கற்றது தமிழ் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படம் :சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் தற்போது தயாரித்து வரும் படம் மாநாடு. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், தனது அடுத்தத் தயாரிப்பு குறித்து இன்று சுரேஷ் காமாட்சி அறிவித்தார். ‘தென்னிந்திய சினிமாவின் பெருமைமிகு முகங்களுடன் ஒரு சிறந்த பயணத்தின் தொடக்கம்…’ என்ற குறிப்புடன் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் பட அறிவிப்பை வெளியிட்டார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அஞ்சலியும், சூரியும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ராமின் கடைசிப்படமான பேரன்பில் மம்முட்டி நடித்திருந்தார். பல விருதுகளை படம் வாங்கியது. இப்போது நிவின் பாலியை நாயகனாக வைத்து படம் இயக்குகிறார். நிவின் பாலியின் கடைசி தமிழ் படமான ரிச்சி சரியாக போகவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை ஒத்துக் கொண்டிருக்கிறார்.தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது. ராம் இயக்கத்தில் வெளியான முந்தைய படங்களைப் போலவே, இந்தப் படத்துக்கும் அவருடைய நெருங்கிய நண்பர் யுவன் இசையமைக்கவுள்ளார்.
ராம் இயக்கத்தில் நடிக்க ஆவலுடன் உள்ளதாக நிவின் பாலி கூறியுள்ளார்.