கூரியர் மூலம் போதைப் பொருள் கடத்தல் – சென்னைப் போலீஸ் கிடுக்கிப்பிடி!

கூரியர் மூலம் போதைப் பொருள் கடத்தல் – சென்னைப் போலீஸ் கிடுக்கிப்பிடி!

நாடெங்கும் போதைப் பொருட்களை கடத்தும் கும்பல், கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்களை இதற்காக பயன் படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தடுக்கும் வகையில் சென்னை பெருநகர காவல்அதிகாரிகள், சென்னையிலுள்ள உள்ளூர், உள்நாட்டு மற்றும் சர்வதேச கூரியர் மற்றும் பார்சல் நிறுவன நிர்வாக அதிகாரிகளின் கலந்தாய்வு கூட்டத்தை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடத்தினர். கூடுதல் காவல் ஆணையர்கள் டி.செந்தில்குமார் (வடக்கு), என்.கண்ணன்(தெற்கு) ஆகியோர் இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கினர். இதற்கு முன்னரே சென்னை காவல்துறை சார்பில் ‘டிரைவ் அகைன்ஸ்ட் டிரக்ஸ் ஆபரேஷன்’ என்ற இயக்கம் தொடங்கப்பட்டு, போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அண்மையில் போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரையின்றி விற்பனை செய்தால் மருத்தக உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாகவே உள்ளூர், உள்நாட்டு, பன்னாட்டு கூரியர் பார்சல் சேவை நிறுவன நிர்வாக அலுவலர்களுடன், கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதன்படி, பார்சல்கள் பதிவு செய்யும்போது அனுப்புநர் மற்றும் பெறுநர் ஆகியோரின் முகவரி அடையாள ஆவணங்கள் சரிபார்த்த பின்னரே பார்சல்கள் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட விவரங்களை குறைந்தபட்சம் 3ஆண்டுகளுக்கு பாதுகாக்க இபதிவு மூலம் பதிவு செய்து வைக்க வேண்டும். இந்த விவரங்களை தேவைபடும்போது காவல் துறைக்கு வழங்கவேண்டும்.

கூரியர் மைய அலுவலகங்களில் ஸ்கேனர் கருவிகள் மூலம் பார்சல்களில் போதைப் பொருட்கள் போன்ற சட்டவிரோத பொருட்கள் உள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும். அனைத்து கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்களில் உட்புறமும் வெளிப்புறமும் கட்டாயமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்திருக்க வேண்டும். சிசிடிவி பதிவுகளை குறைந்தபட்சம் 30 நாட்கள் பாதுகாக்க வேண்டும். டெலிவரியின்போது பெறுநர் பெயர் கொண்டவரே பார்சலை பெறுகிறாரா என்பதை சரிபார்த்து வழங்க வேண்டும்.

விமானம், பேருந்து, ரயில் வழியாகப் பார்சல்கள் அனுப்பப்படுவதால் கவனமாக செயல்பட வேண்டும். பார்சல்களில் சந்தேகத்திற்குரிய பொருள்கள், சட்டவிரோதப் பொருள்கள் இருப்பது தெரியவந்தால் உடனே காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்க வேண்டும். காவல் துறையின் இந்த அறிவுரைகளை மீறும் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!