அஞ்சல் துறை மூலம் கோவில்பட்டி கடலை மிட்டாய் விநியோகம் தொடங்கியது!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கடலைமிட்டாய்க்கு சிறப்பு பெற்றது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் மானவாரி கரிசல் பூமியில் விளையும் நிலக்கடலைக்கு தனிச்சுவை உண்டு. இயற்கையிலேயே அதிக இனிப்புச்சுவை உடைய நிலக்கடலையைக் கொண்டு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய்கள், அதன் சுவையால் உலகப் பிரசித்தி பெற்றவை. நிலக் கடலைகளை ஆற்றுமணலுடன் சேர்த்து வறுத்து, அதன் தோலை நீக்கிய பின்னர், கம்பிப் பதத்திலான வெல்லப்பாகுடன் கலந்து, தட்டையாக்கி சதுரம், அரைச் சதுர வடிவில் வெட்டி எடுக்கின்றனர். இதே பதத்தில், உருண்டை பிடித்து கடலை உருண்டையும் செய்வார்கள். ஆனால், கடலைமிட்டாய்தான் இங்கு பிரசித்தி பெற்றது. இந்தக் கடலை மிட்டாய்கள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, பண்டல்களாக அடுக்கி வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில்பட்டி நகருக்குள் எந்தத் தெருவுக்குள் சென்றாலும் நிலக்கடலை வறுக்கும் மணத்தையும் கடலையுடன் வெல்லப்பாகு கலக்கும் மணத்தையும் நுகராமல் வெளியே வரமுடியாது. கோவில்பட்டி பகுதியில் திருமணத் தாம்பூல பைகளில் கடலைமிட்டாய்தான் போட்டுக் கொடுப்பார்கள். இப்பகுதியில் திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும் மணமகளுக்கு, புதுப் பானையில் சீனி, பூந்தி, லட்டு போன்ற இனிப்பு பண்டங்களுக்குப் பதிலாக கடலைமிட்டாயைத்தான் போட்டு அனுப்பி வைப்பார்கள்.
அப்படியாப்பட்ட கோவில்பட்டி கடலை மிட்டாயை இந்தியா முழுவதும் எந்த இடத்தில் இருந்தும் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ள அஞ்சல்துறை மூலம்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பழனி பஞ்சாமிர்தம் அஞ்சலகங்கள் வழியாக அறநிலையத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று புவிசார் குறியீடு பெற்ற உணவு பண்டமான கடலைமிட்டாயை விற்பனை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் அஞ்சலகம் மூலம் ஆர்டர்கள் பெறப்பட்டு, இன்று முதல் கடலைமிட்டாய்களை அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.இதனால் கோவில்பட்டி கடலை மிட்டாய் இனி தபால்துறை மூலம் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலிலேயே கொண்டு சேர்க்கப்படும். இந்தியாவின் எந்த தபால் நிலையத்திலும் ரூ.390 செலுத்தி ஆர்டர் செய்தால் அது கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் இணையம் மூலம் பெறப்பட்டு அடுத்த ஓரிரு நாட்களில் அவர்கள் வீட்டிற்கே விரைவு தபால் மூலம் கொண்டு சேர்க்கப்படும். விரைவு தபாலுக்கென தனி கட்டணம் கிடையாது.