நீக்கப்பட்ட வேளாண் சட்டங்கள்..! இழப்பு யாருக்கு? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

பொது முடக்கம் நிகழ்ந்தபோது அரசு பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டது. அதில் ஒன்றுதான் மூன்று வேளாண் சட்டங்கள். அவற்றில் பல முக்கிய அம்சங்கள் இருந்தாலும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை படிப்படியாக நீக்கப்படும் என்பது போலத் தோற்றமளிக்கும் அம்சமே இன்று டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு வித்திட்டது. குறைந்தபட்ச ஆதரவு விலை விடுதலை அடைந்தப் பின்னர் ஏற்பட்ட உணவு தானிய பற்றாக்குறையைப் போக்குவதற்காகக் கொண்டுவரப்பட்டது. பின்னர் பசுமைப் புரட்சி நடைமுறைக்கு வந்தப்போது விவசாயிகளுக்கு செலவை ஈடுகட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை ஏற்படுத்தப்பட்டது. அதன் பிறகு அது நிலைத்துவிட்டது. இன்று ஒவ்வொரு விவசாயியிடமும் 1.15 ஹெக்டேர் நிலம் அதாவது ஏறக்குறைய 3 ஏக்கர் நிலம் இருப்பதாக அரசு புள்ளி விவரம் கூறுகிறது. இதைக் கொண்டு எந்தவொரு விவசாயியியும் இலாபம் ஈட்ட இயலாது. காரணம் உள்ளீட்டுப் பொருட்களுக்கான செலவு, கூலிச் செலவு, போக்குவரத்துச் செலவு போன்றவை கிடைக்கிற குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிகம். அதாவது இலாபம் என்பதே இருக்காது. அப்படியே இருந்தாலும் மிகக் குறைவானதாகவே இருக்கும். இதனால் விவசாயிகள் வேளாண்மையை துறந்து நகர்புறங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். இல்லையென்றால் மொத்தக் குடும்பமும் பயிரிட்டு, பாடுபட்டு அதன் மூலம் செலவுகளைக் குறைத்து ஏதேனும் இலாபம் பார்க்க வேண்டும்.
சரி, விவசாயிகளுக்கு இலாபமில்லை. நுகர்வோருக்கும் விலைவாசி அதிகம். அப்போது யாருக்குத்தான் இலாபம் என்றால் இடைத்தரகர்களுக்குத்தான் இலாபம். அரசு கொள்முதல் நிலையங்களிலேயே இடைத்தரகர்கள் உரிமம் பெற்றுக்கொண்டு இருப்பார்கள். இல்லை, நேரடியாக விவசாயிகளிடம் முன் பணம் கொடுத்து உற்பத்தியான உணவுப் பொருட்களை அப்படியே வாங்கிக் கொள்வார்கள். ஆனால் விலை அவர்கள் சொல்வதுதான். அரசு கொடுக்கும் விலையும் சரி, இடைத்தரகர்களின் விலையும் சரி விவசாயியின் உழைப்பிற்கு நியாயம் சேர்ப்பதில்லை. இதற்காக மத்திய அரசு விவசாயி தனது உற்பத்திப் பொருளை அரசு கொள்முதல் நிலையங்களிலும் விற்கலாம்; தனியாரிடமும் விற்கலாம் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதனால் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரத்தான் செய்யும்.
மேலும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டால் அதைத் தீர்க்க அரசிடம் தானியக் கையிருப்பு வேண்டுமே? அதற்காக கொள்முதல் தேவை. விவசாயி ஏன் உடனடியாக தனது உற்பத்திப் பொருளை விற்க வேண்டும் என்றால் சேமிக்க தானியக்கிடங்குள் இல்லை. இவற்றை அமைக்க தனியார் கூட்டுறவை அரசு நாடி அதன்படி இந்திய உணவுக் கழகத்திற்காக அம்பானி, அதானி போன்ற பெரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. விவசாய சட்டங்களை எதிர்ப்பவர்கள் அரசு விவசாயத்தை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் மாற்று திட்டம் என்ன? ஒவ்வொரு ஊராட்சியிலும் பயிர் வகைகள், சாகுபடி பரப்பு, விளைச்சல் அளவு இவற்றைக் கணக்கிட்டு கிடங்குகளை அமைக்கலாம். ஆனாலும் இதற்கும் ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டுமே? அதற்குப் பதிலாக பிரம்மாண்ட உணவுக் கிடங்குகளை தனியாரிடம் அமைக்கச் சொல்வதில் என்னத்தவறு இருக்கிறது?
