மோடி அமைச்சரவை மாற்றம் எதைக் குறிக்கிறது? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

பிரதமர் மோடி கடந்த இரு ஆண்டுகளாகவே எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தை செய்தே விட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாகப் பதவி ஏற்ற போது பல்வேறு துறைகளுக்கு தனி அமைச்சரே இல்லை என்பது போல இருந்தது. அத்துடன் கூடவே ராம் விலாஸ் பாஸ்வான், ஜே. பி நட்டா போன்றோர் இடத்தையும் நிரப்ப வேண்டி இருந்த நிலையில் இப்போது விரிவாக்கம் நடந்துள்ளது. காபினட் அமைச்சர்கள் உட்பட 12 அமைச்சர்கள் வெளியேறி விட்டனர். இதில் டிவிட்டருடன் மோதிய ரவிசங்கர் பிரசாத், அமைச்சரவையின் செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவ்டேகர் ஆகியோரும், மருத்துவத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனும் மிக முக்கிய பதவி விலகல்கள். இராஜஸ்தான் மாநிலத்தின் தலித் முகமான தாவர்சந்த் கெஹ்லாட் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தின் அதிசயமாக கூறப்பட்ட பிரதாப் சந்திர சாரங்கியும் வெளியேறி விட்டார்.
புதிய அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடும் நிறைவேறிவிட்டது. அஷ்வினி வைஷ்ணவ் எனும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளார். அவர் ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளைப் பெற்றுள்ளார். கட்சி மாறிய ஜோதிர் ஆதித்யா வானூர்திப் போக்குவரத்தையும், மன்சுக் மண்டாவியா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையையும், இரசாயனம் மற்றும் உரங்கள் துறையையும் பெற்றுள்ளனர். சிலருக்கு இணையமைச்சர் பொறுப்பிலிருந்து காபினட் அமைச்சராக பதவி உயர்வும் கிடைத்துள்ளது. இந்த விரிவாக்கத்தில் எதிர்பார்த்தது போலவே உத்தரபிரதேச மாநிலம் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. அங்கு அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது. மொத்த அமைச்சரவை விரிவாக்கமும் பேரவைத் தேர்தல்கள் மற்றும் 2024 ஆண்டின் மக்களவைத் தேர்தல்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி பிராந்தியம், ஜாதிய கணக்குகளையும் உட்கொண்டுதான் இந்த மாற்றம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த மூன்றாண்டுகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டே மோடி இந்த மாற்றங்களை செய்துள்ளதை புரிந்துக்கொள்ள முடிகிறது. அதற்கு கட்டியம் கூறுவது போல தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அமைச்சரானதால் முன்னாள் காவல்பணி அதிகாரி அண்ணாமலை தமிழக பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருவேளை திமுக அரசு சரியாக செயல்படாவிட்டால் 2024 மக்களவைத் தேர்தலுடன் பேரவைத் தேர்தலையும் நடத்த பாஜக திட்டமிடுகிறதோ என்றும் ஐயங்கள் எழலாம்.
பதவியிழந்தவர்களுக்கு ஏதேனும் வாரியத் தலைவர், நாடாளுமன்றக் குழுவில் பதவி என்றோ அல்லது கட்சியில் முக்கிய பதவியோ கொடுக்கப்படலாம். குறிப்பாக துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு உடல் நலமின்றி இருக்கிறார். ஒருவேளை தேவைப்பட்டால் ரவி சங்கர் பிரசாத் துணைக்குடியரசுத் தலைவராகவும் தேர்வு செய்யப்படலாம். எந்தப் பதவியும் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது ஆளுநர் பதவி, அயல்நாட்டு தூதுவர் பதவி போன்றவை. அதிருப்திகளை சமாளிக்க அவை போதும் என்றே கடந்த கால வரலாறு சுட்டுகிறது.
விரிவாக்கத்தால் அமைச்சரவையின் சராசரி வயது 58 என்று குறைந்துவிட்டது என்கிறார்கள். அந்த வயதும் ஓய்வு பெறும் வயதுதானே? ஆயினும், பாஜக 74 வயது வரையில் பதவியில் இருக்கலாம் என்று வரையறை வைத்துள்ளது. எனவே சிறந்த பங்களிப்பாளர்கள் எதிர்காலத்தில் மோடியின் இடத்திற்கு ஆயத்தம் செய்யப்படலாம். அடுத்த மூன்றாண்டுகள் இந்தியாவைப் பொறுத்து முக்கியமானவை. கொரோனா ஏற்படுத்தி இருக்கும் பொருளாதார பாதிப்புகளை சரி செய்ய வேண்டும். சீனாவினால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சந்திக்க வேண்டும். அமெரிக்கா போன்ற ’உத்தம வில்லகன்’களையும் சமாளிக்க வேண்டும். மோடியின் வாக்குறுதிப்படி இரட்டை இலக்க வளர்ச்சியை அளிக்கும் பொருளாதார திட்டங்களே தேவை. அவற்றை நிறைவேற்ற நல்லதொரு அமைச்சரவையும் தேவை. இதையொட்டியே அமைச்சரவை மாற்றத்தைப் புரிந்து கொள்கிறார்கள். பல அமைச்சர்கள் தங்கள் பணியில் கவனம் செலுத்தாததும் அவர்களை நீக்குவதற்கு காரணம் என்பதும் உண்மையே. இதுவரை பதவியில் இருந்த பிரதமர்கள் பலரும் இதைச் செய்துள்ளனர். தமிழகத்தின் டி ஆர் பாலுவிற்கு பதவி கொடுக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்தவர் மன்மோகன் சிங். மென்மையான மனிதர் என்று கருதப்பட்டவராலேயே அப்படி செய்ய முடியும் என்றால் ரிங் மாஸ்டர் மோடி ஏன் செய்ய மாட்டார்?