தீபாவளி என்பது ராமன் அயோத்தி திரும்பிய நிகழ்வே!

தீபாவளி என்பது ராமன் அயோத்தி திரும்பிய நிகழ்வே!

உலகெல்லாம் தீபாவளி கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டன, உலகில் அதிக மக்கள் கொண்டாடும் பண்டிகையில் தீபாவளிக்கும் இடம் உண்டு., இந்தியா தாண்டி இந்துக்கள் இருக்குமிடமெல்லாம் கொண்டாடபடும் பிரமாண்ட பண்டிகை அது. இந்துக்கள் எந்த பண்டிகையினையும் கொண்டாடிவிட கூடாது என வரிந்து கட்டும் கும்பல் தமிழகத்தில் ஒரு நூற்றாண்டாகவே உண்டு, அவைகளுக்கு கொடுக்கபட்ட மூளைச்சலவை அப்படி, தன் கட்சி தலைவனின் வெற்றிக்கு வெடி போட்டு கொண்டே, தன் வெற்றிக்கு வெடி இட்டுகொண்டே, ஆலையும், பேருந்தும், ரயிலும் விமானமும் கக்கும் புகையினை பார்த்து கொண்டே தீபாவளிக்கு வெடி வெடிக்க கூடாது என்றெல்லாம் அவை அழிசாட்டியம் செய்யும். அவைகள் இப்பொழுது புதிய விவகாரத்தை தொடங்குகின்றன,

அவைகளுக்கு இது புதியவிவகாரமே அன்றி நல்ல இந்துக்களுக்கு இது குழப்பம் அல்ல‌ மத்திய அரசு தன் பாடதிட்டத்தில் ராமன் அயோத்திக்கு திரும்பிய நாளே தீபாவளி, அன்று மக்கள் தீபமேற்றி மகிழ்ந்தநாள் தீபாவளி என திருத்தம் செய்திருக்கின்றதாம், அதற்குத்தான் வரலாற்றை மாற்றுகின்றார்கள் என ஒப்பாரி வைக்கின்றது அந்த கோஷ்டி.நரகாசுரன் கொல்லபட்ட நாளே தீபாவளி என்பது ஒரு நம்பிக்கை என்றாலும் தீபாவளிக்கான உண்மையான காரணம் அதுவாக இருக்க முடியாது. காரணம் கிருஷ்ண‌னால் கொல்லபட்ட ஏகபட்ட அசுரர்கள் உண்டு. அது கம்சனில் தொடங்கி துரியோதனன் வரை நீளும். அப்படியே ராமாயணத்தில் தாடகை தொடங்கி ராவணன் வரை ராமன் வதைத்த பொல்லோர் கூட்டம் ஏராளம் உண்டு.

ஒரு அதர்மசக்தி அழிந்ததற்கு விழாவா என்றால் இங்கு ஏகபட்ட விழாக்கள் இருந்திருக்க வேண்டும், பத்மாசுரன், சூரபத்மன், சிங்கமுகன் என ஏகபட்ட அசுரர்கள் இருந்தார்கள், அவர்களெல்லாம் அழிந்த நாளை கொண்டாட வேண்டுமென்றால் அனுதினமும் தீபாவளிதான். இந்துமதத்தின் உயர்ந்த அடையாளமே அது யார் சாவிலும் மகிழாது, அதற்காக வருந்துமே தவிர கொண்டாடாது என்பதே. எல்லா அசுரனுக்கும் திருந்த எவ்வளவோ வாய்ப்புகளை கொடுத்து, அவன் திருந்த அவகாசமும் கொடுத்து, கடைசிவரை அவன் திருந்தா நிலையிலே அழிக்கபட்டனர். துரியோதனனுக்கு 14 வருட அவகாசமும், ராவணனுக்கு கடைசி நாளில் கூட கருணைகாட்டிய தர்மம் அது, ஒரு காலமும் அது தீயவனின் அழிவினில் மகிழாது. அப்படிமட்ட தர்மத்தில் நரகாசுரன் அழிந்தான் அதனால் கொண்டாட்டம் என்பதெல்லாம் பிற்கால மாறுதல்கள் அன்றி வேறல்ல‌. அது நரகாசுரன் சாவுக்கான கொண்டாட்டம் என்பதும் இங்கே மறுக்கபடுகின்றது.

உண்மையில் அது ராமபிரான் அயோத்தி திரும்பி முடிசூடிய நிகழ்வைத்தான் கொண்டாடும் பண்டிகை, ராமன் அயோத்தி திரும்பியபொழுது தீபங்களை வரிசையாக அடுக்கி மக்கள் நாட்டுக்கு ஒளிவந்தது என கொண்டாடி மகிழ்ந்தார்கள் அல்லவா? அந்த நிகழ்வே. விளக்கு என்றால் தீபம், ஆவளி என்றால் வரிசை. தீபங்களின் வரிசை தீபஆவளி என்றாகி தீபாவளி என்றாயிற்று. இதில் இடைக்கால குழப்பம் சமணர் வடிவில் வந்தது, அவர்களின் மகாவீரர் மோட்சமடைந்த நாள் அது அதனால் விளக்கு ஏற்றி கொண்டாட வேண்டும் என குழப்பினார்கள்.