புதிய சட்டப்படி விவசாயி இந்தியா முழுதும் எங்கு வேண்டுமானாலும் தன் விளைச்சலை விற்பனை செய்துக் கொள்ளலாம் என்று புதிய சட்டம் சொல்கிறது. இதற்காக ஏற்கனவே இணையதளங்கள் (ஈ-நாம்) செயல்படுகின்றன. அதில் விலை விவரங்கள் இருக்கும். மேலும் விவசாயிகளிடம் நேரடியாக உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் ஒப்பந்த முறையில் சாகுபடி செய்யவும் இச்சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது. இதில் விவசாயி ஏமாற்றப்படலாம் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. சட்டத்தில் விவசாயி ஒப்பந்தம் செய்யும் போது குறிப்பிடும் விலைக்கே நிறுவனம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக அரசு சொல்கிறது. விலை ஏறினாலும் சரி, குறைந்தாலும் சரி முன் கூட்டியே நிர்ணயித்த விலைக்கே நிறுவனம் வாங்கிக்கொள்ள வேண்டும்.
எனவே விவசாயி இழப்பதற்கு ஒன்றுமில்லை. இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய விஷயம். கொள்முதல் நிலையங்களில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பதாகும். பஞ்சாப் மாநிலத்தில் இக்கட்டண முறையால் அரசுக்கு ஆண்டிற்கு சுமார் 3,000 கோடி ரூபாய் வரவுள்ளது. இடைத்தரகர்களுக்கும் இதில் சுமார் 1500 கோடி ரூபாய் வரவுள்ளது. எனவே கட்டணம் கூடாது என்றால் இதை இத்தனை நாளாக நம்பியிருந்த அரசிற்கும், தரகர்களுக்கும் கடும் இழப்பு. விவசாயிகளின் போராட்டித்தின் பின்னால் கட்டண முறையால் பலனடைந்த அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள் இருப்பதாக சட்டத்திற்கு ஆதரவாகப் பேசுவோர் கூறுகின்றனர். இதை பஞ்சாப் அரசோ, இடைத்தரகர்களோ மறுக்கவில்லை. அதே போல ஹரியாணா விவசாயிகளும் போராடுகின்றனர். உத்தரபிரதேசத்திலும், இராஜஸ்தானிலும் சில விவசாய சங்கங்கள் போராடுகின்றன. மத்தியப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் அரசு கொள்முதல் நிலையங்கள் நடைமுறையில் இல்லை.
நெருக்கடி நிலைக்காலத்திற்குப் பிறகு பதவியேற்ற ஜனதா அரசு இந்தியா முழுவதையும் ஒரே விவசாய சந்தையாக மாற்றியது. அதாவது மாநில எல்லைகளுக்கு வெளியே விவசாயிகளால் உற்பத்திப் பொருளை விற்க முடியும். இதனால் விலைவாசி கட்டுக்குள் வந்தது மட்டுமின்றி ஜனதா சாப்பாடு எனும் மலிவு விலை உணவு முறையும் கொண்டு வரப்பட்டது. இன்று அம்மா கேண்டீன் போன்ற திட்டங்களுக்கு முன்னுதாரணமே ஜனதா சாப்பாடுதான்! அன்றைய உணவு வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் பெயர் லால் கிஷன் அத்வானி! இன்றைக்கு மோடி ஜனதா அரசின் தொடர்ச்சியைத்தான் மேற்கொண்டுள்ளார். எதிர் காலத்தில் விவசாய சட்டங்கள் விலைவாசியைக் கட்டுக்குள் வைக்கும் வாய்ப்புண்டு.
