடவடிக்கைகள் நேரடி ஒளிப்பரப்பு கேன்சலா?
தங்கள் பிரதிநிதிகள் பேச்சு, நடவடிக்கைகளை மக்கள் உடனடியாக தெரிந்து கொள்ளும் நோக்கில் மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகள் 2004-ம் ஆண்டு டிசம்பர் 14 முதல் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. தூர்தர்ஷ னால் நிர்வகிக்கப்பட்டு வரும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா டிவி சேனல்கள் இந்த நேரடி ஒளிபரப்பை மேற்கொண்டு வருகின்றன. இந்த நேரடி ஒளிபரப்பை நிறுத்திவிட்டு அவை நடவடிக்கைகளின் வீடியோ பதிவுகளை மட்டும் தனியாக வெளியிட ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தனியார் சேனல்களின் பெயரில் மத்திய அரசு அரசியல் லாபம் அடைய முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறும்போது, “நாடாளுமன்றத்தில் கடந்த சில தொடர்களாக எதிர்க்கட்சிகள் செய்யும் அமளி அதிகரித்து வருகிறது. இதன்மூலம் ஆளும் அரசுக்கு எதிரான கருத்து பொதுமக்களிடம் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் என மத்திய அரசு அஞ்சுகிறது. தனியார் செய்தி சேனல்களும், நேரடி ஒளிபரப்பினால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல ஆண்டுகளாக புகார் கூறி வருகின்றன. எனவே , குடியரசு துணைத் தலைவராக புதிதாக பொறுப்பேற்பவரிடம் நேரடி ஒளிபரப்பை தடை செய்யக் கோரலாம் என திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த ஜூலை 26-ம் தேதி மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஆனந்த் சர்மா எழுப்ப முயன்ற ஒரு பிரச்சினையால் கடும் சர்ச்சை கிளம்பியது. இதை எழுப்ப நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மாநிலங்க ளவை நடவடிக்கை நேரடி ஒளிபரப்பாவதன் லாபத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடைய முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதுடன் ஜேட்லியின் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தின. இதனால் மாநிலங்களவையை மூன்று முறை ஒத்திவைக்க நேரிட்டது.
ஆனாலும் அருண் ஜேட்லியின் கருத்து தனது மனதை மிகவும் புண்படுத்தி விட்டதாக திமுக மூத்த உறுப்பினர் திருச்சி சிவாவும் தெரிவித்து இருந்தார். இந்தச் சூழலில் இரு அவைகளின் நேரடி ஒளிபரப்பு தடை செய்யப்படுவதை எதிர்க்கட்சிகள் அனுமதிக்காது எனக் கருதப்படுகிறது.ஏனெனில் நேரடி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டால் அவை நடவடிக்கைகளை மத்திய அரசு தனக்கு தனக்கு சாதகமாக ‘எடிட்’ செய்து வெளியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இதை எதிர்க்கட்சிகள் ஏற்காது என எதிர் பார்க்கலாம்.