10,11,12 ஆகிய வகுப்புகளுக்குக் காலாண்டு & அரையாண்டுத் தேர்வுகள் கிடையாது!

10,11,12 ஆகிய வகுப்புகளுக்குக் காலாண்டு & அரையாண்டுத் தேர்வுகள் கிடையாது!

டப்பாண்டு கல்வி திட்டத்தில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தபடாது; ஆனால் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் மாதாந்திர ஆய்வு கூட்டம் நேற்று (அக்டோபர் 12) நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதுபோன்று இன்று (நேற்று) நடந்த கூட்டத்தில் பல முக்கிய திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. முக்கியமானது என்னவென்றால், நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளிகளைத் திறக்கும்போது மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஏற்கனவே 9-12 வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டபோது என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொண்டோம் என்பதை சிந்தித்தும், அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை வைத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யாரும் நம்மை கை நீட்டி குற்றம் சொல்ல முடியாத வகையிலும், குழந்தைகளின் மீதான உடல்நலனைக் கருத்தில் வைத்தும் அனைத்துவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நவம்பர் 1ஆம் தேதி 1-8 வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும்.

1-5 வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் பள்ளிகள் வைக்க வேண்டும் என உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. மாணவர்கள் எல்கேஜி, யூகேஜி வகுப்பிற்கு வராமல் நேரடியாக 1ஆம் வகுப்புக்கு வருகின்றனர். எனவே மாணவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் பெற்றோர்களை உடன் இருக்க சொல்கிறோம். பெற்றோர்கள் மாணவர்களை வகுப்பில் விட்டுவிட்டு வெளியே காத்திருக்கலாம். குழந்தைகள் நீண்ட நேரம் முகக்கவசம் அணிந்திருக்க முடியாது என்று நினைக்கும்போது பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து செல்லலாம். பெற்றோர்கள் விரும்பினால் ஒரு மணி நேரத்தில்கூட குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்லலாம். குழந்தைகளைப் பள்ளிக்கு வர பழக்கப்படுத்துவதற்காகதான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இனிமேல் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்குக் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் நடத்துவதற்கு வாய்ப்பில்லை. டிசம்பர் மாதத்தில் ஒருங்கிணைந்த முறையில் ஒரே ஒரு தேர்வை மட்டும் நடத்த திட்டமிட்டுள்ளது. இதுவும்கூட ஏன் என்றால், நேரடியாக மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும்போது, பதற்றம் அடையக் கூடாது என்பதற்காக இத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும். வழக்கமாக நடைபெறுகிற பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் ஆரம்பமாகும்.

உள்ளாட்சித் துறையின் மூலம் பள்ளிகளைத் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு 19 நாட்கள் இருப்பதால், அனைத்து பள்ளிகளையும் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன” என்று கூறினார்.

Related Posts

error: Content is protected !!