பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 6–ந்தேதி வெளியாகும்!
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 24–ந்தேதி முடிந்தது. அன்றைய தினம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அந்த நாளில் நடந்த தேர்வுகளில் மட்டும் 36 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு மட்டும் பின்னர் மறு தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேர்வு எழுதிய மாணவர்களுக்கான விடைத்தாள்கள் மே 27–ந்தேதி முதல் திருத்தப்பட்டன. அனைத்து மையங்களிலும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இம்மாதம் 10ம் தேதியுடன் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தம் பணிகளை முடித்தனர்.
இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் மதிப்பெண் கணக்கீடு, மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு மற்றும் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் ஜூலை 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட தமிழக பள்ளி கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளும் துவங்கியுள்ளன.
மாணவர்களுக்கு ‘ரேங்க்’ பட்டியல் எதுவுமின்றி அவரவர் அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக முடிவுகள் அனுப்பப்பட உள்ளன. மேலும் மாணவர்களே நேரடியாக ஆன்லைனில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யவும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியே மதிப்பெண் பட்டியல் நகலை பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மார்ச் 24–ந்தேதி நடந்த தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் மறுதேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு ஏற்கனவே எழுதிய பாடங்களுக்கான முடிவுகள் மட்டும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.