அவிழ்க்க உதவும் மில்லியன் டாலர் பரிசும், சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துருப் புதிரும்!

உங்களுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் பரிசாக வேண்டுமா? சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துருப் புதிரை அவிழுங்கள்.ஒரு இந்திய மாநிலத் தலைவரால் வழங்கப்படும் இந்த மகத்தான பரிசு வெண்கலக் காலத்தின் நாகரீகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவது மட்டுமல்ல நீண்டகாலப் பண்பாட்டுப் போரை முடித்து வைப்பதுமாகிறது.
நூறாண்டுகளுக்கு மேலாக பல அறிஞர்களைக் குழப்பிய புரியாத புதிர் இது, இப்போது கவர்ச்சிகரமான நம்பமுடியாத பரிசுத் தொகையோடு வந்து நிற்கிறது. சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துருக்களைப் புரிந்து கொண்டு அதன் பொருளைக் கண்டடைபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ 8.6 கோடி) பரிசுத் தொகையை அறிவித்து இருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். 5000 ஆண்டுகளுக்கு முன்னதாக இன்றைய இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் பரந்த நிலப்பரப்பில் நவீன நகர்ப்புற அமைப்பை உருவாக்கி வாழ்ந்து வந்த மனிதர்களின் எழுத்துருக்களைக் குறித்து பிற நாகரீகங்களை ஒப்பிடும் போது நாம் மிகக் குறைவாகவே அறிந்திருக்கிறோம். காரணம் எளிமையானது, சிந்து சமவெளி நாகரீகம் அல்லது திராவிட நாகரீகம் என்று நம்பப்படும் இதன் எழுத்துருக்களின் பொருளை இதுவரை யாரும் வாசிக்க முடியவில்லை. இதுவரை 2000 த்துக்கும் அதிகமான இடங்களில் அகழ்வாய்வு நிகழ்த்தப்பட்டு கணக்கிலடங்காத அளவில் தொல்பொருட்கள் கிடைத்திருக்கிறது.
ஆனால் இந்த நாகரீக மனிதர்கள் பயன்படுத்திய எழுத்துருக்களை வாசிக்க ஒருவர் வருகிற வரை அந்த நாகரீகத்தின் மொழி, பண்பாடு, மதம் போன்றவை குறித்தோ அந்த நாகரீகத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் குறித்தோ நாம் திட்டவட்டமாக ஒரு முடிவுக்கும் வரமுடியாது, அது புரியாத புதிராகவே இருக்கும். மில்லியன் டாலர் பரிசை அறிவித்திருக்கும் தென்னிந்திய மாநிலமொன்றின் முதல்வராகிய மு.க.ஸ்டாலின் இந்த எழுத்துருவைப் புரிந்து கொள்ள விரும்பும் பண்பாட்டுச் செழுமை கொண்ட மொழிக் குடும்பத்தின் உள்ளக்கிடக்கையை எதிரொளிக்கிறார். இந்த உந்துதல் வெறும் வரலாற்று உணர்வு அல்ல, கடந்த 100 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் ஆரிய-திராவிடப் பண்பாட்டுப் போரின் புதிய நவீன வடிவம். இந்து வைதீக மதத்தை இந்தியாவிற்குள் கொண்டு சேர்த்த ஆரிய இனம், “இந்த நாகரீகம் இந்திய சமூகத்தை உருவகம் செய்கிறது” என்று நீண்ட காலமாக இந்துத்துவ தேசியவாதிகளால் வழியாக முன்வைக்கிறது.
இன்றைய இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் கட்சியான பாரதீய ஜனதாவின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் இந்த மேலாதிக்கக் கோட்பாடுதான் மையமாக இருக்கிறது. மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினர் மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு அறிவுத் தளத்தின் உறுப்பினர்கள் இந்துத்துவர்களின் பொதுமைப்படுத்தப்பட்ட மேற்கண்ட பிரதி நிதித்துவத்தை எதிர்க்கிறார்கள். தென்னிந்தியாவின் திராவிட இனம் தான் இந்த நாட்டின் பழங்குடி மக்கள் என்றும், இந்தியாவின் ஆரியர்கள் ஐரோப்பாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் அல்லது படையெடுப்பாளர்கள் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். பிரகடனம் செய்கிறார்கள். (ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்குமான வேறுபாடு என்னவென்ற உண்மை இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை) எழுத்துருக்களைப் புரிந்து கொள்வது பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் என்று இருதரப்பிலும் நம்புகிறார்கள்.
