செந்தமிழிசை மீட்டெடுத்த ஆபிரகாம் பண்டிதர்!

செந்தமிழிசை மீட்டெடுத்த ஆபிரகாம் பண்டிதர்!

மிழிசைக் கலைஞர், படைப்பாளி, விவசாயி, சித்த மருத்துவர் எனப் பல துறைகளிலும் சகலகலா வல்லவராக திகழ்ந்த இந்த ஆபிரகாம் பண்டிதர் பெயரில் தஞ்சை நகரின் மையப்பகுதியில் உள்ள மிகவும் முதன்மையான சாலை,உள்ளது. அவர் யார்? ஏன் இந்தளவுக்கு இவருக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது? என்று இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானோருக்கு தெரியாது..

இன்று இவரது நினைவு நாளையொட்டியாவது அறிந்து கொள்வோமா?

ஆபிரகாம் பண்டிதர் திருநெல்வேலி மாவட்டத்தில், தென்காசியை அடுத்த சாம்பவார் வடகரை என்னும் ஊரில் பிறந்தவர். திண்டுக்கல்லில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்திலேயே புகைப்படக்கலை, அச்சுக்கலை, சோதிடம் கணிக்கும் கணக்கு முறை, இசைப் பயிற்சி, வேளாண்மை, சித்த மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் ஆழமாகக் கற்றுக்கொண்டார். சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ‘பண்டுவர்’ என்னும் பெயரே இவரின் இயற்பெயரான ஆபிரகாமுடன் இணைந்து பின்னாளில் ஆபிரகாம் பண்டிதர் ஆனது.

பண்டிதரும் அவரது துணைவியார் ஞானவடிவு இருவரும் தஞ்சையில் உள்ள லேடி நேப்பியர் பெண்கள் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்கள். சில ஆண்டுகளில், ஆசிரியர் பணியை விடுத்து, தனக்குத் தெரிந்த மற்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்துபார்க்கத் தொடங்கிவிட்டார் பண்டிதர். முதலில் சித்த வைத்தியப் பணிகளில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டார். தான் தயாரித்த சித்த மருந்துகளைத் தஞ்சையிலிருந்து வெளிநாடுகளுக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அந்தத் தொழிலில் வளர்ந்திருந்தார்.

தஞ்சாவூரின் புறநகர்ப் பகுதியில் 100 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் பெரிய மூலிகைப் பண்ணையை உருவாக்கினார். இன்றளவு தஞ்சை மக்கள் மத்தியில் அது பண்டிதர் தோட்டம் என நினைவுகூரப்படுகிறது. மூலிகைகளைப் பயன்படுத்தி ‘கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்’ என்ற பெயரில் பல்வேறு சித்த மருந்துகளைத் தயாரித்தார். இவர் தயாரித்த கோரசனை மாத்திரை, இந்தியாவில் மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரிட்டிஷ் அரசு இவரது சேவையைப் பாராட்டி ‘ராவ் பகதூர்’ பட்டம் வழங்கியது.

அதே போல் தனக்குத் தெரிந்த அச்சுத் தொழில் அறிவைக் கொண்டு தஞ்சையில் முதல் மின்இயந்திர அச்சுக்கூடத்தை (லாலி பிரஸ்) உருவாக்கியுள்ளார். அந்த அச்சுக்கூடத்தில்தான் சரியாக 101 ஆண்டுகளுக்கு முன்பாக 1917-ல் ‘கருணாமிருதசாகரம் முதல் புத்தகம்’ நூல் முழுவதுமாக அச்சிடப்பட்டது.

இரண்டு ஆண்டுகளிலேயே 1919 ஆகஸ்ட் 31-ல் ஆபிரகாம் பண்டிதர் காலமானார். அவர் இறப்பதற்கு முன்பாக அவர் எழுதிவைத்திருந்த இரண்டாம் நூலுக்கான குறிப்புகளைக் கொண்டு, அவரது பிள்ளைகள் 1946-ல் ‘கருணாமிருதசாகரம்’ இரண்டாவது நூலை வெளியிட்டுள்ளார்கள். முதல் நூல், தென்னிந்திய இசையின் சுருதி முறைகள் குறித்தது. இரண்டாவது நூல், ராகங்களைப் பற்றி ஆய்வுசெய்யும் நூலாகும்.

