போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன்!

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கடந்த 3-ம் தேதி, கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது வரை, இந்த வழக்கில் மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த வழக்கில், ஆர்யன் கானும் அவருடன் கைது செய்யப்பட்ட அர்பாஸ் மெர்ச்சண்ட், தமாசா ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களைச் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மூன்று பேரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி நிதின் சாம்ப்ரே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

ஆர்யன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ஆஜராகி வாதாடினர். ஆர்யனிடமிருந்து போதைப்பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், அவர் போதைப்பொருள் உட்கொண்டார் என்பதை நிரூபிக்க எந்தவித மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படவில்லை என்றும், விதிகளை மீறி ஆர்யன் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் முகில் வாதிட்டார்.

ஆர்யன் கான் அர்பாஸ் மெர்ச்சண்ட் சார்பாக மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய் ஆஜராகி வாதாடினார். அவர், “போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கிரிமினல் சட்டப்பிரிவு 41-ஏ யின் விதிகளை மீறி சட்டவிரோதமாகக் கைது செய்திருக்கின்றனர். வாட்ஸ் அப் உரையாடல்களைச் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை முந்தைய தீர்ப்புகளில் உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது” என்று வாதிட்டார். போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அனில் சிங், மனுதாரர் புதிதாகப் போதைப்பொருள் பயன்படுத்துபவர் கிடையாது என்றும், இரண்டு ஆண்டுகளாகப் போதைப்பொருள் பயன்படுத்தி வந்திருக்கிறார் என்றும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிதின், ஆர்யன் உட்பட 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். விரிவான தீர்ப்பு விவரம் வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதனால், ஜாமீன் பெற்ற போதும் 3 பேரும் உடனே விடுதலை செய்யப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டு 25 நாள்கள் கழித்து ஜாமீன் கிடைத்திருக்கும் போதும், சிறையில் இருக்கும் ஆர்யன் உட்பட 3 பேரும் வெள்ளிக்கிழமைதான் சிறையிலிருந்து வெளியில் வர முடியும் என்று கூறப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!