புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒடிடியில் ஒளிபரப்பு!- கமல் தகவல்!

புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒடிடியில்  ஒளிபரப்பு!- கமல் தகவல்!

ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் புத்தம் புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவுள்ளது பற்றிய அறிவிப்பை விஜய் தொலைகாட்சி வெளியிட்டுள்ளது.

விஜய் தொலைகாட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. 2017-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் ராஜு ஜெயமோகன், இமான் அண்ணாச்சி, பிரியங்கா, தாமரை செல்வி, அக்‌ஷரா, நிரூப், சிபி சந்திரன், வருண் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். அமீர், சஞ்சீவ் உள்ளிட்டோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர். இவர்களில் ராஜு, பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் ஆகிய ஐந்து பேரும் இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கடந்த 105 நாட்களாக நடைபெற்று வந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமையுடன் (ஜன 15) நிறைவடைந்தது. இதில் ராஜு ஜெயமோகன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது பிரத்யேகமாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவுள்ள புதிய பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிய அறிவிப்பையும், அதற்கான ப்ரோமோவையும் விஜய் தொலைகாட்சி வெளியிட்டுள்ளது. ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களிருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் தளத்தில் 24/7 ஒளிபரப்பாகவுள்ளது. இதில் பழைய போட்டியாளர்களான ஓவியா, பரணி உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் போட்டியாளர்கள் யார் யார் என்பது நிகழ்ச்சி தொடங்கிய பின்புதான் தெரியவரும். வழக்கம்போல இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார்.

இது குறித்து நடிகர் கமல்ஹாசன், “பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் OTT பதிப்பு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் உள்ளது. OTT பதிப்பையும் தொகுத்து வழங்குவதன் மூலம் தொடர்ந்து உங்களுடன் தொடர்பில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த புதிய வடிவத்தை இப்போது 24/7 நேரமும் காணலாம். இந்த புதிய அனுபவம் உங்களுக்கு புத்துணர்ச்சியூட்டுவதாகவும் சுவாரஸ்யமானதாகும் இருக்குமென நான் 100% நம்பிக்கை கொண்டுள்ளேன்” என தெரிவித்தார்.

error: Content is protected !!