1892-ல் முதன்முதலாக சிலப்பதிகாரம் உ.வே.சா.வின் முன் முயற்சியால் அச்சு இயந்திரத்தில் பதிப்பித்து வெளியிடப்பட்டது. அதன் பிறகே சிலப்பதிகாரம் நூலை முழுவதும் படிக்கும் வாய்ப்பு பரவலானது. தமிழறிஞர்களால் சிலம்பின் இலக்கியச் சிறப்பை அறிந்துகொள்ள முடிந்தது.

ஆபிரகாம் பண்டிதருக்கோ தமிழும் தெரியும், இசையும் தெரியும். கூடவே, சோதிடக் கணக்கு முறையும் தெரியும். ஆகவே, அதில் உள்ள தமிழ்ச் செய்யுளோடு, அதிலிருந்த இசைக் கூறுகளையும் கண்டுணர முடிந்தது. ஆய்ச்சியர் குரவையில் ஏழு பெண்கள் ஆடிப் பாடும் காட்சி ஒன்று உண்டு. ஆபிரகாம் பண்டிதர் தனக்கிருந்த சோதிட அறிவைக்கொண்டு, ஏழு பெண்களை இசையின் ஏழு ஸ்வரங்களாகவும், அந்தப் பெண்கள் ஆயப்பாலையில் ஆடும் வடிவத்தை 12 ராசி வட்டமாகவும், அவ்வட்டத்தை 12 ஸ்வரஸ்தானங்களோடு இணைத்தும் சிலப்பதிகார இசை சூத்திரங்களின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக எளிதில் அவிழ்த்து தமிழுலகுக்குக் காட்டினார். பழந்தமிழ் இசை வடிவமே இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் இசைக்கப்படுகிறது என்பதை நிரூபிப்பதற்காக, முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டை தஞ்சாவூரில் நடத்தினார். 1912-ம் ஆண்டு ‘சங்கீத வித்யா மகாஜன சங்கத்தை’ நிறுவினார். சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசை குறித்த செய்திகள் இன்றைய கர்னாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதைப் பண்டிதர் சுட்டிக் காட்டினார். இதன்மூலம் தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்தார்.

ஐரோப்பிய இசைமேதை பேராசிரியர் தஞ்சை ஏ.ஜி.பிச்சைமுத்துவிடம் மேற்கத்திய இசை பயின்றார். இதை அடுத்து அதுவரை 22 சுருதிகள்தான் தென்னிந்திய இசையில் இருந்தது என்கிற கூற்றை மறுத்து, 12 ஸ்வரஸ்தானங்கள் 24 சுருதிகளாகவே வர முடியும் என்றும் 48, 96 என்று நுண்சுருதிகளாகவும் வளரும் ஆற்றல் கொண்டது இசைத் தமிழ் என்றும் நிறுவினார்.

இவ்வளவு சிக்கல் மிகுந்த விளக்கத்தைப் புரிந்துகொள்ள அது புத்தகமாக வர வேண்டும். பண்டிதருக்கு இருந்த அச்சுத்தொழில் அறிவாலே அது சாத்தியமானது. இவ்வளவையும் செய்யப் பணம் வேண்டுமே. அதற்காக, தனது மருத்துவத் தொழிலிலிருந்து ஈட்டிய மொத்த வருமானத்தையும் இசை ஆய்வுக்காகச் செலவுசெய்தார். தனக்குத் தெரிந்த பல்துறை அறிவையும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தியே, அறுபட்டுக் கிடந்த இசைத் தமிழின் தொடரைப் பண்டிதரால் மீண்டும் மீட்டுருவாக்கம் செய்ய முடிந்தது. அவற்றைக் கருணாமிருதசாகரம் என்னும் பெருநூலாகவும் தமிழ் உலகுக்குத் தர முடிந்தது.

Related Posts