விசித்திரன் இசை வெளியீட்டு விழாத் துளிகள்!

விசித்திரன் இசை வெளியீட்டு விழாத் துளிகள்!

த்மகுமார் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் ஜோசப், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்ற இப்படம், தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் விசித்திரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்க, இயக்குநர் பாலா தயாரித்துள்ளார். மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே தமிழிலும் இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.விழாவில், தயாரிப்பாளர் தனஞ்செயன், இசை அமைப்பாளர்கள் ஜீ.வி. பிரகாஷ்குமார், ஶ்ரீகாந்த் தேவா, இயக்குநர் சீனு ராமசாமி, நடிகைகள் மதுஷாலினி, பூர்ணா, காவல்துறை முன்னாள் அதிகாரி ஜாங்கிட் உட்பட பலர் பேசினர்.

சக்தி பிலிம்ஸ் சக்திவேலன்பேசியது…

மலையாளத்தில பல அவார்டுகள் அள்ளி குவிச்ச படம், இத்தனை அவார்டு வாங்கின படத்த ரீமேக் பண்ண யாரும் யோசிப்பாங்க, அதிலும் பெஸ்ட் ஹீரோ அவார்ட் வாங்கின படம், அப்படி ஒரு படத்த தைரியாமா நல்ல படத்த கொடுக்கனுமுனு எடுத்துட்டு வந்திருக்காங்க. இந்த படத்தில் நடிக்க நிறைய தைரியம் இருக்கனும், சுரேஷ் எதையும் துணிந்து செய்வார். அவர் முதலில் நடிக்க போகிறேன் என்று என்னிடம் சொன்ன போது, ஏதோ ஒரு படம் ஆசைக்கு செய்வார் என நினைத்தேன், ஆனால் அவர் இன்று அடைந்திருக்கும் இடம், அவர் தேர்ந்தெடுத்த பாதை பெரியது. பாலா அண்ணனின் படத்தில் அறிமுகமாகி, இன்று ஜோசப்பில் நடித்திருக்கிறார். இயக்குநர் பத்மகுமார் அவர்களே இங்கும் இயக்கியிருப்பது படத்திற்கு பலம். ஜீவி உற்சாகமான இசையை தருபவர். அவரது இசை இந்தப்படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் சரவண சக்தி பேசியது…

அண்ணன் பாலா இயக்கத்தில் நடிக்க போகும் எல்லோரும் இந்த வருடம் நேஷனல் அவார்ட் நமக்குத்தான் என்று நினைத்து தான் போவார்கள். அது போல் பாலா அண்ணன் தயாரிப்பில் நடித்திருக்கும் சுரேஷ் நிறைய விருதுகள் வாங்குவார். ரீமேக் படத்தில் நடிக்கும் போது ஒரிஜினல் படத்தில் நடித்தவரை விட நன்றாக நடிக்க வேண்டும், சுரேஷ் இந்தப்படத்தில் அதை சாதித்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்

தயாரிப்பாளர் முரளி பேசியது…

சுரேஷ் இந்தப்படத்திற்கு எவ்வளவு உழைத்துள்ளார் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். பாலா சார் தயாரித்த பிசாசு படத்தை நாங்கள் தான் வெளியிட்டோம். தரமான படமாகவும் வசூல் குவித்த படமாகவும் இருந்தது. அதே போல் இந்த படமும் இருக்கும். ஜீவி பிரகாஷ் இசை எப்போதும் மனதை சாந்தப்படுத்தும் இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் நன்றி.

தயாரிப்பாளர் காட்ரகட்டா பிரசாத் பேசியது….

ஒரு படம் சூப்பர்ஹிட் என்பது படத்தை பார்த்தாலே தெரிந்துவிடும். மலையாளத்தில் ஏற்கனவே வெற்றி பெற்ற படம், அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமானவர் சுரேஷ். பிஸியான நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்தப்படம் இந்தியா முழுதும் எல்லா மொழிகளிலும் எடுக்கப்படுகிறது. கண்டிப்பாக இந்தப்படம் இங்கு பெரிய வெற்றி பெறும் நன்றி.

பகவதி பெருமாள் பேசியது…

சினிமா எப்பவும் எனக்கு ஆசிர்வாதம் செய்து கொண்டே தான் இருக்கும் இந்தப்படமும் எனக்கு ஆசிர்வாதம் தந்துள்ளது. இந்தப்படத்திற்கு அழைத்து, பாலா சார் பார்க்கனும் என்றார்கள், அவர் சொல்லியிருந்தால் உடனே செய்திருப்பேன் ஆனால் அவர் இந்த ரோல் நீங்க பண்ணினா நல்லா இருக்கும் பண்றீங்களா என்றார், சார் என்னிடம் இதெல்லாம் சொல்லாதீங்க சார், நீங்க சொன்னாலே செய்துவிடுவேன் என்றேன். அவர் தந்த வாய்ப்புக்கும் அவரது அன்புக்கும் நன்றி. பத்மகுமார் சார் ஒவ்வொரு காட்சிக்கும் அவர் வைத்துள்ள டீடெயிலிங் பிரமிப்பாக இருந்தது. அவர் முழு சுதந்திரம் தந்து நடிக்க வைத்தார், சுரேஷ் சாருக்கு மிக முக்கியமான படமாக இருக்கும் நன்றி.

