அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

நாற்பத்தைந்து நாட்கள் ஆகி, நேற்று பழனிசாமி அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

அரசுப்பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர்க்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த மசோதா தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திற்கும் மேலாகியும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்தார். இதனால் தமிழக முதல்வர், அமைச்சர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகள் இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இதனிடையே சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்ட மசோதாவை அடிப்படையாக கொண்டு, நேற்று மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இது ஆசிரியர்கள், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரிடையேயும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சுமார் ஒன்றரை மாதத்திற்கு பிறகு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் வழக்கறிஞரிடம் மசோதா குறித்து கருத்து கேட்கப்பட்டு இருந்ததாகவும், அதற்கான பதில் தற்போதுதான் கிடைத்தது எனவும் விளக்கமளிக்கப் பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால் மருத்துவப் படிப்புக்காக கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது சரி.. இதனால் என்ன, யாருக்கு, எப்படி பயன்?

7.5% இட ஒதுக்கீடு மசோதா ஒப்புதல் பெற்றுள்ளதால் , கிட்டதட்ட 300 அரசுப் பள்ளி மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்று கூறப்படுகிறது. நீட் தேர்வு 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. அதில் 113 மதிப்பெண்கள் எடுத்தால் பாஸ். ஆனால் அந்த பாஸ் மதிப்பெண் பெற்றால் மட்டும் மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்துவிடாது. பாஸ் மார்க் பெற்றவர்கள், மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க மட்டுமே தகுதி பெறுகிறார்கள். அதன்பிறகு 12-ம் வகுப்பில் எடுத்த கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் தான் சீட் கிடைப்பதெல்லாம் முடிவு செய்யப்படும். ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு கட்-ஆஃப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தான் சீட் கிடைக்கும். அரசுப்பள்ளி மாணவர்கள் படித்த பாடத்திட்டமும், நீட் தேர்வு பாடத்திட்டமும் வேறு. இந்த ஆண்டு நீட் தேர்வில், அரசுப் பள்ளி மாணவர்கள் தரவரிசையில் இந்திய அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றார் தமிழக மாணவர் ஜீவித் குமார். ஆனால் இவர் கடந்த ஆண்டே 12-ம் வகுப்பை முடித்து நீட் தேர்வை எதிர்கொண்டுள்ளார். ஆனால் அப்போது இவரால் போதிய மதிப்பெண் பெற முடியவில்லை. அதன்பிறகு இவரை ஆசிரியர்கள் சேர்ந்து தனியார் நீட் கோச்சிங் சென்டரில் சேர்த்து படிக்க வைத்துள்ளனர். ஜீவித் குமார் ஓராண்டு காலம் கடுமையாக படித்து 667 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்தாலும், இந்திய அளவில் பொதுப்பிரிவில் 1,823-வது இடம் பிடித்துள்ளார்.

இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில் 89 பேர் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது உள்ள நடைமுறைப்படி பார்த்தால், இவர்களில் 8 பேர் வரை மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும். இந்த 8 பேருக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைப்பதும் சந்தேகம் தான். ஆனால் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள சட்ட மசோதாவால், இப்போது 303 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க சீட் கிடைக்கும். இதனால் பல ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேறும்.

Related Posts

error: Content is protected !!