காற்று மாசுபாடு அதிகமுள்ள நகரம் ! – டெல்லியை மிஞ்சியது நம்ம சென்னை!

காற்று மாசுபாடு அதிகமுள்ள நகரம் ! – டெல்லியை மிஞ்சியது நம்ம சென்னை!

உலகில் அதிகம் மாசுபட்டுள்ள 20 நகரங்களில் 13 இந்தியாவில் உள்ளது என சமீபத்திய உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. மேலும் காற்று மாசுபாடானது குழந்தைகளின் சுவாச திறனை பாதிப்பதை கண்டறியும் வகையில் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் 8 முதல் 14 வயது வரையிலான 2 ஆயிரம் பள்ளி மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.இந்தியாவில் நான்கு நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்திய நகரங்களில் படிக்கும் பள்ளி குழந்தைகளில் 35 சதவீதத்தினர் நுரையீரல் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நம்நாட்டிலேயே அதிக அளவு காற்று மாசுபாடு நிறைந்த நகரம் டெல்லிதான் என அனைவரும் தெரிவித்து வந்தனர்.ஆனால் உண்மையில் காற்று மாசுபாடு அதிகமுள்ள நகரம் சென்னையே என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
chennai pollution july 16
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் நடத்தப்பட்ட காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் ஆய்வில் கான்பூர், வாரணாசி, சென்னை ஆகியன அதிக மாசுபாடு நிறைந்த நகரங்களாக உள்ளன. நாட்டில் உள்ள முக்கியமான 10 மாசுபாட்டு கண்காணிப்பு நிலையங்களில் அளிக்கப்பட்ட ஆய்வில், டில்லியை விட சென்னை, கான்பூர் நகரங்களில் தான் காற்றின் தரம் மிக மோசமாக இருந்து வருவது தெரிய வந்துள்ளது.

முன்னரே இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக பெரும்பாலான மக்களின் வாழ்நாள் சராசரியாக 3 ஆண்டுகள் வரை குறைவதாக வெளியான ஆய்வு முடிவு இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் காற்றின் தூய்மை மற்றும் மாசுபடுதல் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்த அமெரிக்காவின் ஹார்வர்டு, சிகாகோ மற்றும் யாலே பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொருளாதார வல்லுனர்கள் தங்கள் ஆய்வு முடிவுகளை எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி பத்திரிக்கையில் வெளியிட்டனர். அதில், மொத்த இந்தியர்களில் சுமார் 66 கோடி பேர் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் தமது வாழ்நாளில் 3 ஆண்டுகள் வரை இழப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா சராசரியாக 21 கோடி மனித ஆயுள் ஆண்டுகளை இழப்பதாக குறிப்பிட்டுள்ள ஆய்வாளர்கள், இந்தியாவின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி திறன் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே உயிர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நச்சு பொருட்கள் காற்றில் இருக்கும் அளவைக் கொண்டு இப்போதைய புள்ளிவிபர அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை, லக்னோ, நாக்பூர் ஆகிய நகரங்களில் நச்சு பொருட்களின் அளவு அதிகம் உள்ளதால் இந்த நகரங்களில் வசிக்கும் மக்கள் நுரையீரல் மற்றும் இதய நோய்கள் அதிகம் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. காற்று மாசுபாடு அதிகம் நிறைந்த நகரங்களில் முதல் இடத்தில் சென்னையும், 2வது இடத்தில் லக்னோவும், 3வது இடத்தில் டில்லியும், 4வது இடத்தில் மேற்கு லக்னோவும், 5வது இடத்தில் கான்பூரும் உள்ளன.

Related Posts

error: Content is protected !!