நாயகி மது ஷாலினி பேசியது…

இந்த பாத்திரத்தை எனக்கு தந்ததற்காக, பத்மகுமார் சாருக்கு முதல் நன்றி. RK சுரேஷ் சார் இந்த படத்தில் பல தோற்றங்களில் வந்திருக்கிறார், ஒரு படத்தில் வேறு வேறு தோற்றத்தில் தோன்றுவது கடினம் ஆனால் அவர் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார். ஜீவி இசை அருமையாக இருக்கிறது. பாலா சார் என்னை ஞாபகம் வைத்து அழைத்து வாய்ப்பு தந்ததற்கு நன்றி சார், இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி

இயக்குநர் சீனு ராமசாமிபேசியது..

RK சுரேஷ் அப்பாவிடம் படம் எடுப்பதற்காக கதை சொல்லியுள்ளேன் ஆனால் அவர் சாமி படம் தான் எடுக்க போறேன், இந்தக்கதை எடுக்க முடியாது என்று சொல்லி எனக்கு 500 ரூபாய் பணம் தந்து அனுப்பினார். ஆனால் அதன் பிறகு தான் அவர் வள்ளல் என தெரியவந்தது. பின் அவர் மகன் என் படமான தர்மதுரை படத்தை எடுத்து, என்னை புகழ் பெற செய்தார். தந்தை இல்லாத மகனுக்கு தமையனே தந்தையாக அவரை பார்த்துக்கொள்கிறார் அண்ணன் பாலா. உங்களுக்கு கிடைக்கும் ஆசிர்வாதம் எல்லாம் உங்கள் தந்தையின் புண்ணியம் தான். ஒரு வில்லனை நாயகனாக ஆக்குவது தமிழ் சினிமாவில் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் இந்தப்படத்தை பார்க்கும் போது சுரேஷின் கண்களில் ஒரு அன்பு தெரிகிறது அவருக்கு நடிப்பு சிறப்பாக வருகிறது. அவர் அதை கெட்டியாக பிடித்துகொள்ள வேண்டும். இயக்குநர் நன்றாக இயக்கியிருக்கிறார்.
ஜீவி பிரகாஷ் இசை கேட்க அற்புதமாக இருக்கிறது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என நான் நம்புகிறேன் நன்றி.

ஜீவி பிரகாஷ் பேசியது..

பாலா சாரின் B Studios உடன், வேலை பார்க்கும் மூனாவது படம். என்னை கமிட் பண்ணும் போது ஜோசப் பற்றி எனக்கு தெரியாது. அதன் பிறகு தான் பார்த்தேன் பத்மகுமாரின் இயக்கம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அவரது காட்சிகளை பார்த்துதான் இசையமைத்தேன். சுரேஷ், பூர்ணா எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள், இந்தப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியது..

ஜோசப் படத்தோட ரீமேக் என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் இது அப்படியில்லை. அதை அப்படியே ரீமேக் மாதிரி செய்யாமல், நிறைய காட்சிகளை இதில் சேர்த்து ஒரு புதுப்படம் போல அருமையான நடிகர்களோடு கொண்டு வந்துள்ளார்கள். முதலில் இந்தப்படம் பாத்தவுடனே நானும் ரீமேக் பண்ண ஆசைப்பட்டேன். ஆனால் சுரேஷ் நான் பண்றேன் அண்ணா என்றார். வில்லனாக நடிக்கும் அவர் எப்படி இந்த பாத்திரம் செய்வார் என நினைத்தேன், ஆனால் அவர் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார், அவருக்கு வாழ்த்துக்கள். பாலா அண்ணன் இந்த நல்ல படத்தை தமிழுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

நடிகை பூர்ணா பேசியது…

ஒரு இடைவேளைக்கு பிறகு ஒரு நல்ல படத்தில் வருவது மிக சந்தோஷமாக இருக்கிறது. பாலா சார் தயாரிப்பில் நடிப்பது மகிழ்ச்சி ஆனால் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும், பாலா சார் வாய்ப்பு தாருங்கள். ஜோசப் மலையாளத்தில் ஒரு மைல்கல் படம் பத்மகுமார் அட்டகாசமாக இயக்கியிருந்தார். அவர் எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. சுரேஷ் இந்தப்படத்தில் கடுமையாக உழைத்துள்ளார், அவர் நடிப்பால் நானும் நன்றாக நடித்திருக்கிறேன். ஜீவி இசையில் நடிக்க வேண்டும் என்பது ஆசை இந்தப்படத்தில் இரண்டு பாடலில் நடித்துள்ளேன், அனைவருக்கும் நன்றி.