இந்துத்துவ தேசியவாதிகள் தங்களின் பழைய கருத்தாக்கத்தின் வழியாக சிந்துநதி நாகரீகத்தின் எழுத்துருக்கள் இந்துமத வேதங்களில் பயன்படுத்தப்பட்டவை என்றும், சமஸ்கிருத மொழியோடு நெருங்கிய தொடர்புடையது என்றும் சொல்லி வந்தார்கள். மு.க.ஸ்டாலின் மற்றும் பலரது மனதில் சிந்து சமவெளி எழுத்துரு தமிழின் வேர்களைக் கொண்டது என்கிற உறுதியான நம்பிக்கை இருக்கிறது. (தமிழ், ஒரு திராவிடக் குடும்பத்தின் மொழி, இந்தியாவின் பழமையான செம்மொழி.) அந்த நம்பிக்கை உண்மையானால், தமிழர்கள் இந்தியாவின் பூர்வீகக் குடிகள் என்ற திராவிட உரிமையை அது உறுதிப்படுத்தும். மில்லியன் டாலர் பரிசுப்பொதியை அறிவிக்கும் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,
“சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துரு இதுவரை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதற்குக் காரணம் முயற்சியின்மையோ, ஆய்வுகளில் பற்றாக்குறையோ அல்ல…” “உலகெங்கும் பல்வேறு தொல்பொருள் ஆய்வாளர்களும், மொழியறிஞர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும் இணைந்து இந்த எழுத்துருவின் புதிரை அவிழ்க்கப் பல ஆண்டுகளாக முயற்சி செய்கிறார்கள்.” என்று குறிப்பிடும் மு.க.ஸ்டாலின், “ஒருவேளை அரசியல் ரீதியாக இந்த முயற்சி வழிநடத்தப்பட்டால், முடிவுகளை முன்கூட்டியே செய்து கொண்டு, அவற்றை நியாயப்படுத்துவதற்கான ஆதாரங்களைத் தேடுவதற்கான முயற்சியாக இருக்கலாம்” என்றும் எச்சரிக்கிறார்.
ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படும் சிந்து சமவெளி நாகரீகம், எகிப்திய, மெசபடோமிய மற்றும் சீன நாகரீகங்களுக்கு இணையாக வரலாற்று அறிஞர்களால் பார்க்கப்படுகிறது.இந்த நாகரீகம் மனித நாகரீகங்களில் முன்னதாகத் தோன்றியது, பழமையான ஒன்று, இந்த நாகரீகம் வெண்கல யுகத்தில் சிந்து மற்றும் சரஸ்வதி நதிகளின் கரையில் செழித்தது. இந்த நாகரீகம் பெருநகரக் கட்டுமானங்கள், நீர் மேலாண்மை, வடிகால் அமைப்புகள், பெரிய கோட்டை சுவர்கள் மற்றும் நேர்த்தியான மட்பாண்டங்கள் மற்றும் டெர்ரகோட்டா கலை வடிவம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. 1924 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை இந்த நாகரிகம் குறித்த முதல் கண்டுபிடிப்புகளை அறிவித்ததிலிருந்து, இன்றுவரை சுமார் 5,000 கல்வெட்டுகள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளன.அந்த நாகரீகத்தின் எழுத்துருக்கள் முழுவதும் கல் அல்லது உலோகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது, சுடப்பட்ட களிமண்ணிலும் முத்திரையிடப்பட்டிருக்கின்றன. கல்வெட்டுகளின் சுருக்கம், மொழிபெயர்ப்பில் அதன் குறியீடுகளைக் காட்டும் ரொசெட்டா-ஸ்டோன் போன்ற உரை இல்லாத எழுத்துருவாக இது இருப்பது, புரிந்து கொள்ளப்பட முடியாமல் இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும் என்று வரலாறு மற்றும் மொழியறிஞர்கள் கூறுகின்றனர்.
