குஜராத் குடிசைகளை மறைக்க எழும் பெரும் சுவர்- இதெல்லாம் ட்ரம்ப் விசிட்டில் சகஜமப்பா!

குஜராத் குடிசைகளை மறைக்க எழும் பெரும் சுவர்-  இதெல்லாம் ட்ரம்ப் விசிட்டில் சகஜமப்பா!

இம்மாத கடைசியில் இந்தியா வர இருக்கும் ட்ரம்பை வரவேற்க குஜராத்தில் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக விமான நிலையத்தில் இருந்து மைதானம் வரை செல்லும் வழி அழகுப்படுத்தப்படுகின்றன. அந்தவழியில் உள்ள குடிசைப் பகுதிகளை மறைத்து அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பப்படுகிறது. இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் சுவர்கள் எழுப்பப்பட்டு உடனடியாக இந்தியாவின் வறுமையை ஒழித்துவிடுகிறார்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தொலைபேசியில் உரையாடினர். இந்த சூழலில், இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர் என வெள்ளை மாளிகை தரப்பில் அறிவிப்பு வெளியானது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு ட்ரம்ப் செல்ல உள்ளார்.

இந்நிலையில், அகமதாபாத்தின் இந்திரா பாலத்தில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வரை உள்ள பகுதியில் சாலையுடன் சேர்த்து தடுப்புச் சுவர் கட்டும் பணியில் அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் ஈடுபட்டுள்ளது. 6 முதல் 8 ஆதி உயரத்தில் எழுப்பப்படும் இந்த சுவர்கள் சாலையில் இருந்து குடிசை பகுதிகள் தெரியாத வண்ணம் கட்டப்படுகின்றன. சுமார் அரை கிலோமீட்டர் நீளத்திற்கு கட்டப்படும் இந்த சுவர் அமையும் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடிசைகளில் 2500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதேபோன்று 2017 ஆம் ஆண்டு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேவும் அவருடைய மனைவி அக்கி அபேவும் இந்தியா வந்தபோது இதே போன்று குஜராத்தை அழகாக்கும் பணிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.