காய்ச்சல், சளிக்கு பரிந்துரைக்கும் 83 மருந்துகள் தரமற்றவை!

காய்ச்சல், சளிக்கு பரிந்துரைக்கும் 83 மருந்துகள் தரமற்றவை!

நாட்டில் நாளுக்கு நாள் புதுப்புது நிறுவனங்கள் தொழில்களும் தொடங்குகின்றன. அந்த வகையில் மருந்து துறையிலும் மாத்திரை துறையிலும் ஏராளமான நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. இதற்காக இந்தியாவில் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொள்ளும். இந்த ஆய்வில் போலியானவை மற்றும் தரமற்ற மருந்து மாத்திரைகளைக் கண்டறியப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் இந்தியாவில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பல தரமற்ற மருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

உணவே மருந்து என்றிருந்த நிலை மாறி தற்போது மருந்தே உணவு என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். உண்மையில் பலரின் வாழ்க்கை மருத்து, மாத்திரைகளின் மூலமே ஓடிக்கொண்டுள்ளது. அதுபோக, சாதாரண தலைவலி, இருமல், சளி என எதுவானாலும் நேரே மருந்துக்கடைக்கு சென்று மருத்துவரின் அறிவுரை இல்லாமல் நமக்கு தெரிந்த ஒரு மாத்திரையை வாங்கி விழுங்குகிறோம். அது சரியானதா? தரமானது என்பது குறித்து யாரும் சிந்திப்பதே இல்லை.

ஆனாலும் நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து, மாத்திரைகள் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. கடந்த மாதத்தில் மட்டும் 1,487 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி, கால்சியம், ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 83 மருந்துகள் தரமற்றதாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை இமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

கண்டறியப்பட்ட மருந்துகளின் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் cdsco.gov.in என்ற இணையபக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசிய மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள தெரிவித்துள்ளனர்.

Related Posts