பொருளாதார தடைகள் இனி இருக்காது : ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி!

பொருளாதார தடைகள் இனி இருக்காது : ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி!

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா வரும் ஜூலை 23 ஆம் தேதி ஜப்பானின் தேசிய விளையாட்டு அரங்கில் தொடங்கவுள்ள நிலையில் இப் போட்டிகளில் பங்கேற்கும் பெண்களுக்கான முழு உதவியையும் அரசு செய்யும் என்றும்  பொருளாதார தடைகள் இனி இல்லாதவாறு அரசு பார்த்துக் கொள்ளும் எனவும் ஜப்பான் சென்றுள்ள தமிழக ஒலிம்பிக் வீரர்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக உரையாடினார். இதில், பவானிதேவி – வாள் சண்டை, சரத்கமல் – மேஜை பந்து, பாய்மரப் படகு – நேத்ரா குமணன், கணபதி, வருண், தொடர் ஓட்டம்-ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, தனலட்சுமி, ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், மாற்றுத் திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் – மாரியப்பன் தங்கவேலு ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்சியில் முதல்வர் பேசிய போது, “உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியில் நீங்கள் பங்கேற்க உள்ளீர்கள் என்பதை நினைக்கும்போதே எனக்கு பெருமையாக உள்ளது. நீங்கள் வெற்றிப் பதக்கங்களுடன் தமிழகம் வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உங்களில் பலருக்கும் வறுமைசூழ்ந்த வாழ்க்கையாக இருந்தாலும் விளையாட்டுப் போட்டிகள் மீது உங்களுக்கு இருந்த ஆர்வமும் உங்கள் திறமை மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையும்தான் உங்களை இந்த இடத்துக்கு அழைத்து வந்துள்ளது. ஷூ வாங்க பணமில்லாமல், உரிய ஊட்டச்சத்து உணவுகள் கூட கிடைக்காமல் சிலர் பயிற்சி பெற்று வந்துள்ளீர்கள். இத்தகைய பொருளாதார தடைகள் இனி இல்லாதவாறு அரசு பார்த்துக் கொள்ளும்.

விளையாட்டு வீரர்கள் பயிற்சிபெறத் தேவையான பொருட்கள், தரமான உணவு, உறைவிடம் உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். குறிப்பாக விளையாட்டுப்போட்டிகளில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கெடுக்கின்றனர். அவர்களுக்கான முழு உதவியையும் அரசு செய்யும்.

ஒலிம்பிக் தடகள அணியில் 26 பேரில் 5 பேர் தமிழர்கள். இது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை. அடுத்தடுத்து நடைபெறவுள்ள போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் ஏராளமாக பங்கேற்கும் சூழலை அரசு ஏற்படுத்தித் தரும்.” என்றார்

இதனிடையே வழக்கமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் ஒலிம்பிக் திருவிழா இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக கொண்டாடப்படவுள்ளது. முன்னதாக 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் டோக்கியோவில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்ததாலும், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப் ட்டுள்ளதாலும் உலகின் மிக முக்கிய பிரபலங்கள் ஆயிரம் பேர் மட்டுமே தொடக்கவிழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். ஜப்பான் பேரரசர் நரிஹிட்டோ, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

error: Content is protected !!