June 1, 2023

யூ டூ கேரளா : ஷைலஜா டீச்சரும் சகாவு முடிவும்!

மீப ஆண்டுகளில், முதல்வர் பினராய் விஜயன் தவிர கேரள எல்லை கடந்து பரிச்சயமான முகம், அங்கே சுகாதார அமைச்சராக இருந்த ஷைலாஜா டீச்சர் என அறியப்படும் கே.கே. ஷைலஜா. நிபா வைரஸ் தொற்று மற்றும் கொரோனா முதல் அலையின் போது உயிரிழப்புகளைக் கட்டுக்குள் வைத்திருந்ததிலும் நிலைமைகளைக் கையாண்ட விதத்திலும் எல்லைகள் கடந்து அறியப்பட்டார். தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும்கூட கவனம் ஈர்த்தார். லண்டனிலிருந்து வெளியாகும் பிரபல இதழ் ஒன்று “2020-ம் ஆண்டின் சிறந்த சிந்தனையாளர்” என்று ஷைலஜா டீச்சரை தேர்வு செய்து கௌரவித்தது. இரண்டு வைரஸ் தொற்றுகளுக்கு எதிரான போராட்டத்தில், முன்னுதாரணத்துடன்கூடிய மருத்துவத் துறை செயல்பாடுகளைக் கட்டமைத்தார் என்ற வகையில் ஷைலஜா டீச்சர் பரலவலாகப் பாராட்டுகளைப் பெற்றார்.

தொற்று நோய் நிவாரண நிர்வாகத்தில் “கேரள மாடல்” என்று பேசப்படும் அளவுக்கு தனிப் பெருமை சேர்த்தார். இந்த முறை, சட்டப்பேரவைத் தேர்தலில் கேரளத்திலேயே அதிக வாக்கு எண்ணிக்கையில் ஷைலஜா டீச்சர் வெற்றிபெற்றார். கொரோனா இரண்டாவது அலையில், பிற மாநிலங்களைப் போல கேரளமும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அதைத் திறமையாகக் கையாள மறுபடியும் ஷைலஜா டீச்சர் சுகாதாரத் துறை அமைச்சராக வருவார் என்று எதிர்பார்த்தார்கள். பினராய் அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை. இது மாநிலத்தில் பரவலாக விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. சி.பி.எம். கட்சியின் மாநில, தேசியத் தலைமையிலும்கூட அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் பதிவாகியிருக்கின்றன.

இன்னொரு புறம், முதல்முறையாக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கண்ட, முதல்வர் பினராய் விஜயனின் மருமகன் முகமது ரியாஸ் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் பல்லாண்டுகளாக ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பணியாற்றி வருகிறார். இப்போது தேசியப் பொறுப்பில் இருக்கிறார் என்றெல்லாம் அவரது தகுதியை முன்வைக்கிறார்கள். அதேபோல, சி.பி.எம். கட்சியின் மாநிலத் தலைவரான விஜயராகவனின் மனைவி பிந்துவுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டிருக்கிறது.

தவிர, முதல்வர் பினராய் விஜயன் இந்த முறை மூன்று பெண்களுக்கு அமைச்சரவையில் இடமளித்திருக்கிறார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். எல்லாம் சரி. நாள் ஒன்றுக்கு 43,000 பேருக்கு கொரோனோ தொற்று என்ற எண்ணிக்கையைத் தொடுமளவுக்கு கேரளத்தின் நிலவரம் தீவிரமாக இருக்கிறது. இந்த நிலைமையையும் பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டாவது, ஏற்கெனவே அனுபவமிக்க ஷைலாஜா டீச்சரை மீண்டும் பினராய் பயன்படுத்தியிருக்கலாம்.

அரசியலில் பெண்களின் முன்னேற்றத்தையும் எழுச்சியையும் உரக்கப் பேசும் சி.பி.எம். இந்த வாய்ப்பை அது கருதியாவது பயன்படுத்தியிருக்கலாம். மக்கள்தான் முதன்மை என்று தொடர்ந்து பேசும் சி.பி.எம். அதே மக்கள் ஏகோபித்த ஆதரவுடன், எதிர்பார்ப்புடன் தேர்ந்தெடுத்தவரை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்திருக்கலாம். அன்றிலிருந்து இன்று வரை, இடதுசாரிகளுக்கு காப்புக் கவசம் போல, “தனிநபரைவிட அமைப்புதான் முக்கியமானது” என்ற முழக்கம் இருக்கிறது. இன்னும் “மாற்றம் ஒன்றே மாறாதது” போன்று பலவும். 1987-ல் கௌரியம்மாவை (சி.பி.எம்.மில் நீண்ட காலம் சக்தி வாயந்த தலைவராக இருந்து பின்னர் தனிக் கட்சி தொடங்கி செயல்பட்டவர்; ஒரு வாரம் முன்புதான் காலமானார்) முதல்வராக்குவோம் என்று தேர்தலுக்கு முன்பு முழங்கிவிட்டு, வெற்றிபெற்ற பின் ஈ.கே. நாயனாரை முதல்வராக்கிய கட்சி மீண்டும் அதுபோன்ற தவறைச் செய்கிறது என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.கேரளத்தைப் பார், மேற்கு வங்கத்தைப் பார், திரிபுராவைப் பார் என்று தொடர்ந்து பேசினார்கள். மற்ற இரண்டு இடங்களில் பார்த்துவிட்டோம். கேரளாவில் மட்டும்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அங்கேயும் இப்படி என்பது ஏமாற்றமளிக்கிறது.
—–

பி.கு: கலை, இலக்கிய, பண்பாட்டு மற்றும் அரசியல் தளங்களில் தமிழர்களுடன் ஒப்பிட்டு கேரளம் பற்றி “அற்புதம்” பேசுவதில் கிளர்ச்சியடையும் தமிழ்நாட்டு முன்கள அறிவுஜீவிகள் இது பற்றியும் திறந்த மனதுடன் உரையாடலாம்.

இளையபெருமாள் சுகதேவ்