இந்தியாவின் மற்றொரு அபாயம் ஊட்டச் சத்துக் குறைபாடு. கொரோனாவின் தாக்கத்தினால் உடனடியாக அரசு வழங்கியது ஊட்டச்சத்து மாத்திரைகள். ஏன்? வேதியியல் விவசாயத்தால் ஊட்டச் சத்துக் குறைபாடு ஏற்படுவதை பலகாலமாக நிபுணர்கள் சுட்டிக்காட்டி வந்துள்ளனர். ஒரு காலத்தில் அதிகளவில் தானிய வகைகள் பயிரிடப்பட்டு மக்கள் அவற்றை உண்ணும் பழக்கம் இருந்தது. இன்று தானிய வகைகளின் உற்பத்தியை அரசு ஊக்குவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதே போல பாரம்பரிய விவசாயத்தையும் பல மாநில அரசுகளும், மத்திய அரசும் முன்னிலைப் படுத்துகின்றன. இதன் மூலம் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
இந்திய அளவில் சுமார் 1.49 மில்லியன் ஹெக்டேரில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் 140-60 மில்லியன் ஹெக்டேரில் வேதியியல் விவசாயம் செய்யப்படுகிறது. எனவே மத்திய அரசு, வட கிழக்கு மாநிலங்கள், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இயற்கை வேளாண்மையை மீட்டெடுக்க முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்திய அளவில் 2020 ஆம் ஆண்டில் இயற்கை வேளாண் பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 12,000 கோடி வரை இருக்கலாம் என்றும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் வர்த்தக அமைப்பான அசோசம் அறிக்கை கூறியிருந்தது.
இப்படி பலவிதமான திட்டங்களின் மூலம் மத்திய அரசு விவசாயத்தை மேம்படுத்த முயற்சி செய்கிறது. இதற்கு ஆதரவான சூழலை ஏற்படுத்தவே மூன்று வேளாண் சட்டங்களும் கொண்டு வரப்பட்டன. ஆனால் அரசியல் எல்லாவற்றையும் மாற்றுகிறது. வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள், குறிப்பாக வட இந்தியாவின் முக்கிய விவசாய சமூகமான ஜாட் சமூகத்தினர் இச்சட்டங்களை எதிர்த்தனர். இவர்கள் அரசியல் ரீதியில் முக்கியமானவர்கள். உ.பியின் மேற்குப் பகுதியிலிருந்து, டெல்லி, ஹரியாணா, பஞ்சாப் மற்றும் இராஜஸ்தான் மாநிலம் வரையில் இவர்களுக்கு செல்வாக்கு உண்டு. ஹரியாணாவில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியிலுள்ள அஜய்சிங் சௌதாலாவின் (முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின் மகன்)ஜனநாயக் ஜனதா கட்சியும் வேளாண் சட்டங்களின் மீது அதிருப்தியில் இருந்தது. சுமார் 30 ஆண்டுகள் கூட்டணியில் இருந்த பஞ்சாப்பின் அகாலிதளம் வேளாண் சட்டங்களை காரணம் காட்டி மத்திய அமைச்சரவையிலிருந்தும், கூட்டணியிலிருந்தும் வெளியேறியது.
இந்த நிலையில் உ.பி, பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களுக்கும் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல்கள் வரவுள்ளன. வேளாண் சட்டங்களால் தங்களின் பெரும்பான்மை பாதிக்கப்படலாம் எனக்கருதிய பாஜக இப்போது பிரதமரை வற்புறுத்தி சட்டங்களை ரத்து செய்ய வைத்துள்ளனர். அத்துடன் உச்ச நீதிமன்றத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தீர்ப்பிற்காக காத்திருக்கின்றன. ஒருவேளை உச்ச நீதிமன்றம் சட்டங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தாலும் அரசு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து சட்டங்களை ரத்து செய்து விடலாம்.
அரசின் இந்த நடவடிக்கையின் பின்னால் ஏதேனும் வலுவான காரணங்கள் இருக்கலாம்; அரசியலும் கடந்து. பிரதமர் மோடி இயற்கை வேளாண்மையை அதிகம் ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறார். இரசாயன வேளாண்மையைக் கட்டுப்படுத்தி புவி வெப்பமடைதலைக் குறைக்கவே இப்போது சட்டங்களை திரும்பப்பெற்றிருக்கலாம். இல்லை கிடங்கு வசதிகள், சந்தைத் தகவல் அமைப்பு போன்றவற்றை மேம்படுத்துவதன் வாயிலாக விவசாயிகளின் வருமானத்தை நிலைப்படுத்தலாம். பிரதமர் தனது உரையில் சுட்டிக்காட்டியபடி பல விவசாய நலன் காக்கும் திட்டங்களுடன் வேளாண் சட்டங்களின் சில அம்சங்களை குறிப்பாக, நாடு முழுவதும் ஒரே சந்தை அதாவது விவசாயி தனது உற்பத்திப் பொருளை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்பது போன்றவற்றை தனிச்சட்டமாக கொண்டும் வரலாம். ஆக, சட்டங்களை திரும்பப் பெற்றதோடு இந்த விஷயம் முடியப்போவதில்லை.