24 வயது பெண்ணை அவரது தந்தையால் கட்டுப்படுத்த முடியாது!- சுப்ரீம் கோர்ட் கருத்து!

கேரளாவைச் சேர்ந்த ஷபீன் ஜஹான் என்பவர், அகிலா என்ற இந்து பெண்ணை காதல் திருமணம் செய்தார். அதன்பிறகு அவரது பெயர் ஹாதியா என மாற்றப்பட்டது. ஆனால் காதல் என்ற போர்வையில் திட்டமிட்டு இந்துப் பெண்ணை கட்டாயமாக மதம் மாற்றி திருமணம் செய்துள்ளார். மேலும் ஜகான் , ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர். எனவே இந்த திருமணம் செல்லாது என்று கூறி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த கேரள ஐகோர்ட் இந்த திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதன்பின்னர் தந்தையின் கட்டுப்பாட்டில் அந்த பெண் அனுப்பிவைக்கப்பட்டார்.
இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் ஜகான் அப்பீல் செய்தார். சுய விருப்பத்தின் பேரிலேயே அகிலா இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதை அவரே கூறியிருக்கிறார். ஆனால் கேரள ஐகோர்ட் தீர்ப்பானது பெண்களின் சுதந்திரத்துக்கு எதிரானது ஆகும். அவரது உரிமைகள் பறிக்கப்பட்டு அவரது விருப்பத்துக்கு மாறாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்று அப்பீலில் கூறிஇருந்தார்.
இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இது பற்றி தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) விசாரணை நடத்த உத்தரவிட்டனர். ஆனால் என்ஐஏ விசாரணை நேர்மையாக இருக்காது என்பதால் அதற்கு தடை விதிக்கவேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் ஜகான் ஒரு மனு தாக்கல் செய்தார். புதிய தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் இந்தமனுவை நேற்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஜகான் புதிய மனு மீது வருகிற 9ம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறினர். இந்துப்பெண்ணுடன் ஒரு முஸ்லிம் திருமணத்தை கேரள ஐகோர்ட் ரத்து செய்ய முடியுமா .. அரசியல் சாசனம் பிரிவு 226ன் கீழ் ஐகோர்ட்டுக்கு அதற்கான அதிகாரம் இருக்கிறதா… என்பதற்கு விடை கண்டாக வேண்டும். மேலும் இந்த வழக்கை விவரங்களை பார்க்கிற போது, 24 வயது பெண்ணை அவரது தந்தையால் கட்டுப்படுத்த முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் ஏற்கனவே ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் மணிந்தர்சிங் தற்போது தலைநகரில் இல்லை என்பதால் வழக்கை தள்ளி வைக்கவேண்டும் என்று இன்னொரு கூடுதல் சொலிசிடர்ஜெனரல் சந்திரசூட் கேட்டுக்கொண்டார். இதையடுத்து 9ம் தேதிக்கு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.