ஆய்வாளர் திரு. பர்போலா, களிமண் பலகைகளில் காணப்படும் அடையாளங்கள் முழுமையான வார்த்தைகளாகப் படிக்க வேண்டிய படங்கள் என்றும் அவற்றை ஒலிப்பு முறையிலும் படிக்கலாம் (ஹோமோஃபோன் எனப்படும் ஒரே சொல்லை இருவேறு பொருள்படும் வகையில் அறிந்து கொள்தல்) என்றும் அவர் வாதிடுகிறார். இந்த எழுத்துருக்கள் திராவிட மொழி வேர்களின் ஆதாரத்தை ஆய்வுப்பூர்வமாக வழங்குகிறது என்று அவர் நம்புகிறார். பல கல்வெட்டுகளில் காணப்படும் மீன் பொறி அடையாளங்கள், விண்மீன் என்றும் பொருள் வழங்கக்கூடிய பிக்டோகிராம்கள் என்று அவர் கருதுகிறார்.
திராவிட மொழிச் சொல்லான “மீன்” என்பது நட்சத்திரத்திற்கான (விண்மீன்) ஹோமோஃபோன் ஆகும். பஹட்டா அன்சுமாலி முகோபாத்யாய், 10 ஆண்டுகளாக இந்த எழுத்துருவைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யும் ஆய்வாளர், மீன் விஷயத்தில் திரு. பர்போலாவுடன் வேறுபடுகிறார்.ரத்தினக் கற்கள், செம்பு மற்றும் வெண்கலத்தால் ஆன பளபளப்பான பொருட்களின் வகைகளைக் குறிக்க மீன் போன்ற அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டன என்று அவர் கருதுகிறார். சிந்து எழுத்துக்களை “வணிக எழுத்துக்கள்” என்று குறிப்பிடும் திருமதி முகோபாத்யாயா, மீன் அடையாளங்கள் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்த தொடர்புடைய வேறு பொருட்களின் பெயர்களைக் குறிக்கின்றன என்கிறார், மேலும் தோண்டிய களிமண்ணால் செய்யப்பட்ட மாத்திரைகளை வரி முத்திரைகள் என்றும் விளக்குகிறார்.சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துருக்களை நாம் குறியீடுகளாகப் படிக்க வேண்டும், ஒலிப்பு ரீதியாக அல்ல என்கிறார் திருமதி முகோபாத்யாயா.
எடுத்துக்காட்டாக தந்தங்களைக் காட்ட, தந்தம் போன்ற அடையாளத்தை சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்தினர் என்று அவர் நம்புகிறார். சிந்து சமவெளி நாகரிகத்தில் கிடைக்கப்பெற்ற எல்லாப் பொருட்களின் தன்மைகள் குறித்த தரவுத்தளமான “கார்ப்பஸ் ஆஃப் சிந்து” முத்திரைகள் மற்றும் கல்வெட்டுகளின் ஆறாவது தொகுதியில் பணிபுரியும் திரு. பர்போலா… ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் இருந்து பல ஆண்டுகளாகத் தனக்கு நிறைய மின்னஞ்சல்கள் வந்ததாகக் கூறுகிறார். எழுத்துருக்கள் சிதைக்கப்பட்டிருக்கலாம் அல்லது புதிய கல்வெட்டுகள் உள்ளீடு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார் திரு.பர்போலா. பாகிஸ்தானில் திரு.அஜீஸ் கிங்ரானி என்ற கல்வியாளர், இதுபோன்ற ஒரு கடிதத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். திரு. பர்போலா, தான் எழுதியிருக்கும் நூலில் திரு. கிங்ரானியை வாழ்த்துகிறார். ஆனால் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் எழுத்துருக்களைப் புரிந்து கொள்வதை எந்த வகையிலும் மேம்படுத்தவில்லை என்றும் வருந்துகிறார்.
“தயவுசெய்து தொடர்ந்து தேடுங்கள்” என்கிறார் திரு.பர்போலா.
Article by K B Pragati@Newyork Times
Translated to Tamizh by
Arivazhagan Kaivalyam