மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகிக்கு 100 ஆண்டுகள் வரை சிறை?
மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு கோர்ட் அதிரடி தீர்ப்பளித்தது இருக்கிறது. தொடர்ந்து சில வழக்குகளின் முடிவில் அவருக்கு 100 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வாய்ப்பிருப்பதாகவும் செய்திகாள் வருகின்றன.
மியான்மரில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக அந்த நாட்டு ராணுவம் குற்றம் சாட்டியது. ராணுவ தலைவர்கள் அரசுக்கு எதிராகவும் தலைவர் ஆங் சான் சூகிக்கு எதிராகவும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தனர்.இந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 1ந் தேதி மியான்மர் ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அகற்றிவிட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
அதோடு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட 15க்கும் மேற்பட்ட மூத்த அரசியல் தலைவர்களை ராணுவம் கைது செய்தது. மேலும் நாட்டில் ஓர் ஆண்டுக்கு அவசர நிலையை ராணுவம் பிரகனடப்படுத்தியது.
இதற்கிடையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மர் மக்கள் வீதியில் இறங்கி போராட தொடங்கினர். ஆனால் ராணுவம் மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. 1,300-க்கும் அதிகமான மக்கள் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதனிடையே கைது செய்யப்பட்ட நாள் முதல் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கும் ஆங் சான் சூகி மீது ராணுவம் பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது; அரசுக்கு எதிராக போராட்டங்களை தூண்டியது; கொரோனா தடுப்பு விதிகளை மீறியது என்பன உள்பட மொத்தம் 12 குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன.
இந்தக் குற்றச்சாட்டுகள் மீது கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக அந்த நாட்டு ராணுவ கோர்ட் விசாரணை நடத்தி வந்தது. இதில் அரசுக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியது மற்றும் கொரோனா தடுப்பு விதிகளை மீறியது தொடர்பான 2 வழக்குகளின் விசாரணை அண்மையில் நிறைவடைந்தது. இதில் ஆங் சான் சூகி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி கோர்ட் அவரை குற்றவாளியாக அறிவித்தது.
இந்த நிலையில் இந்த 2 வழக்குகளில் மியான்மர் ராணுவ கோர்ட் நேற்று தனது தீர்ப்பை வழங்கியது. 2 வழக்குகளிலும் தலா 2 ஆண்டுகள் வீதம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. எனினும் இந்த தண்டனையை அனுபவிக்க அவர் சிறைக்கு அனுப்பப்படுவாரா அல்லது வீட்டு சிறையே தொடருமா என்று இன்னும் தெளிவாகவில்லை. அதேபோல் அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள மேலும் பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
அனைத்து வழக்குகளிலும் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்படும் பட்சத்தில் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.