June 7, 2023

ஒரு கடைநிலைக் காவலரால் இப்படி பேச முடிகிறது என்றால் யார் அளிக்கும் தைரியம்?

என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?

சில முகநூல் பதிவுகளில் அந்தச் செய்தியை பார்த்ததும், நம்ப முடியாமல் உயர்நீதிமன்ற தளத்தில் சம்பந்தப்பட்ட உத்தரவை தேடினேன். கிடைக்கவில்லை என்றதும் சில பதிவுகளில் ‘பொய் செய்தி’ என்று தெரிவித்தேன். தொடர்ந்து உண்மையான செய்திதான், என்று அறியத் தெரிந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.

மக்களின் கொந்தளிப்பிலும், உயர் நீதிமன்ற நடவடிக்கைகளிலும் சாத்தான்குள காவலர்கள் தற்போது பயந்து போய் நடுங்கிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்து வந்தேன். அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது பரிதாபம் கூட கொண்டேன்.

ஆனால் நேற்று காவல்நிலைய ஆவணங்களைக் கைப்பற்ற நீதிமன்ற ஆணையராக அனுப்பப் பட்ட மாஜிஸ்டிரேட்டிடம் அங்கிருந்த கான்ஸ்டபிள், ‘உன்னால ஒன்னும் புடுங்க முடியாது’ என்று கூறியிருக்கிறார். அதுவும் தூத்துக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டண்ட், துணை போலீஸ் சூப்பிரண்டண்ட் முன்னிலையில் ஆய்வு நடக்கையில்.

ஒரு மாஜிஸ்டிரேட்டைப் பார்த்து, அதுவும் உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் அனுப்பப்பட்ட மாஜிஸ்டிரேட்டைப் பார்த்து, அதுவும் அந்தக் காவல் நிலையத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் கொந்தளித்துப் பொங்கியுள்ள சூழ்நிலையில் ஒரு கடைநிலைக் காவலரால் இப்படிப் பேச முடிகிறது என்றால் யார் அளிக்கும் தைரியம்?

உயர்நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் அதன் உத்தரவுபடி அனுப்பப்பட்ட மாஜிஸ்டிரேட் என்பதால், அந்த வார்த்தைகள் உயர் நீதிமன்றத்தைப் பார்த்து கூறப்பட்ட வார்த்தைகள் என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும்.

முதல் நாள் விசாரணையிலேயே, நடந்த கொலைகளுக்கு தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டண்டை வலதும் இடதும் வாங்காமல், மென்மையான வார்த்தைகளில் சீராட்டிப் பாராட்டிய நீதிபதிகளின் கனிவு, இன்று உயர் நீதிமன்றத்தின் மாண்பை கசக்கி தூக்கி எறியப்பட்ட கந்தல் போல காற்றில் பறக்க வைத்துள்ளது.

மூவரும் நாளை நீதிமன்றத்தின் முன் வர அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதிகாரிகள் ‘கான்ஸ்டபிள் கூறியது எங்களுக்குத் தெரியாது’ என்று தப்பிக்க முயல்வார்கள். அதை ஏற்றுக் கொண்டு அவர்களை விடுவித்தால், சாதாரண மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதான மொத்த நம்பிக்கையும் அற்றுப் போகும்.

எதனால் உயர் நீதிமன்றத்தை அதுவும் மாஜிஸ்டிரேட் முன்னிலையில் ‘ஒன்னும் புடுங்க முடியாது’ என்று கூற தைரியம் வருகிறது?

வழக்கு நாளைதான் விசாரணைக்கு போடப்பட்டிருந்தது. ‘சிபிஐ’க்கு வழக்கை அனுப்ப அரசு முடிவெடுத்துள்ளது என்பதை தெரிவிக்க இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீதிமன்றம் முதலில் கேட்டிருக்க வேண்டிய கேள்வி, ‘கொலைக்கான எப் ஐ ஆர் போடவில்லை, பின் எதற்கு சி பி ஐ?” என்பதைத்தான்.

ஜெயராஜ் பெனிக்ஸ் தரையில் புரண்ட எப் ஐ ஆர் என்றால், அந்த இருவரும் இறந்து விட்ட நிலையில், மேனாள் நீதிபதி சந்துரு கூறுவது போல முடிவுக்கு வந்து விட்டது.

சி பி ஐக்கு அனுப்ப அரசு முடிவெடுத்துவிட்டது என்றால், இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கு என்றுதான் அர்த்தம். கொலை வழக்கு என்றால் சந்தேக மரணம் அதற்கான எப் ஐ ஆராக மாற்றப்பட வேண்டும். கொலையில் சந்தேகிக்கப்படும் நபர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், விசாரணை நடத்தப்பட வேண்டும். இவை எப்போது நடக்கும் என்ற எந்தக் கேள்வியும் இல்லை

மாறாக வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கப் போகிறது என்ற உத்தரவிட்ட பின்னர் விசாரணை ஏஜன்ஸி அல்லது தான் விரும்பும் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க கூட உயர் நீதிமன்றம் அதிகாரம் கொண்டுள்ளது. பின்னர் ஏன் அவசரமாக சிபிஐ, கைதுகளை தாமதப்படுத்தவா?

மேற்கண்ட கேள்விகள் உயர் நீதிமன்றத்திலிருந்து வரவில்லை என்ற தைரியம்தான், இன்று ஒரு கான்ஸ்டபிளை வைத்து, ‘ஒன்னும் புடுங்க முடியாது’ என்று உயர்நீதிமன்றத்தைப் பார்த்து கூற முடிந்திருக்கிறது…

இப்படி எல்லாம் நடக்க முடியும் என்பதை இன்னமும் நம்ப முடியாமல்தான் இன்று இரவு கசிந்து கொண்டிருக்கிறது.

நாளையாவது விடியட்டும்…

நன்றி…

Prabhu Rajadurai