ஐ.நா. மேடையில் 6 வயது இந்தியச் சிறுமி ரூஹி மொஹசப் வரலாற்றுச் சாதனை!
சாதனைக்கு வயது ஒரு தடையல்ல என்பதை உலக நாடுகளுக்கு உரக்கச் சொல்லியிருக்கிறார் இந்தியாவின் ஒரு சுட்டிப் பெண். ஐக்கிய நாடுகள் சபையின் மேடையில், உலக நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நம் நாட்டின் 6 வயது சிறுமி நிகழ்த்திய அந்த வரலாற்றுச் சாதனை குறித்த பெருமிதமான ரிப்போர்ட் இதோ:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது வெறும் வார்த்தையல்ல, அது ஒவ்வொரு மனிதனின் கடமை என்பதைத் தனது மழலை மாறாதக் குரலில் உலகிற்குப் புரிய வைத்திருக்கிறார் ரூஹி மொஹசப். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியாவின் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் புரிந்த சாதனை இந்தியாவிற்கே ஒரு வரலாற்றுத் தருணமாக அமைந்துள்ளது.

ஐ.நா. மேடையில் முதலாம் வகுப்பு மாணவி
காமன் கிரவுண்ட் இன்டர்நேஷனல் அகாடமி பள்ளியில் முதலாம் வகுப்பு பயின்று வரும் 6 வயதேயான ரூஹி மொஹசப், யுனெஸ்கோ (UNESCO) தலைமையிலான 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேச கல்வி மாநாட்டில் (GCE 2026) முக்கிய உரையாளராக (Keynote Speaker) பங்கேற்றார். பாங்காக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்கள் முன்னிலையில் ரூஹி ஆற்றிய உரை அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
எஸ்டிஜி இம்பாக்ட் அவார்டு (SDG Impact Award)
காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வில் ரூஹியின் பங்களிப்பைப் பாராட்டி, பூடான் நாட்டின் கல்வியமைச்சர் திரு. யீசாங் டீ தாப்பா அவருக்கு ‘SDG Impact Award’ எனும் உயரிய விருதை வழங்கி கௌரவித்தார். “குழந்தைகள் நாளைய எதிர்காலம் மட்டுமல்லர்; இன்றைய பூமித் தாயின் காவலர்களும் ஆவர்” என்று ரூஹி முழங்கியபோது அந்த அரங்கமே அதிரும் வகையில் கைதட்டல்கள் எழுந்தன.
இந்தியாவின் முதல் இளம் சாதனையாளர்
யுனெஸ்கோ தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் ரூஹியின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைப் பாராட்டியுள்ளது. இதன் மூலம், யுனெஸ்கோ தலைமையிலான உலகளாவிய அரங்கில் கௌரவிக்கப்பட்ட இந்தியாவின் மிக இளம் வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற வரலாற்றுப் பெருமையை ரூஹி மொஹசப் பெற்றுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு (Calicut) பகுதியில் உள்ள ‘காமன் கிரவுண்ட் இன்டர்நேஷனல் அகாடமி’ (Common Ground International Academy) பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை அப்துல் கனி மற்றும் தாய் டாக்டர் அனிசா முகமது ஆகியோரின் ஆதரவுடன், மிகச்சிறிய வயதிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகப் பல முன்னெடுப்புகளை இவர் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தைரியத்திற்கும் தலைமைத்துவத்திற்கும் வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ள இந்தச் சிறுமியின் சாதனை, இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது.