காவல்துறை அதிகாரி ஜாங்கிட் பேசியது…

சுரேஷ் நல்ல நண்பர், அவர் மிக நல்ல மனிதர். அவர் நடித்ததில் இந்தப்படம் மிகச்சிறப்பான படமாக உள்ளது. அவர் இன்னும் பெரிய இடங்களுக்கு செல்ல வாழ்த்துக்கள்.

இயக்குநர் பத்மகுமார் பேசியது..

என் வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாள். சென்னையில் உதவி இயக்குநர் வாய்ப்புக்காக அலைந்த நாளில், என் படத்திற்காக மேடை ஏறுவேன் என நான் நினைக்கவில்லை. அதற்கு இரண்டு பேருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். பாலா சார் மற்றும் நடிகன் சுரேஷ் இருவருக்கும் பெரிய நன்றி. இந்தப்படம் இரண்டு வருட பயணம் என் குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் பாலா பேசியது,

மலையாளத்தில் இந்தப் படத்தை பார்த்துவிட்டு ரீமேக் செய்யலாம் என்று நினைத்தபோது இந்தப் படத்தில் நான் நடிக்கட்டுமா என்று ஆர்.கே.சுரேஷ் விரும்பி கேட்டார். நானும் சரி என்று கூறிவிட்டு மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரையே தமிழிலும் இயக்க ஒப்பந்தம் செய்தோம். மலையாளத்தில்கூட பட்ஜெட் பிரச்சனை ஏதாவது உங்களுக்கு இருந்திருக்கலாம். இங்கு அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் நீங்கள் படம் எடுங்கள் என்றேன். அங்கு எதையெல்லாம் பண்ண முடியவில்லையோ அதையும் சேர்த்து பண்ணுங்கள் என்றேன். மலையாளத்தைவிட தமிழில் சிறப்பாக படம் வந்துள்ளது. ஜி.வி.பிரகாஷின் இசையும் யுகபாரதியின் வரிகளும் படத்திற்கு பக்கபலமாக உள்ளன. படம் எடுத்துவிட்டு இறுதியாக பார்க்கும்போது படம் நன்றாக வரவில்லை என்றால் என்னுடைய பெயரையும் என் கம்பெனி பெயரையும் போடாதீர்கள் என்று கூறிவிடுவேன். ஆனால், இந்தப் படத்தை பார்த்துவிட்டு பெயர் போடுங்கள் என்று நானே கூறினேன். ஆர்.கே.சுரேஷ் உருப்படியாக ஒரு படம் பண்ணிவிட்டார். ஏதாவது கோமாளித்தனம் செய்கிற மாதிரி அடுத்தடுத்து படங்கள் பண்ணாமல் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் படம் மூலம் அவருக்கு மரியாதை கிடைக்கும். அந்த மரியாதையை காப்பாற்றிக்கொள்ள வேண்டியது அவருக்கு இருக்கும் சவாலான விஷயம்” எனப் பேசினார்.

நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசியது,

“சீமானுடன் அமீரா படம் பண்ணும்போதுதான் ஜோசப் படத்தை நான் பார்த்தேன். படத்தை பார்த்துவிட்டு சீமானிடம் சென்று அண்ணன் ஜோசப் என்று ஒரு படம் பார்த்தேன். இரண்டு நாட்களாக தூக்கம் வரவில்லை. அந்தப் படத்தின் உரிமையை வாங்கி நான் நடிக்க வேண்டும் என்றேன். அமீரா படத்தின் படப்பிடிப்பை முடித்தபிறகு சென்னை வந்து இயக்குநர் பாலாவை சென்று சந்தித்து இது பற்றி கூறினேன். அவர் நான் படம் பார்த்துவிட்டு கூறுகிறேன் என்றார். படம் பார்த்துவிட்டு, படம் நன்றாக இருக்கிறது. இந்தப் படம் பண்ண வேண்டுமென்றால் நீ சில விஷயங்கள் செய்தாக வேண்டும் என்றார். அதன் பிறகு, இந்தப் படத்திற்காக 29 கிலோ உடல் எடையைக் கூட்டியிருந்தேன். அந்தக் கதாபாத்திரத்தின் உடல்மொழி சரியாக வரவேண்டும் என்பதற்காக இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்துக்கொண்டு மெதுவாக நடப்பேன். ஒருநாளைக்கு பத்து முறையாவது இயக்குநர் என்னை இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வைத்துவிடுவார். அதை நான் கஷ்டமாக பார்க்கவில்லை. ஏனென்றால் சினிமாவில் சூர்யா, அஜித், விக்ரம், விஜய் படாத கஷ்டமே இல்லை. இந்த உழைப்பை நாம் கொடுத்தால்தான் சினிமா நமக்கு அங்கீகாரம் கொடுக்கும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு நடித்தேன்” எனக் கூறினார்.

Related Posts

error: Content is protected !!