அருங்காட்சியகங்கள், புராதனச் சின்னங்கள் நாளை திறப்பு!

அருங்காட்சியகங்கள், புராதனச் சின்னங்கள் நாளை திறப்பு!

பூர்வமான பொருட்களை காட்சிப்படுத்தும் ஓர் இடமே அருங்காட்சியகம். அறிவியல், வரலாறு, புவியியல், பண்பாடு, கலை போன்ற பல்துறை அறிவை மனப்பாடம் செய்யாமலேயே காட்சிகளாக நம் மனதில் பதித்து விடுவதே அருங்காட்சியகத்தின் சிறப்பம்சமாகும். தற்காலத்தில் காணமுடியாத அல்லது நெருங்கி சென்று பார்க்க முடியாதவைகளை எட்டும் தூரத்திற்கு இவை கொண்டு வந்து விடுகிறது. ஆம் இத்தகைய அருங்காட்சியகங்கள் மனிதகுலத்தின் பாரம்பரியமாக கருதப்படுகின்றன. ஒரு நாடு மற்றும் சமூகத்தின் மரபுரிமைகளை பேணி பாதுகாத்து இளைய சமுதாயத்தினர் மற்றும் அடுத்தடுத்து வரும் சந்ததியினருக்கு அவர்கள் வாழும் சொந்த மண்ணின் சொந்த வரலாறு பற்றிய விழ்ப்புணர்வை தரும் அருங்காட்சியகங்கள் ஒரு தேசத்தின் விலை மதிக்க முடியாத சொத்துக்களாகவே மதிக்கப்படுகிறது. ஆனால் நம் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடையத் தொடங்கியது. அதிலிருந்து தினசரி பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியது. உயிரிழப்பும் ஆயிரக்கணக்கில் ஏற்பட்டது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தன. இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட ஏப்ரல் 15ஆம் தேதி மத்திய தொல்லியல் துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

தற்போது கொரோனா தாக்கம் குறைந்து, தினசரி பாதிப்பு 70 ஆயிரமாக உள்ளது. பாதிப்புக்கேற்றவாறு அந்தந்த மாநிலங்கள் ஊரடங்கில் தளர்வுகள் அளித்து வருகின்றன. அதன்படி, இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் வரும் 16ஆம் தேதி முதல் திறக்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை (ஜூன் 16) முதல் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்களை மக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்துக்கு வரும் பார்வையாளர்கள் நுழைவுச் சீட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட மத்திய மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.