தொலையெழுத்துப் பேசி தெரியுமா?

தொலையெழுத்துப் பேசி தெரியுமா?

பொதுவாக விளம்பரம் நோக்கிலான இணையதளங்கள் பற்றி நான் எழுதுவதில்லை. புதுமையான, பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்வதற்கான தேடலில் ஈடுபடும் போது, விளம்பர நோக்கிலான இணையதளங்களை கண்டறிந்து விலக்குவது முக்கிய திறன் எனும் போது இதில் பெருமிதம் கொள்ள எதுவுமில்லை. எனினும் இதை இங்கு குறிப்பிடுவதற்கான காரணம், விளம்பர நோக்கிலான இணையதளம் ஒன்றை இப்போது அறிமுகம் செய்ய இருப்பது தான்.

’அபவுட்டிடிஒய்’ (http://www.abouttty.com/ ) எனும் அந்த இணையதளம் பற்றி அறிமுகம் செய்வதற்கான காரணம், அது பொது நலன் நோக்கிலான தகவலை கொண்டிருப்பதும், விளம்பர நெடியை குறைக்கும் அளவுக்கு எளிமையாக அமைக்கப்பட்டிருப்பதும் தான்.

தளத்தின் பெயரில் இருந்தே, டிடிஒய் பற்றி விளக்குவதற்காக அமைக்கப்பட்ட தளம் என்பதை புரிந்து கொள்ளலாம். டிடிஒய் என்பது, எழுத்து வடிவிலான தொலைபேசியை குறிக்கிறது.

அதென்ன எழுத்து வடிவிலான தொலைபேசி என கேட்கலாம். பேசுவதற்கான கருவியான தொலைபேசியில், எழுத்து வடிவில் பேச வழி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட சாதனமாக இது அமைகிறது. செவித்திறன் குறைந்தவர்களுக்காக உருவாக்கப்பட்ட சாதனம் இது என்பது உங்களுக்கு புரிந்திருக்கலாம்.

தொலைபேசியை உரத்தக்குரலில் பேசுபவர்களை எல்லாம் பார்த்திருக்கிறோம். ஆனால், செவித்திறன் இல்லாதவர்கள் தொலைபேசியை பயன்படுத்த முடியாதது பற்றி யோசித்திருக்கிறோமா? இவர்களுக்காக உருவாக்கப்பட்ட சாதனம் தான் டிடிஒய். இந்த சாதனத்தில் பேச வேண்டியதை டைப் செய்தால் அது மறு முனையில் உள்ளவருக்கு பேச்சாக மாற்றப்படும். அதே போல மறுமுனையில் இருப்பவர் பேசுவது எழுத்து வடிவில் மாற்றப்பட்டு, சாதனத்தின் திரையில் தோன்றும்.

ஆக, செவித்திறன் இல்லாதவர்கள் இந்த சாதனத்தின் மூலம், எழுத்து வடிவில் தொலைபேசியில் பேசலாம். அந்த வகையில் இதை தொலையெழுத்துப்பேசி எனலாம்.

தொழில்நுட்ப பயன்பாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை தவறாமல் வலியுறுத்தப்படுகிறது. எந்த தொழில்நுட்பமும் இயல்பான மக்கள் மட்டும் அல்லாமல், மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு இணையதள பக்கம் அமைத்தால், அதில் உள்ள படங்களை பார்வை குறைபாடு உள்ளவர்களும் உணரும் வகையில், ஒலி குறிப்புகளை கொண்டிருக்க வேண்டும்.

எழுத்து தொலைபேசியும் இவ்விதமே அமைகிறது. செவித்திறன் குறைந்தவர்களும் தொலைபேசி உரையாடல் மூலம் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட இந்த சாதனம் வழி செய்கிறது.

உண்மையில் டெலிடைப்ரைட்டர் எனும் தொழில்நுட்ப சாதனத்தின் நீட்சியாக இது அமைகிறது. டெலிடைப்ரைட்டர் என்பது ஒரு வகையில் இன்றைய டிஜிட்டல் தகவல் தொடர்பு சாதனங்களின் முன்னோடி எனலாம். கம்ப்யூட்டர் மானிட்டர்களுக்கும் இந்த தொழில்நுட்பமே முன்னோடி.

தந்தி வடிவிலான தகவல்களை எழுத்து வடிவில் அச்சிட்டுக்கொள்வதற்கான இந்த மின்காந்த சாதனம் இதழியலில் டெலிபிரிண்டராக கோலோச்சியிருக்கிறது. இணையம் எல்லாம் வருவதற்கு முன் செய்திகளை உடனடியாக தெரிந்து கொள்வதற்கான வழியாக டெலிபிரிண்டர்கள் விளங்கின.

இதே தொழில்நுட்பத்தை, தொலைபேசி உரையாடலுக்காக பயன்படுத்தும் வகையில் எழுத்து தொலைபேசி உருவானது.

வியக்க வைக்கும் இந்த தொழில்நுட்பம் பற்றிய அடிப்படையான தகவல்களை அளிக்கும் வகையில் மேலே சொன்ன இணையதளம் அமைந்துள்ளது. டிடிஒய் என்றால் என்ன எனும் ஒரு பக்க விளக்கத்துடன், இந்த சாதனத்தை தேர்வு செய்வது எப்படி?, ஆன்லைன் ஷாப்பிங் வசதி மற்றும் கையேடுகள் ஆகிய மூன்று பகுதிகளை மட்டுமே கொண்டுள்ளது. மொத்த இணையதளமும் அவ்வளவு தான்.

தளத்தின் இந்த எளிமை தான் கவனிக்க வேண்டிய அம்சம். செவித்திறன் குறைந்தவர்கள் பயன்படுத்தும் தொலைபேசியை வாங்குவதற்கு வழிகாட்டும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது என எண்ண வைத்தாலும் இந்த தளம் விளம்பர நெடியே இல்லாமல் அடிப்படை தகவல்களை மட்டுமே அளிக்கிறது. இந்த தகவலும் பயனுள்ளதாக இருப்பதோடு, வர்த்தக நோக்கில் பயனுள்ள தகவல்களை தெளிவாக வழங்குகிறது. மற்றபடி எந்த விளம்பர குறுக்கீடுகளும் இல்லை.

ஒரு நல்ல இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆயிரம் உதாரணங்கள் இருக்கின்றன. ஒரு விளம்பர தளம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த தளம் நல்ல உதாரணம் அல்லவா!

சைபர்சிம்ஹன்

error: Content is protected !!