பிரதமர் தொடங்கி வைத்த 75வது சுதந்திர தினத்தின் 75 வார கொண்டாட்டம்!

பிரதமர் தொடங்கி வைத்த  75வது சுதந்திர தினத்தின் 75 வார கொண்டாட்டம்!

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தின் 75 வார கொண்டாட்டத்தை பிரதமர் மோடி இன்று குஜராத் மாநிலத்தின் சபர்மதி ஆசிரமத்தில் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் 2022ம் வருடம் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான கொண்டாட்டம் 75 வாரங்கள் கோலாகலமாக நடைபெற உள்ளன. ‘ஆசாத் கா அம்ரித் மகோத்சவ்’ (சுதந்திரத்தின் அமிர்த மகா உற்சவம்) என்ற இந்த பெரும் கொண்டாட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு பூத்தூவி அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள மகாத்மா காந்தியின் படத்துக்கு மாலையிட்டார். அதைத் தொடர்ந்து ‘அபய் காட்டி’ –ல் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் கண்டு களித்தார். அங்கு, அமிர்த மகா உற்சவத்தை தொடங்கி வைத்தார்.

அம்ரித் மகோத்சவ் என்ற இணைய தளத்தை மோடி தொடங்கினார். பராம்பரிய வைவினை பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 40 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவும் விதமாக ஆத்ம நிர்பார் இன்குபேடர் என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக1930ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி சபர் மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி யாத்திரையை தொடங்கினார். 386 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அந்த யாத்திரையில் 78 பேர் கலந்து கொண்டனர். இதனைக் குறிக்கும் விதமாக 25 நாட்கள் செல்லக் கூடிய யாத்திரையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் 81 பேர் பாத யாத்திரை செல்கின்றனர்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றிய போது, “அம்ரித் மகோத்சவத்தின் முதல் நாள் இன்று. 15 ஆகஸ்ட் 2022க்கு 75 வாரங்கள் முன்பாக இந்த மகோத்சவம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கொண்டாட்டம் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15 வரைக்கும் தொடர்ந்து நடக்கும்.சபர்மதி ஆசிரமத்தில் இருந்து அந்தமான் நிக்கோபார் சிறைச்சாலை வரை, பஞ்சாபின் ஜாலியன் வாலாபாக் முதல் உத்திர பிரதேசத்தின் மீரட் வரை, இந்திய சுதந்திர போராட்டத்தின் மையங்களாகத் திகழ்ந்த முக்கிய நகரங்களில் இந்த நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சுதந்திர இந்தியாவின் கனவுகளையும் கடமைகளையும் நிறைவேற்ற 5 தூண்கள் நமக்கு ஊக்கமளிக்கும். சுதந்திர போராட்டம், 75வது ஆண்டில் நமது சிந்தனைகள், 75வது ஆண்டில் நமது சாதனைகள், செயல்பாடுகள், தீர்மானங்கள் ஆகியவையே அந்த தூண்கள்.

இந்த சுதந்திரத்தின் அமிர்த மகா உத்சவ கொண்டாட்டம், சுதந்திரத்தின் ஆற்றலை நமக்கு அளிக்கும் சிகிச்சை. சுதந்திர போராட்ட வீரர்களின் மூலம் உத்வேகம் பெற்று புதிய சிந்தனைகள், புதிய தீர்மானங்கள், தற்சார்பு குறித்து சாராம்சத்தை பெறுவதே இதன் நோக்கமாகும். நமது நாட்டில் உப்புக்கு எப்போதும் பண மதிப்பு இருந்தது இல்லை. உப்பு என்றால் நேர்மை என்று பொருள். உப்பு என்றால் விசுவாசம்.

சுதந்திர போராட்டத்தின் போது, உப்பு என்பது இந்தியாவின் தன்நம்பிக்கையின் சின்னமாக இருந்தது. நமது மதிப்பீடுகளோடு மட்டும் அல்லாமல், நமது தன் நம்பிக்கையையும் ஆங்கிலேயர்கள் புண்படுத்தினர்.இந்த தருணத்தில் மகாத்மா காந்திக்கும் சுதந்திர போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர்களுக்கும், தங்களது உயிரை தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.

சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டின் பாதுகாப்புக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். 75 ஆண்டுகளாக நாட்டை மறு கட்டமைத்த அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். பூரண சுயராஜ்யத்துக்காக போராடிய லோக மானியத் திலகரை இந்த நாடு எப்போதும் மறக்காது. மங்கல் பாண்டே, டாட்யா தோபே, ராணி லக்ஸ்மி பாய், சந்திரசேகர ஆசாத், பகத் சிங், பாண்டிட் நேரு, சர்தார் படேல், அம்பேத்கார்…. இன்னும் பலரிடம் இருந்து நாம் ஊக்கத்தை பெறுகிறோம்.”இவ்வாறு அவர் கூறினார்

முன்னதாக ஆசிரமத்தில் வைக்கப்பட்டு இருந்த குறிப்பேட்டில் பிரதமர் மோடி எழுதினார். அதில் இந்த மகோத்சவம், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு செய்யும் மரியாதை என்றும், இங்கிருந்து தான் மகாத்மா காந்தி தற்சார்பு மற்றும் தன் நம்பிக்கை செய்திகளை தெரிவித்துள்ளார் என்றும் மோடி எழுதினார்.

 

மகாத்மா காந்தியும் அவரது மனைவி கஸ்தூரிபாவும் 1918ம் ஆண்டு முதல் 1930ம் ஆண்டு வரை வாழ்ந்த ஹ்ரிதைய் குன்ஜ் வீட்டையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

Related Posts