உண்மையில் சமணம் இந்து தர்மத்துக்கு எதிரான குணம் கொண்ட மதம், அதாவது இந்து தர்மத்தை அழிக்க எதெல்லாம் உருவாகுமோ அதெல்லாம் இந்துக்களின் பல வழக்கங்களை மிக மோசமாக விமர்சிக்கும். இன்றைய கிறிஸ்த அழிச்சாட்டிய பாஸ்டர்களுக்கெல்லாம் சமணமே முன்னோடி .அந்த சமணர் குளிக்கமாட்டார்கள், விளக்கு வைக்க மாட்டார்கள் காரணம் குளித்தால் உடலில் உள்ள கிருமி சாகுமாம், விளக்கு வைத்தால் பூச்சிகள் வந்து சாகுமாம், உயிர்கொலை அவர்கள் செய்வதில்லையாம்.. ஆம், சமணர்களின் வழக்கம் இது.. அப்படிபட்ட சமணர்கள் மகாவீரருக்காக விளக்கு வைத்தார்கள் என்றால் அது நம்ப கூடியதா? ஆக அது சமணர் பண்டிகை எனும் வாதமும் அடிபடுகின்றது

நெருப்பினை கொண்டாடுதல் பண்டைய மரபில் உள்ள வழமை அது பார்சி, இந்துக்கள் என பல மக்களிடையே உண்டு, ஒளி என்பது ஞானத்தின் அடையாளம் என்பதால் விளக்கு அவசியம் என்பது இந்துக்கள் மரபு அந்த விளக்கினை ராமன் அயோத்திவந்ததும் ஒளி திரும்பிற்று என மகிழ்ச்சியாய் ஏற்றி வைத்து கொண்டாடினார்கள். இது இந்தியா முழுமையும் இருந்த நிகழ்வு, தமிழக கார்த்திகை தீபத்துக்கும் தீபாவளிக்கும் மிக சிறிய நாள் இடைவெளியே உண்டு என்பது கவனிக்கதக்கது. சமணம் பவுத்தம் பாதிப்புக்கு பின் இந்த இடைவெளி வந்திருக்கலாம், இல்லை அந்த தீபாவளி பண்டிகையின் தொடர்ச்சி இங்கு வேறு பெயரில் வந்திருக்கலாம்

எனினும் தீபம் எனும் அந்த அடிப்படை ஒற்றுமையினை நோக்கினால் உண்மை புரியும். தீபாவளிக்கு வெடி வெடித்தல் அவசியமா என்றால் அது இன்னும் ஆழமாக நோக்க வேண்டியது. இந்து தர்மம் என்பது இயமலைக்கு அப்பால் சீனத்திலும் பரவி இருந்தது, இடையில் புத்த கோஷ்டி அந்த இந்து தர்மத்தை குழப்பி போட்டாலும் இன்றும் இந்து கலாச்சாரத்தில் உள்ள ஆழமான வேர்களின் சாயலை அங்கே காண முடியும். தரையில் விளக்கு வைத்தது போல் வானத்தில் விளக்கு வைத்தால் என்ன அவர்கள் சிந்தித்ததுதான் வெடிபொருள், முதல் பட்டாசை அவர்கள்தான் உருவாக்கினார்கள். அதை கொண்டு வானவேடிக்கை நிகழ்த்தி பண்டிகைகளில் வேடிக்கையாக வானதீபம் காட்டினார்கள்
நாம் தீபாவளி கொண்டாடும் நேரம் அவர்களும் “கருணை கடவுளுக்கு” அதாவது நம் விஷ்ணு போன்ற ஒரு தெய்வத்துக்கு விழா எடுத்து பட்டாசு வெடிப்பதும் உண்டு. அந்த கலாச்சாரமேதான் தீபாவளி அன்று வானுக்கும் விளக்கு வைக்கின்றோம் என இங்கும் வந்தது, உற்சாகமான கொண்டாட்டத்தில் அதுவும் ஒரு வகை அதை மறுக்க முடியாது. (வெடிபொருளை வேடிக்கையாக பட்டாசுகளாக வெடித்து மகிழ்ந்த சமூகம் சீன சமூகம், பின்னாளில் மார்க்கோ போலோதான் அதை ஆயுதமாக மாற்றி அதில் இருந்து பீரங்கி எல்லாம் உருவானது)

இதனால் தீபாவளிக்கு வெடி வெடிப்பது மத்தாப்பு கொளுத்துவது எல்லாம் தடை செய்யபட வேண்டிய விஷயம் அல்ல, குழந்தைகளின் உற்சாகத்துக்கு அந்த நாளில் கூடுதல் வாய்ப்பினை கொடுத்தல் நல்லதே. பண்டிகைகள் தேச ஒற்றுமையும் சகோதரத்துவத்தையும் வளர்க்கும் வழிகள், அதில் குதர்க்கம் பிரிவினை குழப்பம் செய்வதெல்லாம் ஏற்று கொள்ள முடியாதவை. இங்கு தீபாவளி என்பது ராமன் அயோத்தி திரும்பிய நிகழ்வே என்பதில் சந்தேகமே இல்லை, ஒளி வந்தது என அந்த அயோத்தி மக்கள் கொண்டாடிய கொண்டாட்டமே தீபாவளியாக தொடர்ந்தது என்பது சந்தேகமற்ற விஷயம். அதை மத்திய அரசு பாடதிட்டத்தில் செய்திருந்தால் அதை வரவேற்கலாம், அது மிக சரியான விஷயம். மிக மிக பழமையான அந்த கொண்டாட்டம் தன் பல்லாயிரகணக்கான ஆண்டுகளில் சில திரிபினை கண்டிருந்தாலும் அதன் மூலம் ராமாயணத்தில் இருந்தேதான் தொடங்குகின்றது, எவ்வளவு காலங்கள் ஆனாலும் அதன் மூலத்தை சரியான வகையில் தேடினால் அங்குதான் முடிகின்றது

ஸ்டேன்லி ராஜன்

Related Posts